Feb 27, 2006

செல்லம்.....செல்லம்

Image hosting by Photobucket
அம்மா போனில்
சொன்னது:
"பஸ்ஸில் நசுங்கி
நாய் செத்துப் போச்சு"

மனிதனே
மரணிக்க
நாயென்ன?

பாசம்
கொஞ்சலைத்
தவிர்த்து விட
நினைக்கும் போது

வினாவொன்று
தொக்கி நிற்கிறது.

அடிபட்டு
உயிர்த்திருந்த
அரை நிமிடம்

காலைச்
சுற்றி வந்த
அப்பா முகம்

அடித்தாலும்
சோறு போட்டுவிடும்
அம்மா

வறண்டு விட்ட
நாவில் யாரும்
ஊற்றாத
தண்ணீர்

எதை
நினைத்திருக்கும்?

Feb 26, 2006

என்னாலும் முடியும்!

Image hosting by Photobucket

பலரும் ஓரிரு வரிகளில் முடிந்தால் ஒரிரு சொற்களில் பதிவைப் போட்டுவிடுவது என்னைப் போன்று 'மேட்டரே இல்லாமல்' பதிவெழுதுவோர்க்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதகாக உள்ளது.

நன்றி வழிகாட்டிகளே!

வலைப்பதிவாளர்கள் அனைவரும் நலமா? நான் இங்கு நலம். மீண்டும் சந்திப்போம். 'சிறு'பதிவுக்குரிய இலக்கணம் மீறப்பட்டதா? :)

Feb 13, 2006

காதலர் தினம்!

1996 ஆம் வருடம் ஒரு அது. அரும்பு மீசை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அஜீத், விஜய் என்று பலரும் சினிமாத்துறையில் நுழைந்தது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற பலரின் எண்ணத்திலும் தங்களையும் ஒரு கதாநாயகனாக நினைத்துக் கொள்ளச் செய்திருந்தனர்.

எல்லோரும் கதாநயகர்கள் ஆன சமயத்தில் எனக்கும்தான் அதற்கான தருணம் வந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நானே சிரித்துக் கொள்வது, 'அழகன்டா' என நினைத்துக் கொள்வது என ஒரே மயக்கம். அப்போது நான் என்ன படித்துக் கொண்டிருந்தேன் என்பதனைச் சொல்லவில்லையே? ஒன்பதாம் வகுப்பு. பிஞ்சில் பழுத்தவன் என்றெல்லாம் சொல்லாமல் கதையை முழுவதுமாகக் கேட்கவும். ஏதோ ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நடனக் குழு அமலா ஸ்கூல் என்று தெரிந்துவிட்டது. ஆனால் என்ன பெயர்,என்ன படிக்கிறாள் என்பதெல்லாம் தெரியாதே! அதற்கென்ன? அதை விடுத்தால் வேறு என்ன பெரிய வெட்டி முறிக்கும் வேலை காத்துக் கிடக்கிறது?

அதுவரை அந்தப் பெயரில் பள்ளி ஒன்று இருப்பது தெரியும் அவ்வளவுதான். அதன் பின்னர் அங்கு படிப்பவர்களை விட எனக்குத்தான் நிறையச் செய்திகள் தெரியும். அப்பள்ளியின் முதல்வர் பெயர் எல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்தேன் என்று தெரியவில்லை.

எனக்கு 4.30 க்கு பள்ளி முடியும். ஆனால் அவளுக்கு 3.30க்கு. தவியாய் தவித்துவிட்டேன். முதல் வேலையாக அவளின் பள்ளி அருகே தங்கி இருக்கும் ஏதாவது ஒருவனை நண்பனாகப் பிடித்தால் தேவலாம் என்று தோன்றியதால்,பல்குமார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்திக்குமாரை பிடித்துக் கொண்டேன். அவன் வீடுதான் எனக்கு போதிமரம் ஆகிப் போனது. நல்ல வேலையாக அவளுக்கு சனிக்கிழமை பள்ளி இருக்கும். எனக்கு விடுமுறை அல்லது ஒரு மணிவரைதான். அடித்து பிடித்து சென்றுவிடுவேன். தவமாய் தவமிருந்து பல்லுக்கு தேவதையை காட்டிவிட்டேன்.

பல் சொன்னது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. "அவள் எனக்கு பேமிலி பிரன்ட். அவுங்க வீட்டில தான் நான் எப்பவுமே இருப்பேன். கவலைப் படாதே அவளை நீ கல்யாணம் பண்ணுற, நாந்தான் உனக்கு துணை மாப்பிள்ளை. ஆனால் சர்ச்ல துணை மாப்பிள்ளை இருப்பாரான்னு தெரியலை" என்றான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கிறிஸ்தவப் பெண். ஆனால் காதலுக்குத்தான் கண் இல்லையே. தலைவரே தொடர்ந்தார். "இது எல்லாம் சகஜம்டா.இப்போ எல்லாம் ஒரு முறை சர்ச்சிலயும் அப்புறம் கோவில்லையும் கல்யாணம் பண்ணி வைப்பார்கள். நீ உங்க வீட்ட பார்த்துக்க, அவுங்க வீட்டுக்கு நான் பொறுப்பு."

நான் பறக்க ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது அவள் வீட்டுக்குப் போகவேண்டும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து அவர்கள் வீட்டில் என்னை மிகவும் பிடித்துப் போய்விட வேண்டும் என்றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எப்பொழுது போகலாம் என்பதைப் பல்தான் தெரிவிக்க வேண்டும். நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். அவன் ஒரு சனிக்கிழமை போகலாம் என்று சொல்லி ஐடியா ஒன்றைக் கொடுத்தான்.

"என் வீட்டுக்கு வந்து விடு. இருவரும் கிளம்பிப் போகலாம். நான் முன்னதாகப் போய்விடுவேன் சிறிது நேரம் கழித்து நீ அந்தப் பக்கமாக வா. நான் உன்னை அழைப்பேன்"

"சைக்கிள் பெல் அடிக்கட்டுமாடா?" இது நான்.

"ஐயோ..உனக்கு அறிவே இல்லைடா. உன்னை எல்லாம் எப்படி தேத்தறதுனு தெரியலை. பெல் அடிச்சா அவுங்க வீட்டில சந்தேகம் வந்துடும். நீ அங்க வா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"

எப்பொழுது சனிக்கிழமை வரும் என்று தவிப்புடனே திரிந்தேன். காலையில் அம்மா அப்பா அலுவலகம் சென்றவுடன் அப்பாவுடைய ஷேவிங் செட்டை தேடிப் பிடித்து எடுத்தேன். ஆனால் ஷேவ் செய்யும் அளவுக்கு தாடி மீசை எல்லாம் இல்லை. எசகு பிசகாக இழுத்ததில் ஒரு ஆழமான கீறல். இரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அது குறித்து பிறிதொரு நாளில் கவிதை கூட எழுதினேன்.

"எப்படியென்றே
தெரியாமல்
கோணலாய்ப் பிடித்து
இழுத்துக் கிழித்த வடு
இன்னும் இருக்கிறது.

உனக்கு
மீசையில்லாத
நடிகர் பிடிக்கும்
என்ற
செய்தியால்".

முகம் நிறைய கோகுல் சேன்டல் பவுடரைப் பூசிக் கொண்டு-அப்பிக் கொண்டு என்பது பொருத்தமாக இருக்கும். முதன் முறையாக டக் செய்து கொண்டு அதுவும் அரைஞான்கயிறு போட்டு சென்றேன். சைக்கிள் மிதித்த வேகத்தில் வியர்வை வழிந்து அழகு கூடிக் கொண்டே வந்தது. அதற்கும் காரணமிருக்கிறது. அவன் வர சொன்ன நேரம் நான்கு மணி. நான் சப்பிட்டவுடன் 1.30 க்கெல்லாம் கிளம்பிவிட்டென். வெய்யில் கருக்கி எடுத்தது. வியர்வை வழியாமல் என்ன செய்யும்?

நான் சென்றிருந்த போது பல்லு அவன் வீட்டில் இல்லை. சரி அவன் சொன்ன நேரத்தில் வந்துவிடுவான் என்று நினைத்தேன். வெகு நேரம் கழித்து பொறுமையாக வந்து "ஏண்டா அங்க வரல” என்றான். தூக்கி வாரிபோட்டது. ஆனால் இன்று அவர்களின் வீட்டுக்குச் செல்ல முடியாது என்று வருத்தமாக இருந்தது.

அவனே தொடந்தான் "சரி அவளின் வீட்டுப் பக்கத்தில் ஒருவன் இருக்கிறான். என் நண்பன் அவனைப் பிடித்தால் காரியம் ஆகும்" என்றான். யாராக இருந்தால் என்ன? நமக்கு காரியம் ஆனால் போதும். அவனையும் இப்பொழுதே சந்தித்து விடலாம் என்றேன்.

"அவனுக்கு ஐஸ் போடணும். டைரி மில்க் வாங்கிக்க" என்றான்.

"நானே டைரி மில்க் சப்பிட்டதில்லை டா" என்றேன்.

"அதனால? லவ் சக்ஸஸ் ஆகணுமில்ல? வாங்கு டா!" கிட்டத்தட்ட உத்தரவிட்டான். என்ன இருந்தாலும் நம் ஆளுக்குதானே என்று திருப்திபட்டுக் கொண்டேன்.

டைரி மில்க் வாங்கிக் கொண்டு வசந்த்தைப் பார்க்கச் சென்றோம்.(வசந்த்- புது தூதுவரின் பெயர்). அப்பொழுது அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அறிமுகப் படுத்திய பிறகு பல் கிளம்பும்போது சொன்னது "நான் கொஞ்சம் பிஸி.உன் ஆளை அவனிடம் காண்பித்துவிடு. மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.நான் தெளிவா சொல்லிவிட்டேன்"

"டேய் ப்ளீஸ்டா நீயும் இருடா"

"கவலைப் படாதடா. இவன் நம்ம பையன்தான். வசந்த் வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

வசந்த்தின் அப்பா என் ஊரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதால் நம்பிக்கை கூடியது.கோபிசெட்டிபாளையம் கிடையாது. அருகில் இருக்கும் சிற்றூர். நம்பிக்கை கூடியதற்கான காரணம் இப்போது யோசித்தால் புலப்படவில்லை.

சரியாக அரைமணி நேரத்தில் மூன்று பெண்கள் சைக்கிளில் வந்தனர். "அண்ணா(இதுதான் முதலும் கடைசியுமான அண்ணா) இதில் யார்?" நான் காண்பித்தவுடன் "அவுங்க பேர் அனிதா.எட்டாவது படிக்கிறாங்க" என வரலாறு ஒப்பித்தான். சரி என்று தூதுவரிடம் இரண்டு டைரி மில்க் கொடுத்தேன். ஒன்று உனக்கு மற்றொன்று அனிதாவுக்கு.

என் பெயர் எழுதும் போது என் பெயரில் அனி என்னும் மூன்று எழுத்தை மட்டும் அழுத்தமாக எழுதுவது என எல்லாம் அலம்பல் செய்தேன்.

அடுத்த நாள் வசந்த்திடம்  டைரி மில்க்கை வாங்கிக் கொண்டாளா என்று கேட்டதற்கு முதலில் முறைத்ததாகவும் பின்னர் வாங்கிக் கொண்டதாகவும் சொன்னான்.

"பல்லனுக்கு அனிதா ரொம்ப பழக்கமா வஸந்த்?" என்றேன்.

"அப்படியா சொன்னான் அவன் கதை விடுறான். நம்பாதே" என்றான்.

பல்லன் போனால் போகட்டும். வஸந்த்தாவது கிடைத்தானே? அதன் பிறகு அவனிடம் நிறைய டைரி மில்க் அதுவும் இரண்டு இரண்டாக கொடுக்க வேண்டி இருந்தது.

ஒரு நாள் வஸந்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது "உன் ஆள் வருது பார்" என்றான்.

"அது அனிதாவோட பிரண்டுடா"

"என்கிட்டயேவா? அதுதான் அனிதா" என்று சாதாரணமாகச் சொன்னான்.

"அடப் பாவி நான் சொன்னது வேறடா"

"ஓ! அன்னைக்குப் பார்த்தமே அதுவா? அது ஷீபா". அவன் சொல்லச் சொல்ல என் நெஞ்சாங்கூட்டில் ஹிரோஷிமா, நாகசாகி எல்லாம் வெடித்தன. ஐயோ! என் பெயரில் இருந்த ani என்ற மூன்றெழுத்து சிதற ஆரம்பித்தன.

“ஒன்னும் கவலைப்படாதே. நான் அனிதாகிட்டதான் சொல்லி இருக்கேன். அனிதாவையே காதலி” என்றான்.

"டேய் நீ என்னடா சொல்றது. என்னோட காதல் தெய்வீகக் காதல். ஆளை எல்லாம் மாத்த முடியாது.ஷீபாவைத்தான் காதலிப்பேன் உதவ முடியுமா முடியாதா?" என்று கோபத்தில் கேட்டதற்கு

"யோசிக்கலாம்" - என்றான் அந்தப் பெரிய மனுஷன். பிறகு கண்டு கொள்ளவே இல்லை.

நானாக முயற்சிக்க வேண்டியதாகி விட்டது. அவள் டியூஷனுக்கு வரும்போது நண்பர்களிடம் சொல்லி வைத்து என் பெயரைக் கத்தச் சொல்வது, டூயட் படத்தில் வரும் "சித்தத்தினால் உண்ட பித்தத்தினால்" கவிதையை மனனம் செய்வது, எப்பொழுதாவது அமலா பள்ளியில் பேச்சுப் போட்டியோ கவிதை போட்டியோ வராதா என தேவுடு காப்பது (நமக்குதான் டான்ஸ் எல்லாம் வராதே) என்றே நாட்கள் கடந்தன. டி.வி.எஸ் 50 ஐ சைக்கிளில் துரத்துவது, அவளின் அப்பா பெயர் வண்டியின் பின்புறம் எழுதி இருக்கும். அதனை வைத்து தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அடிக்கடி ரிங் கொடுப்பது, தனி ஒரு நோட் வைத்து கவிதை எழுதுவது என அன்றைய முயற்சிகள் எல்லாம் இன்றைக்கும் சிரிப்பு வர வைப்பன. எவ்வளவுதான் முயன்றும் ஒற்றை வார்த்தை கூட பேசியதில்லை. எல்லவற்றையும் விட காமெடி(எனக்கு டிராஜடி) அவளுக்கு இப்படி ஒருவன் அலைந்தான் என்பதாவது அந்தப் பெண்ணுக்குத்  தெரியுமா என்பதுதான்.

அவ்வளவுதான் என் காதல். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் எனக்கு தினம் இப்படித்தான் இருக்கிறது. காதலைப் பொறுத்தவரையிலும் எனக்கு பிரமச்சாரி ராசி. கடும் பிரம்மச்சாரி.

"இன்று குளிக்கும்போதும்
வலது காலின் பெருவிரலில்
கல் தடுக்கிய கணமும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்த நேரத்தை விட
நினைக்காத நேரத்தை சொல்வது
எளிதெனக்கு"

Feb 10, 2006

வைர விழா மேல்நிலைப் பள்ளி.

பெயர் வித்தியாசமாகப் படுகிறதா? பள்ளியும் வித்தியாசமானதுதான். 1898ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்டு வந்த விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து அறுபது ஆண்டுகள் முடிந்திருந்தன. அப்போது கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த மிராஸ்தாரர்கள், இதன் நினைவாக நமது ஊரிலும் ஏதேனும் நினைவுச் சின்னம் அமைப்போம் என முடிவு செய்தனர்.

அறுபதாம் ஆண்டு வைரவிழா என்பதனால் வைரவிழாப் பள்ளி என ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தனர்.அதன் விளைவாக வைரவிழாப் பள்ளியானது.

வர்கீஸ் குரியன் கேள்விப்பட்டிருக்கீர்களா? நம் நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். 'ஆனந்த்'ன் தலைவர். அவர் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர். மகாத்மா காந்தி, வினோப பாவே எல்லாம் வந்து சென்றிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பாக என்ன காரணத்திலோ பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என பெண்களுக்குத் தனியாகப் பிரித்துவிட்டனர்.(எங்களை எல்லாம் எண்ணிப் பாராமல்)

அந்தக் கால கட்டங்களிலோ அல்லது அதற்கு பின்னரோ திரு.அருணாச்சலக் கவுண்டர் என்பவர் தலைமை ஆசிரியராக
இருந்திருக்கிறார். தினமும் காலை வணக்கவகுப்பில் "சில பொறுக்குமணிகள் நேற்று பழனியம்மள் பள்ளியின் சாலையில்(!) சுற்றியிருக்கிறார்கள்.நீங்களாக வந்துவிடுவது நல்லது" என்று அறிவிப்பாராம்.உண்மையா பொய்யா-இவருக்கு தெரியுமா தெரியாதா என்று புரியாமல் பல மாணவர்களும் மேடைக்கு வந்து தண்டனை பெற்று செல்வார்களாம்.எங்க அப்பா சொன்னது.எங்க அப்பா அடிவாங்கினாரா என்பது தெரியாது.

ஆனால் ஒருவர் இருக்கிறார். எங்க அப்பவிற்கு எதிர் அணி- அந்தக் காலத்தில். ஏதோ ஒரு அலுவலக விஷயமாக சமீபத்தில் என் வீட்டுக்கு வந்த போது பழைய பகைமையில் இருவரும் நெளிந்ததை உணர முடிந்தது.(30 வருடத்திற்கு முன்பிருந்த பகை). அவர் சென்றவுடன் அப்பா சொன்னார்.

அந்த 'மீன் வாயன்' தன்னை அடிக்க ஆள் சேர்த்து வந்ததாகவும்,அடுத்த நாள் தானும் ஒரு படை சேர்த்து சென்றதாகவும்.என் அப்பா அமைதியானவர் என்று நினைத்திருந்தேன் . அந்த நிகழ்வும் அந்தப் பள்ளியின் ஒரு வரலாற்றுத் துணுக்கு.

நான் படித்த கதை சுவாரசியமானது. மூன்றாம் வகுப்பு வரை 'கான்வென்ட்'.தயவு செய்து ஊட்டி, கொடைக்கானால் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள்.

மூன்றிலிருந்து ஐந்தாவது வரை 'சின்ன' வைரவிழா.எலிமெண்டரி ஸ்கூலை அப்படித்தான் சொல்வோம். அப்பவே எனக்கு நேரம் சரி இல்லை. அழகான பொண்ணு (சின்ன வைரவிழா இருபாலருக்குமான பள்ளி) ஏதாவது நம்ம வகுப்பில் இருக்காதானு ஏங்கிப் பார்ப்பேன்.(நிஜமாத்தாஙக).

மூன்றாவது படிக்கும் போது மட்டும் எனக்குப் பிடித்த ஒரு பெண் இருந்தாள். அவளையும் அடுத்த வருஷம் வேற வகுப்பில் மாற்றிவிட்டார்கள். அப்போ ஆரம்பித்த பிரமச்சாரி ராசி இன்னமும் தொடர்கிறது. பிரம்மச்சாரி ராசின்னா ஒரு பொண்ணும் நாயை மதிக்கும் அளவிற்குக் கூட நம்மை மதிக்காமல் இருப்பது.

ஆறாவது வகுப்பில் நோட்டில் எழுதாமல் தப்பிக்க நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி அப்பாவுக்கு ரூ.3000 செலவு வைத்தது, ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வரை வகுப்புத் தலைவன் ஆக செய்த தகிடுதத்தங்கள்,எட்டாம் வகுப்பில் வேலுச்சாமி வாத்தியார் டியூஷனில் அடிவாங்கமல் தப்பிக்க மேற்கொண்ட வழிமுறைகள். ஒன்பதாம் வகுப்பில் நண்பனின் காதலை பார்த்து நமக்கு ஒரு காதல் வராதா என்று பேயாக அலைந்தது, பத்தாம் வகுப்பு தனம் டீச்சர் டியூஷன்,
பதினொன்று,பன்னிரெண்டாம் வகுப்பில் கட் அடித்து கிரவுண்டில் நாடு பிடித்து விளையாடுவது, கர்ணன் டியூஷனில் அடிக்கு பயந்து இளம்பரிதியிடம் மாறினால் அங்கு அப்புசாமி மூஞ்சி மொகறையப் பெயர்த்ததுன்னு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு எழுதினாலே நூறு பதிவுகளைத் தாண்டிவிடும்.இன்னொரு ஆட்டோகிராப் படமே ஓட்டலாம்.

என்னதான் சொன்னாலும் செய்தாலும் ஸ்கூல் வாழ்க்கை திரும்பி வருமா?

(இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது பள்ளியினை பற்றி முழுமையான கட்டுரையாக எழுத நினைத்தேன். ஆனால் பல விஷயங்களை நினைவில் நிறுத்த முடியவில்லை.(நூரு வருட வரலாறு) மேலும் பல செய்திகள் திரட்டப் பட வேண்டியதாக இருக்கிறது. பதிவாளர் தாணு தெரிவித்தது போல் என் ஊர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதன் திருவிழாக்கள் கலாச்சாரக் குறியீடுகள் என அனைத்து பற்றியும் சில தகவலகளைத் தரலாம்தான்.
தகவல் திரட்டி முழுமையான கட்டுரைகளாகவே தரலாம் என்று நினைக்கிறேன்.)

Feb 9, 2006

போபர்ஸ்- சில வினோத தகவல்கள்.

இக்கட்டுரை இந்திய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த அலுவலர் ஒருவரால் எழுதப்பட்டது. பெயர் வெளியிடப் படவில்லை. அவரது கட்டுரையின் தழுவல் இது.

1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பின்னிரவில் இரவு சிற்றுண்டியினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் உளவுத்துறை, சி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், ரா அமைப்பின் செயல் தலைவர்(அதன் தலைவர் அந்தச் சமயத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தார்) மற்றும் ராஜிவீன் நெருங்கிய அரசியல் ஆலோசகர்கள் இருந்தனர்.

ரா தலைவரின் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் செயல் தலைவரை அதன் தலைவராக நியமிக்க ராஜிவ் முடிவு செய்திருந்தார். ஆனால் போபர்ஸ் பூதம் கிளம்பப் போவதை உணராதிருந்ததன் தண்டனையாக அவர் வேறு துறைக்கு தாமாகவே மாறிச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோமிலிருந்து போபர்ஸ் பூதம் வெளிப்பட்டவுடன் அரசு, இந்தக் கட்டுரையாளரின் கருத்தினையும் அவரது அறிவுரையையும் வினவியது.தமக்கு ஸ்வீடன் பற்றி தெரியாது எனவும் எனினும் பல்வேறு தரப்பினரும் அரசு மற்று அரசு சாரா வட்டாரங்களில் பலன்காளிப் பெற்றுள்ளது போல் தெரிவதாகவும் எனினும் இந்தத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்.

இந்துஜா சகோதோரர்கள் மீது சந்தேகம் உள்ளபோதும் அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது.அவர்கள் சி.பி.ஐ எப்படி துப்பறிய வேண்டும் என்பதற்கும் பிரதம அலுவலகம் தனக்குண்டான பாதிப்புகளைத் தடுக்கலாம் என்பதற்கும் அறிவுரையாளர்களாக செயல்பட முடிந்தது.

சி.பி.ஐயின் உயரதிகாரிகள் ஜெனீவாவிற்கும், லண்டனுக்கும், ஸ்டாக்கோமுக்கும் எத்தனை முறை பயணம் செய்திருப்பார்கள்? எத்தனை முறை இந்துஜா சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய தொடர்பில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பார்கள்?.

இந்துஜா சகோதரர்கள் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் வசீகரிப்பவர்களாகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். வேறு எந்த இந்திய தொழிலதிபர்களும் இருந்திடாத அளவிற்கு.

இவர்களின் தத்துவம் - அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடது.

அமெரிக்காவில் குடியரசுக்க் கட்சிக்கும் நண்பர்கள், ஜனநாயகக் கட்சிக்கும் நண்பர்கள்.
மார்கரெட் தாட்சரும் பழக்கம் ஜான் மேஜரும் தெரியும்.
இந்தியாவிலும் அப்படியே வாஜ்பாயும் தேவை ஜோதிபாசும் தேவை.

இவர்கள் இலண்டன் அல்லது ஜெனீவாவில் நடத்தும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக பிரசித்தம்.ஐரோப்பிய இந்தியப் பெருந்தலைகள் பலரையும் உங்களால் காண இயலும்.(உங்களை அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை!)

1987இல் திரு.பி.வி.நரசிம்ம ராவ் ஐரோப்ப சுற்றுப் பயணத்தில் இருந்தார். அப்போது ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சர்.ஜேனிவாவில் இந்துஜா சகோதரர்கள் விருந்துக்கு அழைத்த போது போபர்ஸ் விவாகாரத்தின் காரணமாக அழைப்பினை ஏற்க மறுத்துவிட்டர். பிரதம அலுவலகத்திலிருந்து அந்த விருந்தில் பங்கேற்குமாரு பி.வி.என்னுக்கு தகவல் சென்றது.(உத்தரவாகக் கூட இருக்கலாம்)

ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது ஜெனிவா பயணம் மேற்கொண்டார். அப்போது இந்துஜா சகோதரர்களில் ஒருவர் ஜெனீவாவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குடியரசு அலுவலகம் ஒரு சிறப்பு காது சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருப்பதாகவும் அதற்கான நேரத்தை ஒதுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

தூதரகத்தில் இருந்து உறுதிப்படுத்துவதற்கான தொடர்பில் அப்படி எதுவும் வேண்டுகோள் இல்லை எனக் குடியரசு மாளிகயிலிருந்து தெரிவிக்கப் பட்டது. எனினும் தூதரகத்துக்குத் தெரியாமல் ஜெர்னே இல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்த எச்.கே.எல் பகத் ஜெனீவா வந்திருந்த போது, இந்தியத் தூதரின் மனைவியும் பணியாளும் இல்லாத காரணத்தினால் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என தூதரால் இந்துஜா சகோதரர்களிடம் கேட்கப்பட்டது.கரும்பு தின்னக் கூலியா?ஒத்துக் கொள்ளாம்லா இருப்பர்? இந்த விஷயம் அமைச்சருக்குத் தெரியாது. இதனைத் தெரிந்த அமைச்சர் விருந்துக்கு தான் வர முடியாதெனவும் ஏன் இவ்வறு செய்தீர்கள் எனவும் தூதருக்கு அர்ச்சனை கொடுத்திருக்கிறார்.

எனினும் பல வெளிநாட்டினர் கலந்துகொண்ட விருந்தில் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என அறிவிக்கப் பட்டது. அவர்கள் யூகித்திருக்க முடியும் அதற்கான காரணத்தை.

வி.பி.சிங் அவர்கள் ராஜீவின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த போது 'காட்' ஒப்பந்தம் தொடர்பாக அடிக்கடி ஜெனீவா செலவ்து உண்டு. இந்துஜா சகோதரர்கள் தொடர்பு கொள்ள (வழக்கம்போலவே) முயன்றபோது தவிர்த்ததோடு அல்லாமல் அவருக்கு எப்படி நான் இருக்கும் இடம் தெரியும் என்று தூதரக அதிகாரிகளை வினவி இருக்கிறார். தேவை இல்லை. தூதரக அதிகாரிகளை விட சகோதரர்களுக்கு அதிகம் தெரியும். டெல்லி ஜெனீவா இடையிலான போக்குவரத்து பற்றி.

போபர்ஸ் சம்பந்தமாக பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டு அக்குழு சில உயர் அதிகாரிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பியது. கட்டுரையாளர் அக்குழுவுக்கு உதவ வேண்டும் என டெல்லியிலிருந்து தகவல் அனுப்பப் பட்டது. குழு இரண்டு உதவிகளைக் கேட்டது. ஒன்று குற்றம் சாட்டப் பட்டுள்ள நபர்களை சந்திப்பது. பெரும்பாலான நபர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர். மற்றொன்று பிரதம அலுவலகத்தினால் கொடுக்கப் பட்டுள்ள முகவரிகளில் உள்ள நபர்களை சரி பார்த்தல்.

அப்போது பலரும் இடம் மாறியிருந்ததால் கட்டுரையாளர் சில நடவடிக்கைகள் மூலம் சரியான முகவரிகளை கண்டறிந்தார். இது குழுவிற்கு மகிழ்ச்சி தரவில்லை. தாங்கள் சரிபார்க்க மட்டுமே விருபுவதாகத் தெரிவித்து, அலுவலகத்தால் தரப்பட்ட முகவரிகளில் அந்த நபர்கள் தங்கி இருக்கவில்லை என பிரதம அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பப் பட்டது.

சில பத்திரிக்கையாளார்கள் துப்பறியும் பணியைச் சிறப்பாக செய்த போதும்,அனைத்து பத்திரிக்கையாளர்களர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பலர் தகவல்களை மறைப்பதற்கும் திரு.வி.பி.சிங்கின் பெயரினை பாழ்படுத்தவும் அரசிற்கு உதவினர்.ஒரு பிரபல நாளிதழின் பத்திரிக்கையாளார் பெயரைக் குலைக்கும் சதிக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.கிட்ஸ் விவகாரத்தில் சிங் இன் பெயரை இழுக்கும் பணி அவருக்கு வழங்கப் பட்டது.

தேசம் விரும்புவது போலவும் நம்புவது போலவும் வி.பி.சிங் ஒன்றும் அவ்வளவு சுத்தமான கரங்களுக்குச் சொந்தமானவரில்லை. அவரும் அவர்து காபினெட் செயலாளர் வினோத் பாண்டேவும் ராஜிவ் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரினைக் குலைக்க பல வகைகளிலும் முயன்றனர்.

ராஜிவின் போபர்ஸ் தொடர்பினை வெளிக் கொணர்வதற்கு என ஒரு ஜெர்மானிய துப்பறியும் நிறுவனத்தை பாண்டே நியமித்தார். ஒரு அரசாங்கம் வெளிநாட்டினை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினை துப்பறியும் பணிக்காக நியமிப்பது. அதுவும் நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றில். இது மிகவும் மோசமான செயல்

சிங் பிரதமராக இருந்த போது ஊடகங்களில் வெளிவந்த போபர்ஸ் கட்டுரைகள் பலவற்றிற்கும் ஜெர்மானிய நிறுவனத்தின் புலனாய்வு ஆதாரமானதாக அமைந்தது.

பிரதமருக்குத் தெரியாமலோ அல்லது அவரது அனுமதி இல்லமலோ பாண்டே இத்தனை காரியங்கஆளைச் செய்திருக்க முடியாது.

போபர்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேசிய ஊழல்கள் நாட்டின் நல்லன வற்றயும் மோசமானவற்றயும் ஒரு சேர வெளிக் கொணர்கின்றன.
அமெரிக்காவின் 'வாட்டர் கேட்' போல. நாமும் எதிர்பார்ப்போம்

Feb 7, 2006

மூன்றாவது(பிலாக்கர்ஸ்) அணி

அரசியல் அணி இல்லைங்க.....பிலாக்கர்ஸ் அணி.அது என்னமோ தெரியலை எதாவது தமிழ்ல எழுத ஆரம்பிச்சா போதும் பட்டாசக் கிளப்பறோம்னு நினைச்சுட்டு மத்தவங்க மண்டய உடைச்சுடுறாங்கப்பு. வலைப்பதிவு மட்டும் விதிவிலக்கா? இங்கேயும் ஆரம்பிசாச்சு. என்னடா குரூப் சேர்ந்து மத்தவங்களை தூக்கி மட்டும் தானே விடுறாங்க, நல்லா இருக்குதுனு பார்த்துட்டு இருந்தா .....

திடீர்னு அக்னி எல்லாம் தோத்துடற அளவுக்கு ஏவுகணைகள் சீறுது போங்க. அட என்னங்க ஆச்சு. நல்லாத் தானே இருந்தீங்க? என்ன வேணும்னே புரியலயே! அட என்னதான் பிரச்சினைனு தெரிஞ்சுக்கலாம்னா நேரடியா பதிலும் இல்லை.லின்க் களை திறந்தா 'டெஸ்க்டாப்' நிரம்பிப் போகுது.அத்தனை லின்க்-ஆ குடுப்பாங்க?சரியாப் போச்சு!
போய்ப் படிச்சுட்டு வரதுக்குள்ள எங்க ஆரம்பிச்சோம்னு மறந்து வேற போகுது.

சண்டைப் போடாதீங்க. வேண்டாம் வேண்டாம் சண்டைப் போடுங்க.ஜாலியாத்தான் இருக்கு.ஆனால் மத்தவங்களுக்கு புரியற மாதிரி ஓ.கே? டீல்?

மேட்டரை மறந்துட்டேன் பார்த்துடீங்களா? இதுதான் நமக்கு நல்ல சான்ஸ். எந்த அணியும் வேண்டாம். இது தனி அணி. யாரு அதிக பின்னூட்டம் இட ஒத்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் கூட்டணி வைப்போம். யாரும் மதிக்கவில்லையா? டெபாஸிட் இழந்தாலும் பரவாயில்லை தனியாக போட்டியிடுவோம்.கூட்டணிக்கான எங்கள் கதவு திறந்தே இருக்கிறது. ஸீட் தரமுடியவில்லை எனில் இதயத்தில் இடமளிப்போம். :)

உட்டாலக்கடி கிரி கிரி தமிழ்மணத்தோட வடகறி.

வலைப்பதிவாளர் முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பிர். நல்லாட்சி அமைந்திட வாய்ப்பளிப்பீர்.

Feb 5, 2006

ஒரு வருஷம் ஆச்சுங்க.

நான் வலைப்பதிவு தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது.2005 பிப்ரவரி 7 ஆம் நாள் 'பேசலாம் வலைப்பதிவு தங்களை இனிதே வரவேற்கிறது' என்று ஆரம்பித்தேன். முதல்பதிவிட்டு பெயரை பார்த்தபோது ஒரு சந்தோஷம் வருமே.கூகிளில் பெயரைத் தேடும் போது பக்கங்கள் குவியுமே.....அதெல்லாம் 'ஆராயக்கூடது...அனுபவிக்கணும்'

எனக்கு வலைப்பதிவு என்று ஒன்று இருப்பது திரு.தேசிகன் அவர்களின் மூலமாகத் தெரிய வந்ததது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் திரு.தேசிகனை அறிமுகப்படுத்தும் போது வலைப்பதிவு குறித்து தெரிவித்தார். வலைப்பதிவு எப்படி துவங்குவது என்பது குறித்தெல்லாம் திரு.தேசிகன் அவர்கள் கவிஞரின் இல்லத்தில் எனக்கு தெரியப்படுத்தினார்.

தொடக்கத்தில் மற்ற பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்திக் கொண்டேன். கூடவே ஓரிரண்டு விமர்சனங்களும். ஒரு வலைப்பதிவர் என்னை தாறுமாறாக திட்டியும் விமர்சனங்களையும் நீக்கிவிட்டார்.என்னை நான் பெரிய விமர்சகன் என்று நினைத்து குப்பையை எல்லாம் கவிதை என்று சொல்லாதீர் என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ ரோசத்தில் நானும் வலைப் பதிவில் பதிக்க ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் கவிதைகள்.குறைவான வரவேற்பு தான்.(காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் வந்த கவிதைகளைப் பதிப்பித்த போதும்).அப்புறம் தோன்றுவது எல்லாம்.நயந்தாரா,குஷ்பூ என. தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது ஆர்வக் கோளாறு.

நான் எழுதிய பதிவுகளில் 'உடலியல் மீது கட்டமைக்கபடும் கலாச்சாரம்' எனக்குப் பிடித்த படைப்பு. ஒரு பின்னூட்டம் மட்டும் பெற்றேன். சிக்கலான வார்த்தைப் பிரயோகம் அதிலிருந்தது.

அதிகப் பின்னூட்டம் 'அனானிமஸ் தறுதலைகளுக்கு' மொத்தம் 50. (இருக்காதா பின்னே?) ஆனாலும் இதுவரை என்னை யாரும் தாறுமாறாகத் திட்டவில்லை என்பது ஒரு ஆறுதல்.

இதுவரை பேசலாம் பதிவு 11976 முறை பார்க்கப்பட்டுவிட்டது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 1000. அதுவரை சந்தோஷம்.

இரு ஜாம்பவான்களின் மூலமாக இந்தப் பதிவுலகிற்குள் நுழைந்தாலும் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை என்பது வருத்தம்தான். டிடர்மினேஷன் என்பது இல்லை என்பதனை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

நிறைய அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. பலரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஐதராபாத் வந்து பேசுவதற்கு கூட யாரையும் தெரியாமல் வலைப்பதிவில் எழுதியபோது, பல வலைப்பதிவாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இது எல்லாம் எதிர்பார்க்க இயலாத விஷயங்கள்.

அதே போல சென்னைக் கடற்கரைக் கூட்டமும். வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்று. அதுபோல இங்கும் ஒன்று நடக்க வேண்டும் என நினைக்கிறேன். இதுவரை இயலவில்லை.

நிறைய எழுத வேண்டும். அதுவும் நல்லதாக என விருப்பம் உண்டு. அச்சுத் துறை வந்தபோது நிறையப் பேருக்கு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்கள் வந்த போது தரமான படைப்பாளிகள் வெளியுலகிற்கு வருவதற்கு வாய்ப்பு இருந்தது. இணையம் வந்த போது யாரும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு அவ்வாறுதான்.

இன்னும் என் அணுகுமுறையயும், எழுத்தையும் செதுக்க வேண்டும் எனத் தெரியும். செய்து கொள்ளலாம். இன்னும் காலம் இருக்கிறது. உங்களின் ஆதரவும், விமர்சனங்களும் அதற்கு உதவும் என முழுமையாக நம்புகிறேன்.

நன்றி.

Feb 3, 2006

டப்பா வாலாக்களின் ஸிக்ஸ் ஸிக்மா

டப்பா வாலாக்களைப் பற்றி சொல்வதற்கு முன்பாக ஸிக்ஸ் ஸிக்மா.உற்பத்தி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும். ஒரு மில்லியன் பொருட்களில் 3.4 தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம். இது அகில உலக தரக் கட்டுப்பாடுக் குழுமம் மூலமாக 1986 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

Image hosting by Photobucket
டப்பா வாலாக்கள். இந்தப் பெயர் ஸிக்ஸ் ஸிக்மா உலகில் மிகப் பிரபலம். காந்தி தொப்பியும், டோத்தியும் அணிந்து சோற்று டப்பாக்களை மும்பை நகரத்துக்குள் மதிய நேரத்தில் விநியோகிப்பவரகளின் பெயர் இது.இவர்களது பணியில் ஸிக்ஸ் ஸிக்மா பின்பற்றப்படுகிறது. இதில் படித்தவர்கள் யாரும் இல்லை.ஈ.ஆர்.பி சாஃட்வேர் கிடையாது. இருப்பினும் அவர்களால் இயல்கிறது.

இவர்களின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அலுவலகங்களுக்குப் போகிறவர்கள்.உணவுப் பாத்திரங்கள்(டப்பா) சரியாக 12.30 மணிக்கு வாடிக்கையாளர்களை அடைந்துவிடும். அதேபோல் எங்கு இருந்து கிளம்பியதோ- அது இல்லம், உணவு விடுதி எதுவெனினும் சரியாக மாலை 5.00 மணிக்குத் திரும்பிவிடும்.

இவர்களில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.இவர்களின் பயணம் மிதிவண்டி,மின்சார ரயில் அல்லது நடந்து என மும்பையின் மூலை முடுக்குகளிலெல்லாம் இவர்களின் பயணம் தொடர்கிறது.சுமாராக நாளைக்கு 2,00,000 டப்பாக்கள் விநியோகிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு டப்பா நான்கு,ஐந்து கைகள் மாறும்.60இலிருந்து 70 கி.மீ பயணம் மேற்கொள்ளும்.தவறின்றி.அதுதான் முக்கியம்.ஒவ்வொரு டப்பாவிலும் அடையாளமிடப்படுகிறது. இந்த அடையாளம் துவங்கும் இடத்தையும் சேரவேண்டிய இடத்தையும் குறிப்பிடுவதற்காக.

மைக்கேல் போர்ட்டரின் தொழில் குறித்தான ஐந்து விசைக் கோட்பாடு ஒன்று உள்ளது. இந்தக் கோட்பாடு மேலாண்மைத் தத்துவங்களை தெளிவாக விளக்குவதுடன் ஒரு துறையில் நிறுவனம் ஒன்று தலைமை இடத்துக்கு வரவேண்டுமாயின் பின்பற்ற வேண்டிய விதிகளைத் தெளிவுபடுத்துகிறது. தெரிந்தோ தெரியாமலோ- தெரியாமல்தான், டப்பா வாலாக்கள் பின்பற்றுகிறார்கள்.

1.புதிய போட்டியாளர்கள் உள் நுழைவதற்கான சாத்தியமும் பயமும்:
இது எந்த நிறுவந்திற்கும் அபாயமாந்து என போர்ட்டர் குறிப்பிடுகிறார். 1880 இல் தொடங்கிய டப்பா வாலாக்களின் 125 வருட அனுபவம் புதிய போட்டியாளர்கள் உள்ளே வருவதற்க்கு மிகப் பெரிய தடை. மும்பையின் ஜன நெருக்கடி மிகுந்த நேரத்தில் மீண்டும் இப்படியொரு வலையமைவை புதிதாக உருவாக்குவது குறித்து யோசித்துப் பாருங்கள்.

2.தற்ப்போதைய போட்டி:
துரித உணவுக்குடங்களும், அலுவலக உணவு விடுதிகளும் போட்டிதான். ஆனால் இல்ல உணவு மாதிரி வரும?

3.வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் திறன்:
மாதம் ரூ.300 க்கு டப்பாக்களை கொண்டு வந்து தருகிறார்கள். இதனை விட நீங்கள் எப்படி குறைவாக கேட்க முடியும். வின் - வின் தத்துவம்.

4.விற்பனையாளர்களின் பேரம் பேசும் திறன்:
டப்பாவாலாக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்பு மிகக் குறைவு. தொழில்நுட்பம் எதுவும் இல்லை. எனவே எந்த விற்பனையாளரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் சுத்தமாகக் கிடையாது.மனித வளம்தான் ஒரே சொத்து.

5.புதிய பதில் பொருள் அல்லது சேவை வருவதற்கான சாத்தியம்:
முன் சொன்னது போலவேதான். இந்திய மனநிலையில் வீட்டு உணவுக்கு மாற்றாக வேறு எதுவும் வர முடியாது.

எனவே இப்போதைக்கு டப்பாவாலாக்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.

டப்பாவாலாக்களின் நுட்பம் தெரியுமா?
தவறு ஏற்றுக்கொள்ளபட முடியாதது: 300 டப்பாவாலாக்கள் பணிபுரியும் ஒரு பகுதியில் 5 டப்பா வாலாக்கள் 'பேக் அப்' ஆக இருப்பார்கள். ஏதேனும் விபத்து போன்ற சூழலில் அவர்கள் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கம்: மது அருந்திப் பணிபுரிந்தால் ரூ.1000 வரை அபராதம் உண்டு.
நெரிசலில் காந்தி தொப்பி அடையாளத்திற்கு பயன்படுகிறது.அணியாதவர்களுக்கு ரூ.25 அபராதம்.

வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை.

பணிபுரிய வயது, பாலினம், மதம் எல்லாம் தடை இல்லை. உடலில் பலம் இருக்கும் வரை பணிபுரியலாம்.முதல் ஆறு மாதம் தற்காலிகப் பணியில் நன்கு தரமிடப்படும். பின்னர் மாத ஊதிய ரூ.5000 வழங்கப் படுகிறது.

இவர்களுக்கென 'நூதன் மும்பை டிபன் பாக்ஸ் சப்ளையர்ஸ் சாரிட்டி டிரஸ்ட்' உள்ளது.

இவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளாம்.தொழிநுட்பங்கள்.

அதைவிட மேலனது வாடிக்கையாளர் சேவை. 2003இல் இளவரசர் சார்லஸ் டப்பாவாலாக்களை சந்திக்க விரும்பிய போது இவர்கள் முன் வைத்த கோரிக்கை."மதிய பணியை பாத்திக்காதது போல் சந்திப்பு நேரத்தை ஒதுக்குங்கள்".

(Harsha venkatesh என்பவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.)

Feb 1, 2006

பிரகதீஸ்வரர் புகைப்படம் & என் கணித மதிப்பெண்

சாமி கும்பிடுவீங்களா? என் அறைத்தோழர் என்னைப் பார்த்தவுடன் கேட்டார். ஏன் என்று தெரியவில்லை. இந்தக் வினாவினை பலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளனர். என் முகம் அப்படிப் பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர்ப் பக்கம் பெரியாரின் விசுவாசிகள் மிக அதிகம். எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிறைய முறை கடவுள் இல்லை என்று பேசி அம்மாவிடம் (என் அம்மா. தமிழ்நாட்டில் அம்மா என்ற சொல் குத்தகைக்கு எடுக்கபட்டுள்ளது) வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு. எப்போதும் கணிதத்தில் அடித்து பிடித்து தேர்ச்சி பெற்றுவிடுவேன். அந்த முறை கோட்டை விட்டுவிட்டேன். மதிப்பெண் பட்டியலும் வந்துவிட்டது. கொஞ்ச நாள் சொல்லாமல் சமாளித்தேன். ஆனால் தகுதிப் பட்டியலில் கையொப்பம் வாங்க வேண்டுமே. அடுத்த நாள் காலையில் அம்மாவிடம் ஒரு பொய் சொன்னேன். இரவில் ஒரு கொடூரக் கனவு கண்டேன். அதில் ஒரு காட்டினுள் மாட்டிக் கொண்டதாகவும், அப்போது ஒரு ஒளிவட்டம் தோன்றி எனக்கு ஒரு சிறிய பிரச்சினை இன்று வரும். (இதுவரை இழிவாகப் பேசியதற்கான தண்டனை) இனிமேல் என்னை வணங்கு, சரியாகிவிடும் என்று சொன்னதாகவும். அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பையன் வழிக்கு வந்தான் என எதுவும் சொல்ல வில்லை என நினைக்கிறேன்.

அதன் பிறகு மதிப்பெணை அந்த நாளின் மாலையில் சொன்னபோதும் ஒரு மெல்லிய சிரிப்பைத் தவிர எந்த திட்டும் இல்லை. அடுத்த முறை நன்றாகப் படி என்று அறிவுரை தான். இருந்தாலும் அப்பா அடி பின்னிவிட்டார். அதன் பின்னர் பலமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனாலும் வணங்காமல் நிற்பேன்.

ஒரு நாள் அம்மா சொன்னார். நீ கடவுளை வணங்குவது தெரியும், என்கிட்ட நடிக்க வேண்டாம் என்று. ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.

(பி.குறிப்பு: இந்தப் புகைப்படம் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. இதனைப் பதிப்பிக்க எனக்குத் தெரிந்த ஆன்மிகம் எழுத வேண்டும் அல்லவா? அதுதான் மேற்கண்ட சிறுகுறிப்பு. மற்ற படி வேறு எதுவும் இல்லை. புகைப்படம் எப்படி உள்ளது? ஏற்கனவே யாரவது வலைப் பதிவில் போட்டிருக்கிறார்களா?)

Image hosting by Photobucket