May 18, 2006

செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்

கல்யாண்ஜியின் இந்த வரிகள் ஈர்ப்பதற்காக மட்டுமில்லை.

(1)
ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.


எல்லோரும் ஏதாவது ஒரு கணத்தில் மிக கொடூரமானவர்களாக செயல் பட்டிருப்போம். மனிதத் தன்மை மீறப்படும் போது அதன் கோரத்தை இளப்பமானவர்களிடம் காண்பித்திருப்போம்.

இந்தக் கவிதை நமது மிருகத் தனமையை நினைவுபடுத்துவதாக அமைகிறது.

'சேடிஸ' மனப்பான்மையைக் கவிதையில் உணரமுடிகிறது என்னால். எந்தக் கொடூரத்திலும் மெல்லிய சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி ஒரு நிலையில் மட்டுமே அந்தக் காரியத்தை செய்ய முனைவு வரும்.

ஓனாணை அடித்து, முள் குத்தி, சிறுநீர் கழித்து துரத்துவதிலிருந்து, மனிதனைக் கொலை செய்வது வரை.

அதனையேதான் கவிதைசொல்லி ஒரு கம்பளியிடம் செய்திருக்கிறார்.

நினைவுகளைக் கீறிவிடும் கவிதை இது. ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு-ஆனால் ஒரே கவிதை கொணர்கிறது.

(2)
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.


இது சொல்லவரும் கருத்தை விட, ஒரு காட்சியினைக் எளிதாக கொண்டு வந்துவிடுகிறது. எந்த வித பூசி மொழுகலும் வார்த்தை விளையாட்டுக்களுமின்றி. காட்சிகளை கவிதையில் கொண்டுவர வேண்டும் என்பதனை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் எனக்கு இந்தக் கவிதை பிடிக்கத் தான் செய்யும்.

காட்சியின் பின் புலத்தில் வேறு சிந்தனைகளும் முளை விட வேண்டும். அது கவிதையின் அழகு. இந்தக் கவிதையில் எனக்கு,மறைந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம், அம்மா கோலம் போடும் போது பக்கத்து வீட்டு சித்தியின் கோலத்தை ஒப்பிடுவது என பலதும் ஞாபகத்திற்கு வருகிறது.

(3)
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.


மனைவி, கணவனின் அனைத்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறாள். ஆணாதிக்கம் மிகுத்து ஒரு சீப்பு காணவில்லை என்பதற்காக கூட கண்ணாடியை உடைக்கிறான். அத்தனை கோபத்தையும் உறிஞ்சி எடுக்கும் முககம் அவளுடையது.

விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை...
எல்லோரும் அமிலத்தை சுமந்து கொண்டுதானே திரிகிறோம்? வார்த்தைகளில் நெருப்பினை பற்ற வைத்துக் கொண்டு.

அத்தனைக்கும் அடங்கிப் போக வேண்டும் அவள். வஞ்சகம் நெஞ்சு முழுவதுமாக விரவிக் கிடக்கிறது அவனுக்கு.

ஊருக்குள் நல்ல பிள்ளை, உத்தமன்.

கவிதையை இன்னொரு முறை படியுங்கள்.சாதரணமாக நம் சமூகத்தில் உலவும் முகம் வந்துவிடுகிறது.நம்மையே கூட கொண்டு வரக்கூடும்.