May 16, 2006

நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்!

எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள் என்று சென்ற பதிவின் பின்னூட்டத்தில் ஆத்மாநாம்(?!) சொல்லியிருந்தார். அவரது 'சும்மாவுக்காக ஒரு கவிதை'.


சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்.
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசியப் பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம் யாருக்கும் உண்டு. நேரடியாக அந்தரங்கம் அறிந்து கொள்ள சங்கடம்தான். சுற்றி வளைக்கும் கேள்விகள் மூலமாக வெற்றி பெறுவது பலருக்கும் கை வந்த கலையாக இருக்கிறது.

எதிர்ப்படும் கேள்விகளை சந்திப்பதே பெரிய கொடுமையாக உணர்ந்திருக்கிறேன். சம்பளம், ஜாதி போன்றவற்றை அறிந்து கொள்ள நாசூக்கான பல கேள்விகள் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கின்றன. தவிர்த்து விடும்படியான பதில் இல்லாத அந்த வினாக்களுக்கான பதில்களை தந்தே ஆக வேண்டும்.வேறு உருவம் தரித்து தனக்கான நோக்கத்தினை புதைத்து திரியும் அந்த வினாக்களுக்கான, தனது எதிர்ப்பாக இந்தக் கவிதையை புரிந்து கொள்கிறேன்.

சற்றேறக்குறைய பேச்சு வழ்க்காக வருவதை நம்மிடம் சொல்லும், இந்தக் கவிதையில்,தேவையற்ற சொற்கள் அல்லது ஒபனையில்லாத அம்சமே மிகப் பிடித்ததாயிருக்கிறது.


காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


இதனை ஒரு கணக் காட்சியாக மட்டுமே என்னால் என்னால் பார்க்க முடியவில்லை. சில முரண்களியும் பார்க்க முடிகிறது."முதலில் நீதான் என்னைக் கண்டுகொண்டாய்" உறுதிபடச் சொல்கிறார் அடுத்த வரியில்"எனக்குத் தெரியாது" என்கிறார். ஆனால் இது நம் பேச்சு வழக்கில் இயல்பாக வரும்.
"நீ First பார்த்தது எனக்கு தெரியலை" என்று சொல்லும் போது யாரும் அதில் இருக்கும் முரணை யோசித்துப் பார்ப்பதில்லை.
அல்லது பிறிதொரு சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளே இதனை சொல்லி இருக்கக் கூடும்.

"எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்" இந்த வரிகளும் அதனைத் தொடர்ந்து வரும் வரிகளும் முரணானவை என்ற போதும் இயல்பாக இருப்பதாகவே உணர்கிறேன்.

கூட்டத்தில் அனைவருக்குமே உடலில் உயிர் இருக்கும். ஆனால் முகத்தில் உயிர்(களை) இருக்க வேண்டும் என அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. அவளின்/அவனின் முகம மட்டுமே உயிர் இருப்பதாக படுவது காதலன்/காதலிக்கு சாதரணமான விஷயம்.

மாமன் மட்டுமல்ல வேறு யாரும் இடம் பெயர்க்கக் கூடும். இது அந்த கணத்தில் மட்டுமல்ல, எப்போது வேண்டுமானலும் நிகழலாம். அது நிரந்தரமாகக் கூட.

சிறு சிறு குறிப்புகளில் வாழ்க்கையின் உண்மைக்கூறுகளை எந்த வித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் கவிதையில் கொணர்வது, மிகபெரிய தவம். அது ஆத்மாநாமிடம் இருக்கிறது.

ஆத்மாநாம் குறித்து அசோகமித்திரன் எழுதிய சிறு குறிப்பு.('சில ஆசிரியர்கள் சில நூல்கள்' என்னும் தொகுப்பிலிருந்து).

தெரிந்தவரைப் பற்றி நல்லது கெட்டது யார் சொன்னாலும் அர்த்தமாகிறது. இல்லாது போனால் எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே போய் விடுகிறது.

'ஆத்மாநாம்' என்று அழைக்கப்பட்ட 33 வயது மதுசூதனன் பற்றி இங்கு சொல்லத் தொடங்கும்போது இந்த எண்ணம்தான் தோன்றுகிறது.

அவரைப் பற்றி நல்லது நினைக்கவும் கூறவும் நிறையவே இருக்கிறது. அவரைத் தெரிந்தவர்களுக்கும் அவருடைய கவிதைகளைப் படித்தவர்களுக்கும் ....

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்பது பரபரப்பே பொருளாகுபவர்களுக்குச் சில நிமிடங்களுக்குப் பயன்படும். ஆனால் இன்றோ என்றோ அவருடைய கவிதைத் தொகுப்பான 'காகிதத்தில் ஒரு கோடு' (ழ வெளியீடு, 39 ஈசுவரதாஸ் லாலா தெரு, சென்னை 600 005) நூலை எடுத்துப் புதிதாக யாராவது படிக்கக் கூடுமானால் அவர்கள் சிறிது நேரமாவது ஆழ்ந்த மெளனத்தை அனுபவிக்க நேரும்.

நான் ஆத்மாநாமை முதலில் சந்தித்தபோது அவர் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கவில்லை.

இளைஞர்கள் படிப்பை முடிக்காத நிலையில் சிறு பத்திரிகைகளிடம் ஈர்க்கப்படுவது குறித்து எனக்குக் கவலை உண்டு. பெருவாரிப் பத்திரிகைகளை நாடிப் போகிறவர்கள் இருபது வயதானாலும் அறுபது வயதானாலும் லெளகீக அம்சங்களில் சமர்த்தர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்தின் வெற்றியே இந்தச் சமர்த்தின் ஒரு வெளிப்பாடுதான், எழுத்தில் யதார்த்தத்தை வலியுறுத்தும் சிறு பத்திரிகைக்காரர்கள் உலகாயத விஷயங்களில் கற்பனாவாதிகளாக இருந்து விடுகிறார்கள்.

ஆத்மாநாமின் ஆர்வத்தை நான் அதைரியப்படுத்தவில்லை. ஆனால் ஓர் இளைஞன் மீது இன்றைய சமூகம் கொள்ளும் எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவருக்கு நான் புதிதாக ஏதும் சொல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்குப் புரியாத வாழ்க்கைச் சிக்கல் என்று ஒன்று கிடையாது.

இயல்பாகவே பரந்த அறிவும், பக்குவமும், முதிர்ச்சியும் அவரிடம் அந்த நாள்களிலிருந்தே இருந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை அவருடைய கவிதைகளுக்கும் அதுவே அடி நாதமாகவும் இருந்திருக்கிறது.

அவர் காலத்தில் ஆத்மாநாம் கவிதைகள் தீவிர வாதப் பிரதிவாதங்களை உண்டு பண்ணவில்லை. ஆனால் அவரைப் படித்தவர்கள் அவர் மீது கூர்ந்த கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அவர் மறைவுக்குப் பின் சென்னையில் கூடிய இரங்கல் கூட்டத்தில் பலதரப்பட்டவர்கள் பேசினார்கள்.

ஒரு மிகைச் சொல், ஒரு hyperpole எழவில்லை. பேசப்பட்ட பொருள், வடிவத்திற்கு அவ்வளவு நேர்த்தியை அளித்தது. சுமார் ஓராண்டுக்கு முன் நடந்த இன்னோர் இலக்கியவாதியின் இரங்கல் கூட்டம் நினைவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தினால் இலக்கிய தேவிக்கு ஜலதோஷமே பிடித்துக் கொண்டிருக்கும் என்று ஓர் அன்பர் கருதினார்.

ஆத்மாநாமை அபிலாஷைகளற்றவராகக் கருதுபவர்கள் உண்டு.

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி.

('தரிசனம்')

பிரபஞ்ச இயக்கத்தில் சமன்பாடு நிலையை உள்ளுணர்வில் ஒரு சமயமாவது கண்டு கொண்டவர்களுக்குத்தான் இந்தத் தெளிவும் எளிமையும் கொண்ட மனநிலை சாத்தியம்.

ஒரு துண்டு புதிதாகத் தைக்கப்பட்ட குழந்தைகள் உடுப்புக்களைப் பார்த்து "இவற்றை அணியும் குழந்தைகள்தான் எவ்வளவு மகிழ்ச்சியடையும்? அந்த மகிழ்ச்சிக்குரிய கலைப் பொருளாகத்தானே இவை இருக்க வேண்டும்!" என்று கூறியிருக்கிறார். ஒரு துணிக் கட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தைகளை யாரால் உருவகப்படுத்திக் கொள்ள முடியும்?

அவருடைய இருபதாவது வயதில் எழுதிய ஒரு கவிதை :

குருட்டுக் கண்களைத்
திறந்து பார்த்தால்
இருட்டுதான்
பிரகாசமாய்த் தெரிகிறது.
செவிட்டுச் செவிகளைக்
கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான்
கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை
நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம்
சுகந்தமாய் இருக்கிறது.
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறிய பின்.

இதற்கு 'இரவில் பேய்கள்' என்று தலைப்பிட்டிருந்தார். ஆனால் இவை காரைக்கால் அம்மையார் ஆகிருதி பெற்ற பேய்களாக இருக்க வேண்டும்.

இருபத்துநான்கு இதழ்கள் 'ழ' என்றதொரு கவிதை பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

ஆத்மாநாம் அற்பாயுளில் மறைந்தது பலருக்குப் பெரும் துக்கம் விளைவித்திருக்கும்.

செய்தி கேட்டபோது நானும் ஐயையோ என்றுதான் கத்தி விட்டேன்.

அவர் மறைந்து சில வாரங்களுக்குப் பிறகு இப்போது நினைத்துப் பார்த்தால் இப்படியும் தோன்றுகிறது. இவ்வளவு சின்ன வயதில் தற்காலத் தமிழைக் கொண்டு இவ்வளவு முதிர்ந்த ஆன்மிக வெளிப்பாடை இவ்வளவு இயல்பாகக் கவிதை புனைய முடியுமானால் அந்தக் கவிஞனுக்குப் படைப்பின் ஒருமைதான் எவ்வளவு முறை தரிசனமாகக் கிடைத்திருக்க வேண்டும்? இது எவ்வளவு பேருக்கு நேருகிறது?