May 11, 2006

எதைத் திறந்தால் என்ன கிடைக்கும்

நகுலனின் கவிதைகள் முற்றிலும் வேறு உலகம். என்னால் அவ்வளவு சுலபமாக புரிந்துகொள்ள இயலுவதில்லை. சில கவிதைகள் மிக எளிமையாக இருப்பது போல தோன்றுகிறது. இதற்கு எதற்கு ஒரு கவிதை வடிவம் என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஆனால் அவை மிக ஆழமானவையாக இருக்கின்றன.

நகுலனின் கவிதைகளில் நாம் யோசித்த அல்லது பிறரோடு விவாதித்த விஷயங்களைக் காண முடிகிறது.


1.வேறு

உலகச்சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்

உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்

விஷயம் வேறு


2.சிலர்

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.

3.அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

4.தேடல்.

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.


இந்த நான்கு கவிதைகளையுமே சுருதி என்னும் தொகுப்பில் இருந்து எடுத்தேன். மிக சாதாரண விஷயங்கள். அவைகளை எளிதாக கவிதைக்குள் புகுத்தி இருக்கிறார்.

நகுலன் பயமூட்டக் கூடிய பிரதேசங்களை தன் கவிதைகளுக்குள் வைப்பார் என்று படித்திருக்கிறேன்.

நகுலனின் கவிதைகள் குறித்து குறிப்பு எழுத பயமாக இருக்கிறது.
நான் குறிப்பெழுதி அது தவறாக இருக்குமோ என்னும் அச்ச உணர்வு உள்ளூர தொற்றிக் கிடக்கிறது.

மேற்குறிப்பிட்ட நான்கு கவிதைகளிலுமே புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. ஆனால் அதன் பரப்பு வித்தியாசமானது. நுட்பமானது.

இந்தக் கவிதை மிக பிடித்த ஒன்று.

'ராமச்சந்திரனா என்றேன்
ராமசந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவில்லை
அவர் கூறவுமில்லை '


இதில் என்ன இருக்கிறது?

முதலில் படிக்கும் போது வேகமக படித்து விட்டேன். பிறிதொரு சமயம், எதனையோ நினைத்துக் கொண்டிருந்தபோது அதன் ஆழம் உறைத்தது.

உலகின் உறவுகள் யாவும் மேகத்தைப் போல விரவிகிடக்கின்றன. எதேனும் ஒரு கணம் இரு மேகங்கள் போல சந்திக்கிறோம். சில காலம் சேர்ந்து இருக்கிறோம். பின்னர் உனது மேகத்தில் இருக்கும் கொஞ்சம் உறவினை எடுத்துக் கொண்டு என் உறவைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறோம். எந்த மேகத்தின் எந்தப் பகுதி இறுதிவரை நம்மோடு ஒட்டி இருக்கும் என்பது ஆழமான கிணற்றில் சலனமின்றிக் கிடக்கும் கல்லினைப் போன்றதொரு கேள்வி.

எத்தனையோ ராமச்சந்திரன் நமக்கு அறிமுகம் ஆகி இருக்கலாம். ஆழமான உறவும் இருந்திருக்கும். அந்தக் கால கட்டத்தில்- அது முக்கியமான உறவு. காலம் கடந்த பின்னர், இது சின்ன அறிமுகம். அவ்வளவே.

என்னை சுற்றி கிளை படர்த்தி இருக்கும் பிரச்சினைகள் எனக்கும், ராமச்சந்திரனின் பிரசினைகள் அவருக்கும். அதில் இந்த பழைய உறவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் அற்றுப் போகிறது.

இந்தக் கவிதை எத்தனை கேள்விகளையும் எத்தனை குற்ற உணர்வுகளையும் நமக்குள் மீட்டுகிறது?

உறவுகள் யாவும் ஒரு தேவையின் அடிப்படையிலேயே உருவாகின்றன. நிலைக்கின்றன. தேவைகளும் காலமும் மாறிவிடும் போது பழைய காலத்தைத் திரும்பிப் பார்க்க கூட நாம் விரும்புவதில்லை.

ஏதோ கலாச்சார புள்ளியாக ஒட்டிக் கிடக்கும் ஏதோ ஒரு உணர்வு மட்டும் அடிக்கடி அவற்றை நினைவூட்டுகிறது.அது மனிதாபிமானமாக இருக்கலாம் அல்லது வேறு ஒன்று நம் மூதாதையரிடம் இருந்து வந்ததாக இருக்கலாம்.

காலம் கடந்துவிடும் போது உறவுகள் புகை படிந்த கண்ணாடியைப் போல அமைதியாகி விடுகின்றன. யோசிக்கும் போது எல்லாம் இந்தக் கவிதை மெல்லிய அதிர்வினை ஊட்டுவதாகவே அமைகிறது.

மேற்சொன்ன நான்கு கவிதைகளையும் இப்படியே சொல்ல முடியும்.

இந்த உலகில் லாப நஷ்டக் கணக்கு வைத்திருப்பவனுக்கு மட்டும் மரியாதை இருக்கிறது. நமது கணக்கின் அளவு மாறும் போது மரியாதை மாறிவிடுகிறது.

முதல் இரண்டு கவிதைகளை(வேறு மற்றும் சிலர்) ஒப்புமைப் படுத்த முடியும். அல்லது முரணாகவும் எடுக்க முடியும்.லாப நஷ்டக் கணக்கு மட்டுமே வாழ்க்கை இல்லை. அதனையும் தாண்டி ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. நம்மை பூச்சியம் என்ற நிலையிலிருந்து கடத்திக் கொள்வதற்கு.

மற்ற கவிதைகளுக்கு என் புரிதலகளை சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். உங்களின் புரிதல்களைப் பட்டியலிடுங்கள். அவை உண்டாக்கும் கேள்விகளையும் அதிர்வுகளையும் சேர்த்து.

(இன்னொரு குறிப்பு. நகுலனின் கவிதைகளில் அடிக்கடி சுசீலா என்னும் பெயர் வரும். பாரதிக்கு கண்ணம்மா மாதிரி.)