Jan 3, 2006

கொங்கு நாட்டு காதல் கதைங்ண்ணா!

ஏனுங்க, கொங்கு நாட்டு காதல் கதைன்னா கி.ராஜாநாரயணன், கழனியூரன் ஸ்டைல் கதைன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க. பின் நவீன காலத்துக் கதை. பின் நவீனத்துவம் இல்லை.பின் நவீன 'காலத்து'க் கதை.

எனக்கு ஒரு பிரெண்டுங்க.பையம் பேரு பிரதீப்.மூணேமுக்கால் அடிக்கு கொஞ்சம் ஒசரம்,காக்காய விட நிறம் கம்மியா களையா இருப்பான். ஏதோ பேயடிச்ச சமயமா மனசுக்குள்ள விஜய் மாதிரினு நெனப்பு பூந்துடுச்சுங்க.கூடப் படிக்கற பசங்க எல்லம் டிரவுசர் போட்டு, நாடு புடிச்சு விளயாடுனா, ஜீன்ஸ் போட்டு ஸீன் ஓட்டுன சின்ன மவராசன் அவரு.

எனக்கு ஒம்பாதவது படிக்கறப்பவே லவ்வுனு ஓரே கூடி கும்மியடிச்சது. நம்ம ராசாவுக்கு ஏழாவது படிக்கறப்பவே லவ்வு. அதுவும் மூணு வயசோ, நாலு வயசோ சின்னபுள்ள கூட. பேரக்கேட்டா சொல்ல மட்டாருங்களாமா. பொத்தி வெச்ச காதலு தான் தினமும் பூக்குமாமா! புதுசு புதுசா.கூடப்படிக்கறவன் காதலிக்கறான்னா பேர தெரிஞ்சுக்க ஆசை இருக்குமில்லீங்களா?கேட்டதுக்கு 'நி'னு முடியும், வந்தே மாதரம் பாட்டுல இருக்குதுன்னானுங்க.
நமக்கு வாய்ப்பாடே ஒழுங்கா வராத சமயம் வந்தே மாதரம் பாட்டு எப்படி தெரியும்? டியூஷன் அண்ணங்கிட்ட பாட்டக் கேட்டு சுபாஷிநினு யூகம் பண்ணிட்டேன்.

பையன் பிள்ளை,புள்ள கவுண்டப் புள்ள. ஆனா ரெண்டு வூட்லயும் பழக்கம்ன்ன பழக்கம் அப்பிடி ஒரு பழக்கம்.உங்க வூட்டு பழக்கமா? எங்க வூட்டு பழக்கமா? எப்படி சொல்றது போங்க. அட அது தொலையுதுங்க. ஒழுங்கா படிக்கோணுமா இல்லையா? எனக்கு ஊரு கும்மியடிசுத்துண்ணா இவரு படிச்ச படிப்ப பார்த்து எட்டு ஊரு கூத்தே அடிச்சுது.

இவிய அப்பாதாம் பாவம், இவருக்கெண்ண ஷோக்கு பண்ணிட்டு சுத்தீட்டு இருப்பாரு. பையனப் பெத்தது அவருதானொ? கண்ணுல தண்ணியுட்டு, கையூணி கரணம் பாஞ்சு எப்படியோ காலேசுல சீட் வாங்கி குடுத்து படிக்க வெச்சு சேத்திட்டாரு.

கொஞ்ஜ நாளைக்கு முன்னாடி இங்க இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ஒரு ஜோஸியகாரன் வந்துருக்குறான். புள்ள பேரையும் பையம் பேரையும் சொன்னா, அவியளப் பத்தி புட்டு புட்டு வைக்கிறான்னு. மூணு நிமிஷத்துல "பிரதீப்,விகாஷினி"னு நாலந்ஞ்ஜு ரிப்ளை அனுப்பிட்டான்.ஏழெட்டு வருஷமா சொல்லாதத ஒன்றரை நிமஷத்துல சொல்லிட்டாம் போங்க.

ஊருக்குள்ள ஒரு நோம்பி நொடி வந்துடக்கூடது பாருங்க. பளிச்சுனு வெள்ளையுஞ்சுள்ளையுமா கார கிளப்பிட்டு அந்தப் புள்ளை ஊட்டுக்கு போயிடறது. அவிய அம்ம கிட்ட ஆசிர்வாதம் வாங்கப் போனன்னு வாய் கூசாம புரடை அடிப்பான்.

பையனுக்கு கவுண்டனுக மேல அத்தன பிரியம் இவன் கூடப் பழகற பசங்க எல்லாம் கவுண்டப் பசங்க தான். எதாவது பெருசு இவனப் பார்த்து தம்பி எந்தக் கூட்டம்னு கேட்டாப் போதும் பத்து நாளைக்கு சோறு எறங்காது(கவுண்டர் ல நிறைய கூட்டம் இருக்குதுங்க). கேட்டா காதலுங்கறான்.என்னங்க பண்றது?

கவுண்டனுக ஒரு மார்க்கம் டா, வீசிடப் போறாங்கனா "ஏ சூர்யா கவுண்டந்தான், ஜோதிகாவ டாவடிக்கலையா"னு லோலாயம் பேசுறானுங்க.

ஏதோ நல்லதா இருந்து, நல்லா இருந்தா சரி.

என்ன நாஞ் சொல்றது?