Jan 27, 2006

அண்ணா காசியண்ணா என்னங்கண்ணா இது?

போன வெசாலம் பொட்டியத்திறந்தா ஒரு கடுதாசிய அனுப்பி மிரட்டி இருக்கீங்க.
//மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் தங்கள் பதிவுக்கு தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படும் வசதியைத் தொடர இயலாமல் போகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். இது 28 ஜனவரி 2006 முதல் நடைமுறைக்கு வரும்//

நாம எல்லாம் சாபுட்டு வேர்ல வேலை செய்யாம ஏதோ இரும்படிக்கற பட்டரைல இருக்கிறனுங்க. அங்க உக்காந்து தமிழ்மணத்த தெறந்தா பொடனி மேல சாத்திப் போடுவாங்க.வூட்டுல கம்பியூட்டர் வெச்சு கதை எழுதறதுக்கும் இன்னும் வசதி வரலீங்க. ஏதோ சென்டருக்குப் போனமா, தட்டி யுட்டமான்னு இருக்கிறனுங்க. நீங்க பாட்டுக்கு பொசுக்குனு இப்புடி சொன்னா பொழுதினிக்கும் போயி காச கரியாக்கோணும் இல்லீங்களா?அப்புறம் இந்த செலவுக்கு வூட்டுலயே கனேஸன குடுதுடலாம்ங்க என்ன சொல்றீங்க?

ஏன்னா இப்பொ நம்ம ராம்கிகோ, கணேஷுக்கோ இல்லீண்ணா நம்ம இளவஞ்ஜிக்கோ இந்த பொழப்பு கெட்ட மணியன் மொக்கைய போடறான்னு தோணுனா அன்னனிமஸா எதாச்சும் எழுதுவாங்க இல்லீங்களா? இப்பொ அத தடுத்து அவிய கொரவலிய நசுக்கற மாதிரி இல்லீங்களா? என்ன நாஞ்சொல்றது?

ஆனா என்னங்க உங்கள மாதிரி அனுபவஸ்தர் சொன்ன எதாச்சும் அர்த்தம் இருக்கும்னு நானும் நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டனுங்க(இல்லைன்னா தொரத்தி உட்ருவீங்க!).

அப்புறம் அனானி நீங்க எல்லாம் பீல் பண்ணாதீங்க. 'பச்ச'க் கலர் இல்லாமா, பொறம்பொக்கு பொத்துடானு சொன்னீங்கனாக் கூட நான் போட்றுவனுங்க.
வணக்குமுங்க.

Jan 17, 2006

இலக்கியத்திற்கான நோபல் பரிசு.

2005 ஆம் ஆண்டின், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த ஹெரால்ட் பிண்டருக்கு (Herald Pinter ்) வழங்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாடக ஆசிரியராக அறியப்படும் இவர், 1930 ஆம் ஆண்டு கிழக்கு இலண்டனின் ஹாக்னி மாவட்டத்தில் யூத இனத்தைச் சார்ந்த தையற்காரரின் மகனாகப் பிறந்தார்.

தனது இளமைக்காலத்தில், யூத எதிர்ப்புணர்வின் (anti-semitism்) காரணமாக கடுமையான மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார். தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார். இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டு, கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார்.

நாடகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, நாட்டுப்புற நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய பிண்டர், தான் இயற்றிய 'த பர்த்டே பார்ட்டி' (1957) என்னும் நாடகத்தின் மூலம் பலரது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். இந்நாடகம் விசித்திரமான, தனித்துவம் மிக்க நடையைக் கொண்டிருந்தது. குரூரத்திற்கும், வெறுமைக்குமான இணைப்பினை நிறுவியிருந்தார் பிண்டர். இது விவாதங்களை நிறுத்தி, அந்த விவாதங்களை, கண்டறியவியலாத ஆழமான உணர்வுகளாக மாற்றியது.

பிண்டரின் கதாப்பாத்திரங்கள் கொண்டிருந்த உள்மன பயங்கள், ஆழமான ஆசைகள், தீர்க்கப்படவியலாத காம வேட்கைகள்யாவும் அதுவரையிலும் பிழைப்பிற்காக கட்டமைக்கப்பட்டிருந்த வாழ்வியல் முறைகளை தகர்த்தெறிபவைகளாக, அவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தன. வழக்கமாக மூடப்பட்ட அறைக்குள், கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவைகளின் நடவடிக்கைகள்யாவும், செறிவு மிகுந்த வலியூட்டும் சோகமான விளையாட்டை ஒத்திருக்கும். பெரும்பாலான தருணங்களில், நடிகர்களின் பாவனைகள், வசனங்களுக்கு நேர் மாறானதாக அமைக்கப்பட்டு, பார்வையாளனை தனது மூர்க்கமான பிடியினுள் சிக்க வைப்பது இவரது பாணி.

அரிதான இவரது நாடக நடையும், மெளனங்களும் அதுவரை அறியப்படாத சாத்தியப்படத்தக்க, வித்தியாசமான நாடகச்சூழலைக் கொண்டு வந்தது. இப்புதிய நாடகச்சூழல் 'பிண்டெரெஸ்க்யூ' என்றழைக்கப்படுகிறது.

'கேர் டேக்கர்' (1959) பிண்டரின் மற்றொரு படைப்பு. இரு சகோதரர்களின் உறவில் ஒரு முதியவரின் இருத்தலும், அதன் விளைவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்த இந்நாடகம், இவரை வணிக ரீதியில் வெற்றியாளராக்கியது. வேறொரு படைப்பான, 'ஹோம்கம்மிங்' (1964), ஆண்களால் நிரம்பியிருக்கும் வீடொன்றினுள் பெண் நுழைவதால் மறைத்து வைக்கப்படும் கட்டுப்பாடற்ற வன்முறைகளையும், குழப்பமான காம உணர்வுகளையும் வெளிப்படுத்தி மிகுந்த கவனம் பெற்றது.

தொடர்ந்து 'த பேஸ்மெண்ட்'(1966), 'த டீ பார்ட்டி'(1964), 'ஓல்ட் டைம்ஸ்'(1970), 'நோ மேன்'ஸ் லேண்ட்'(1974) என புகழ் பெற்ற நாடகங்களை இயற்றினார். எண்பதுகளில், 'எ கைண்ட் ஆ·ப் அலாஸ்கா'(1982), 'ஒன் பார் த ரோட்'(1984), 'மெளண்டைன் லேங்குவேஜ்'(1988) ஆகிய ஓரங்க நாடகங்களை இயற்றினார்.

தனது நாடகங்களின் நுட்பங்கள், செறிவூட்டுவதற்கென செய்யப்பட்ட நுணுக்கங்கள் குறித்து நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்கும் கூட விளக்க மறுக்கும் பிண்டர், அமைதியை கொண்டாடுபவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்.

"நாம் கேட்கும் பேச்சு, நாம் கேட்காதவற்றின் குறியீடு. எப்போதும் வன்முறையாகவும், ரகசியமாகவும் தொடர்ந்து நகர்கிறது. பேச்சு கொணரும் புகைத்திரை, மற்றவைகளை அவற்றின் உண்மையான இடத்தில் வைக்கிறது. அமைதி குலையும் போது நாம் எதிரொலிப்புகளுடன் விடப் படுகிறோம். அமைதியால் நிர்வாணத்தின் அருகாமைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, நிர்வாணத்தை மறைக்கும் தொடர்ச்சியான தந்திரமாகப் பேச்சு செயல்படுகிறது" எனக் குறிப்பிடும் பிண்டரின் இந்தப் பார்வையே, இவரின் நாடகங்களிள் தென்படும் ஆழமான மெளனங்களின் அடித்தளம்.

1981 இல், மெரில் ஸ்டிரீப் மற்றும் ஜெர்மி ஐயர்ன்ஸ் நடித்து வெளி வந்த 'த பிரெஞ்ச் லெப்டினென்ட்'ஸ் வுமன்' என்னும் திரைப்படம், ஜான் பவலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் திரைக்கதை அமைத்ததற்காக ,பிண்டர் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

எண்பதுகளில், மார்கரெட் தாட்சரின் சந்தைப் பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பிண்டரின் செயல்பாடுகள் அதே காலகட்டத்தில் வேகமாக அரசியல் நோக்கித் திரும்பத் துவங்கின. அமெரிக்க-பிரிட்டிஷ் அரசுகளின் போர் நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிண்டர், 2003 இல் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பிற்கு எதிராகத் தன் கருத்துக்களை கவிதைத் தொகுப்பொன்றில் பதிவு செய்தார்.

தனது நாட்டின் அரசு குறித்தும், உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர், இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும், உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 'கெய்ட்டிஸ்' என்னும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று, அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார். பி.பி.சி இவரின் 75 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவர் இயற்றிய 'வாய்சஸ்' என்னும் வானொலி நாடகத்தை கடந்த மாதம் ஒலிபரப்பியது.

ஒரு எழுத்தாளர், பிண்டரை "நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும், கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்ச்சியான கேள்வியாளர்" எனக் குறிப்பிடுகிறார்.

நன்றி:www.tamiloviam.com

Jan 15, 2006

சொற்கள்-எனக்கு பிடிக்காத கவிதை ஒன்று!

சொற்கள்
தொலைந்து போகின்றன.

இரவில்
மனிதர்களை வட்டமிட்டு
விடியலில்
பனித்துளி கசியும்
புற்களினூடாக புதைந்து
கொள்கின்றன.

பற்களின் இடுக்கு
தொலைபேசியின் திருகலான
வயர் அல்லது
பக்கத்துவீட்டு கதவின்
அடிப்பகுதியில்
என சொற்கள்
சிக்குண்டு கொள்ளும்
இடங்கள் பற்றித் தெரியும்.

நேற்று
ஏ.டி.எம்-ன்
பணம் வெளியேறும்
துளையில் சொல்லொன்று
ஒளிந்திருப்பதைக்
கண்டேன்.

சொற்களுக்கு
இப்போது தேவை
நல்ல ஒரு இடம்-
மனித வாடையற்று.

Jan 5, 2006

உன்னதம் இலக்கிய இதழ்-அறிவிப்பு

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் பங்களிப்புடன் "உன்னதம்" இலக்கிய இதழ் இனி மாதந்தோறும் வெளிவருகிறது.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் ஆதரவுடன் புதிய வடிவத்தில். தமிழ் இலக்கியத்தின் அடுத்த தளம் நோக்கி,

ஆசிரியர்: கௌதம சித்தார்த்தன்.

தொடர்புக்கு
உன்னதம்,
ஆலத்தூர்,
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம்.

தொலைபேசி: 04256 243125
094432 24945

மின்னஞ்சல்: unnatham@gmail.com
unnatham@rediffmail.com

ஏற்கனவே இந்த அறிவிப்பு திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் மின்னஞ்சல் விடுபட்டுள்ளது.வெளிநாடு வாழ் இலக்கிய ஆர்வலர்கள் மின்னஞ்சல் மூலாமகவும் தொடர்பு கொள்ளலாம்.

Jan 3, 2006

கொங்கு நாட்டு காதல் கதைங்ண்ணா!

ஏனுங்க, கொங்கு நாட்டு காதல் கதைன்னா கி.ராஜாநாரயணன், கழனியூரன் ஸ்டைல் கதைன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க. பின் நவீன காலத்துக் கதை. பின் நவீனத்துவம் இல்லை.பின் நவீன 'காலத்து'க் கதை.

எனக்கு ஒரு பிரெண்டுங்க.பையம் பேரு பிரதீப்.மூணேமுக்கால் அடிக்கு கொஞ்சம் ஒசரம்,காக்காய விட நிறம் கம்மியா களையா இருப்பான். ஏதோ பேயடிச்ச சமயமா மனசுக்குள்ள விஜய் மாதிரினு நெனப்பு பூந்துடுச்சுங்க.கூடப் படிக்கற பசங்க எல்லம் டிரவுசர் போட்டு, நாடு புடிச்சு விளயாடுனா, ஜீன்ஸ் போட்டு ஸீன் ஓட்டுன சின்ன மவராசன் அவரு.

எனக்கு ஒம்பாதவது படிக்கறப்பவே லவ்வுனு ஓரே கூடி கும்மியடிச்சது. நம்ம ராசாவுக்கு ஏழாவது படிக்கறப்பவே லவ்வு. அதுவும் மூணு வயசோ, நாலு வயசோ சின்னபுள்ள கூட. பேரக்கேட்டா சொல்ல மட்டாருங்களாமா. பொத்தி வெச்ச காதலு தான் தினமும் பூக்குமாமா! புதுசு புதுசா.கூடப்படிக்கறவன் காதலிக்கறான்னா பேர தெரிஞ்சுக்க ஆசை இருக்குமில்லீங்களா?கேட்டதுக்கு 'நி'னு முடியும், வந்தே மாதரம் பாட்டுல இருக்குதுன்னானுங்க.
நமக்கு வாய்ப்பாடே ஒழுங்கா வராத சமயம் வந்தே மாதரம் பாட்டு எப்படி தெரியும்? டியூஷன் அண்ணங்கிட்ட பாட்டக் கேட்டு சுபாஷிநினு யூகம் பண்ணிட்டேன்.

பையன் பிள்ளை,புள்ள கவுண்டப் புள்ள. ஆனா ரெண்டு வூட்லயும் பழக்கம்ன்ன பழக்கம் அப்பிடி ஒரு பழக்கம்.உங்க வூட்டு பழக்கமா? எங்க வூட்டு பழக்கமா? எப்படி சொல்றது போங்க. அட அது தொலையுதுங்க. ஒழுங்கா படிக்கோணுமா இல்லையா? எனக்கு ஊரு கும்மியடிசுத்துண்ணா இவரு படிச்ச படிப்ப பார்த்து எட்டு ஊரு கூத்தே அடிச்சுது.

இவிய அப்பாதாம் பாவம், இவருக்கெண்ண ஷோக்கு பண்ணிட்டு சுத்தீட்டு இருப்பாரு. பையனப் பெத்தது அவருதானொ? கண்ணுல தண்ணியுட்டு, கையூணி கரணம் பாஞ்சு எப்படியோ காலேசுல சீட் வாங்கி குடுத்து படிக்க வெச்சு சேத்திட்டாரு.

கொஞ்ஜ நாளைக்கு முன்னாடி இங்க இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ஒரு ஜோஸியகாரன் வந்துருக்குறான். புள்ள பேரையும் பையம் பேரையும் சொன்னா, அவியளப் பத்தி புட்டு புட்டு வைக்கிறான்னு. மூணு நிமிஷத்துல "பிரதீப்,விகாஷினி"னு நாலந்ஞ்ஜு ரிப்ளை அனுப்பிட்டான்.ஏழெட்டு வருஷமா சொல்லாதத ஒன்றரை நிமஷத்துல சொல்லிட்டாம் போங்க.

ஊருக்குள்ள ஒரு நோம்பி நொடி வந்துடக்கூடது பாருங்க. பளிச்சுனு வெள்ளையுஞ்சுள்ளையுமா கார கிளப்பிட்டு அந்தப் புள்ளை ஊட்டுக்கு போயிடறது. அவிய அம்ம கிட்ட ஆசிர்வாதம் வாங்கப் போனன்னு வாய் கூசாம புரடை அடிப்பான்.

பையனுக்கு கவுண்டனுக மேல அத்தன பிரியம் இவன் கூடப் பழகற பசங்க எல்லாம் கவுண்டப் பசங்க தான். எதாவது பெருசு இவனப் பார்த்து தம்பி எந்தக் கூட்டம்னு கேட்டாப் போதும் பத்து நாளைக்கு சோறு எறங்காது(கவுண்டர் ல நிறைய கூட்டம் இருக்குதுங்க). கேட்டா காதலுங்கறான்.என்னங்க பண்றது?

கவுண்டனுக ஒரு மார்க்கம் டா, வீசிடப் போறாங்கனா "ஏ சூர்யா கவுண்டந்தான், ஜோதிகாவ டாவடிக்கலையா"னு லோலாயம் பேசுறானுங்க.

ஏதோ நல்லதா இருந்து, நல்லா இருந்தா சரி.

என்ன நாஞ் சொல்றது?