May 27, 2006

ஈழத்தமிழா நீ வேறு வழி பார்!

ஈழப் பிரச்சினை எப்போதுமே ஒரு தேசத்தின் உள்விவகாரமாகவே உலகச் சமுதாயத்திற்குப் தெரிவது வேதனை. தெரியப்பட வைக்கிறது.

மிதிபடும் தமிழனின் குரல்வளைச் சத்தம் திறமையாக நசுக்கப்படுகிறது. தனது சகோதரன் தாக்கப்படும் போதும், சகோதரி கொடுமைப்படுத்தப்படும் போதும் தடுக்க முயல்பவனின் கர ஒலி மட்டுமே இந்த சமுதாயத்திற்கு துப்பாக்கி சத்தமாகப்படுகிறது. வலுத்தவனுக்கு வகுக்கப் படும் சட்டம், இளைத்தவனுக்கு வேறு வடிவம் பெறுகிறது. உரக்கக் கத்துபவன் நல்லவன் ஆகிறான். தாக்கியும் விட்டு ஊளையிடுபவன் அப்பாவி ஆகிறான்.

இந்தியாவில் நடக்கும் 'ஈழ அரசியல்' வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுதல் மட்டுமில்லை-பெட்ரோல் விட்டு நெருப்பூட்டும் செயல்.

ஈழம் பிரிந்தால், தமிழகம் பிரியுமாம். மடத்தனத்தின் முனை மழுங்கிய இந்தக் கூற்று, கூரானதாகவே காட்டப்படுகிறது. இரண்டு பகுதிகளின் அரசியல் சூழலையும் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்பதுதான் புரியாத விஷயம்.

தமிழகத்தில் எந்தத் தமிழன் தாக்கப் படுகிறான். அவனது உரிமைக்கு என்ன பங்கம் வந்து விட்டது? எந்தக் காரணத்தைக் கரத்தில் எடுத்து தனித் தேசம் கேட்பான்? டெல்லியின் அரசியல் 'வித்தகர்களுக்கும்', அதிகாரவர்க்கத்தின் 'சாண்க்கியர்களு'க்கும்தான் வெளிச்சம்.

டெல்லியின் ஏ.சி அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் 'ஹைடெக்' அரசியல்வாதிக்கு, ஈழத்தமிழன் சிந்தும் குருதியின் வாசம் எப்படித் தெரியும்?

தலைநகரில் உண்ணாவிரதம் இருக்கும் 'மேதா பட்கர்' தெரியுமே தவிர, பனிக்காற்று குளிரும் என எண்ணி, பாலீத்தின் பையால் முகம் மறைக்க, மூச்சடைத்து இறந்து போன பிள்ளைக்கு நடுக்கடலில் ஈமச் சடங்கு செய்யும் தமிழச்சியின் ஓங்காரம் எப்படி செவியில் விழும்?

அமீர்கான் படம் வெளியாவது தடுக்கப் பட்டால் அது செய்தி - ஊடகங்களுக்கு . நடுக்கடலில் ஜலசமாதியாகும் குடும்பம் மீனுக்கு இரை என்பதனைத் தவிர வேறென்ன இருக்கிறது.

அர்ஜூன் சிங்கின் கொடும்பாவி எரிய- அதைத் தடுப்பதனை விட்டு விட்டு எவனின் வயிரெறிந்தால் எமக்கென்ன?

இரான் பற்றி பேசினால் அமெரிக்கா ஊற்றும் எண்ணெய்ப் பிச்சை. உன்னைப் பற்றி பேசினால்?

பாலஸ்தீனத்தில் போனால் மனித உயிர். அடச்சீ! இலங்கையில் போனால் வெறும் மயிர்.

அழுடா தமிழா! அழு! தொண்டை வற்றி இரத்தம் தெறிக்கும் வரை அழு! அடுத்தவன் அடிப்பான் வாங்கிக் கொள்! உன் வம்சம் சாம்பலாகும் வரை பொறுமை காத்தால் என் சமூகம் முடிவெடுக்கும். நீ பொறுமையானவன், நல்லவன் என்று.

அது வரை அழு!உன் சகோதரியையும், தாயினையும் தாரை வார்த்து அழு! உடன் பிறந்தவன் பொசுங்கிப் போக, நீ செத்துச் சுண்ணாம்பாகும் வரை அழு. அழுதழுதே பிணமானால் கடலினுள் விழு. மீன் அரித்து தின்னட்டும். எங்களுக்கு எங்கள் பணிதான் முக்கியம்.

உனக்காக இங்கே ஒருவன் கண்­ணீர்த்துளியொன்றை அடுத்தவனுக்கு தெரியாமல் சிந்தினால்- தீர்மானிப்போம். அவன் துரோகியென்று.