Mar 30, 2005

கலாப்ரியா கவிதை.

சிறிது காலத்திற்க்கு முன்பு திரைப்படபாடலாசிரியரும்,கவிஞருமான(இரண்டிற்க்கும் சம்பந்தம் இல்லை தானே?) நா.முத்துக்குமாருடன் பேசிக்கொண்டிருந்த போது கலாப்ரியா என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார்.

எனக்கு அப்போது அந்தப்பெயர் மிக வித்தியாசமானதாகவும் ஒரு ஈர்ப்புத்தன்மையும் உடையதாக இருந்தது.அந்த கவிதைகளைப்பற்றி ஒன்றும் பெரிதாகநினைப்பு எதுவும் இருக்கவில்லை. நீண்ட நாட்க்களுக்குப்பின்னர் கலப்ப்ரியா வின் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அக்கவிதைகள் பெரும்பாலும் இறுக்கத்தை உண்டாக்குவதாகவும்,சில சமயத்தில் எனக்கு இறுக்கத்தை இளக்குவாதகவும் இருக்கிறது.

ஒரே ஒரு கலாப்ரியா கவிதையை பதிக்கிறேன்.

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

Mar 28, 2005

என் கவிதையும்,விமர்சனங்களும்.

//உயிர்மை வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதையும்,அதற்க்கான விமர்சனங்களும்//

மனுஷ்ய புத்திரனின் வலைப்பதிவில் இடம்பெறும் சிறந்த கவிதைகளுள் இடம்பெறும் தகுதி என் கவிதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.
வளர்ந்துவரும் கவிஞனான எனக்கு இது ஒரு நல்ல பட்டறையாக அமையும் என்பதனால் எனக்கு பிடித்த எனது காதல் கவிதைகளை அனுப்பியுள்ளேன்.
விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன்.

குறிப்பாக பெயரிலி போன்றோரின் காட்டமான விமர்சனத்தை.

1.
உதிர்ந்துவிடும் கண்ணீரை
உள் இழுத்துவிடுகிறாய்.

ஒருவரும் உணர்ந்திடா
சிறு பொழுதில்.

ஒரு இதயம்கசங்கிக்கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக.
மெதுவாக.

2.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

'ஒண்ணுமில்லையே'
என்ற பிரம்மாண்டசொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.ROSAVASANTH said...
நீங்கள் கவிதை எழுதி அதற்கும் (வேண்டுமென்றே) காட்டமான விமர்சனம் வைக்கும் அளவிற்கு பெயரிலி வெறுப்பில் வாழ்பவரல்ல. முதலில் மற்ற மனிதனின் உணர்வுகளை கோபத்தின் அடிப்படையை சிறிதளவாவது புரிந்துகொள்ளும் உந்துதல் வேண்டும். அதற்கு பிறகு இலக்கியம் படிக்க போகலாம், பின் படைப்பதில் ஈடுபடலாம்.

இந்த விமர்சனம் உங்கள் கவிதை மீது அல்ல!

Anonymous said...
ஞான் புலவர் மொத்தினார்க்குமினியராக்கும்.
ஐயா கவிஞரே! எனக்கென்னவோ நீர் கவிதை பன்னவேணுமென்கிறதுக்காகவே பன்னினமாதிரி தோணுது.

1.மொதலாவது கவிதையில
/உதிர்ந்து விழும் கண்ணீரை உள் இழுத்துவிடுகிறாய்/
இது சாத்தியமாய்யா?

பின் நவீனத்துவவாதீங்க சொல்வாங்க சாத்தியமில்லாததை பேசப்புடாதுண்ணு, அவங்க கிடக்கிறாங்க....இதுதான் முன் நவீனத்துலயும் முடியாதே?

/ஒரு இதயம் கசங்கிக் கொண்டிருக்கிறதுமரத்தில் சொட்டும் நீராக/
இங்கேயும் கசங்குதலுக்கான படுமம் சொட்டுதல் ஆகாது கண்ணா.

கசங்கின இதயம் குருதி சொட்டுறதைச் சொல்லுறதானாக்கா கசங்கிங்கிறதை வுட்டுப்புட்டு சிந்திறது என்றதோடை விட்டிருக்கலாம் கண்ணா. அல்லாக்காட்டியும் வேறை வார்த்தை பாவிச்சிருந்தியானாக்கா இன்னும் நன்னா இருந்திருக்கும்.அடுத்த கவிதையை பார்க்கலாமா?

2.
/ஒண்ணுமில்லையே என்கிற பிரமாண்ட சொல்லில்/
'ஒன்றுமில்லையே' எங்கிறது பிரமாண்டமான சொல்லா என்ன?

சிறிய/எளிய சொல்லில் உணர்த்தப்படும் உன் பிரியத்தின் பிரமாண்டம் என்றிருக்கலாம்.

அது சரி, உமக்கு எதுக்குக்காணும் 'பழுத்த இலை ஞாபகம் வர்றது?சுத்த Pessimist டா இருப்பீர்போல இருக்கே?


Jsri said...
///உதிர்ந்துவிடும் கண்ணீரைஉள் இழுத்துவிடுகிறாய்///

என்ன நவீனத்துவமோ, என்ன எழவோ, ஆனா எனக்கு என்னவோ அந்தவரிதான் ரொம்பப் பிடிச்சிருக்கு.

கவிதைலதான் இந்த மாதிரி படிமங்கள் எல்லாம் வைக்க முடியும். உரைநடைல வெச்சாதான் weird ஆ இருக்கும் படிக்க.

அடுத்தது- கசங்கின இதயம், அதை அடுத்த நிகழ்வான குருதி கொட்டுவதையும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான படிமங்களை சேர்த்துப் போட்டிருக்கார்னு சொல்லலாம். அல்லது கசங்குவது 'மெதுவாக' என்பதைச் சொல்ல மரத்திலிருந்து சொட்டும் நீர்போல் மெதுவாகன்னு எடுத்துக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் சரியாத்தானே இருக்கு.

பழுத்த இலை- எந்த சிறு யத்னமுமில்லாம அதுவாவே இயல்பா வலிக்காம அலட்டிக்காம விழும். வார்த்தையும் அப்படி விழுகிறது. வாழ்(வு)ந்துமுடித்த பழுத்த இலை ப்ரும்மாண்டம் இல்லையா? 'ஒண்ணுமில்லையே' கூட நேர, கால சூழ்நிலைகளைப் பொருத்து ப்ரும்மாண்டம் ஆகுமே. இன்னும்கூட நிறைய தோணுது. ஆனா வெளில சொல்லச் சொல்ல கவிதைக்கான அழகு போயிடும். எனக்கு என்னவோ இரண்டு கவிதைகளும் பிடிச்சிருக்கு. ஏன்னேதெரியலை.


Anonymous said...
மொத்தினார்க்குமினியர்: ஞான் ஸொல்றது இன்னக்கா..........கறந்த பாலு முலைக்கேறாது, விழுந்த கண்ணீரை ஒத்தலாம் உறிஞ்சலாமோ?

வெள்ளிக்கிழமைக்கு படிமம்/உருவகம் பன்னிட்டு அது அடுத்து வர்ற ஞாயித்துக்கிழமைக்கெண்டால்இன்னா ஞாயமிது கண்ணா?


Jsri said...
மொத்தினார்க்குமினியர், உதிர்ந்த கண்ணீரைத் துடைத்துவிட்டால் சோகம் போயிடும். உள்ளிழுத்துவிட்டால், சோகம் வெளில தெரியாது அவ்ளோதான். freeze ஆகிற மாதிரி, அல்லது வெளில expose ஆகாத மாதிரி.. இதுக்கு மேல விபரமா சொல்லத் தயாரில்லை. :)


Vaa.Manikandan said...
நன்றி மெத்தினார்க்குமினியர்,ஜெஸ்ரிஎனது சொந்த வேலைப்பளுவின் காரணமாக என்னால்,விவாதத்தில் உடனடியாக பங்கு பெற இயலவில்லை.

ஆயிரம் பிரச்சினைகளை உள்ளடக்கி,"ஒண்ணுமில்லையே" என்று சொல்லும்போது,அது பிரம்மாண்ட பொருளினை பெறும்.

இலை விழும் போது அதன் மீது எந்த தடையும் செயல்படுவதில்லை.ப்ரியமும் எளிமயாக,எந்த விகல்பமும் இல்லாது இருக்கிறது.

இதில் நேர்மறை சிந்தனை,எதிர்மறை சிந்தனை எல்லாம் எதுவும் இல்லை.நான் உதிர்ந்துவிட்ட கண்ணீர் என குறிப்பிடவில்லை.உதிர்ந்துவிழும் கண்ணீர் என்பது கண்களில் தேங்கி நிற்பதை கூறலாம்.அப்போது நீர் விழாமல் தடுத்தல் என்பது இயலக்கூடிய காரியமே.

மற்றவிளக்கஙளுக்கு,ஜெஸ்ரி யின் பதில் போதுமானது என நினைக்கிறேன்.

Mar 26, 2005

ஒரு கவிதை

//இது நவீனமா,சொற்க்கூட்டமா என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.கேட்பதற்க்கும்,
விளக்குவதற்க்கும்,மாற்றிகொள்வதற்க்கும்
தயாராகவே இருக்கிறேன்//

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

வா.மணிகண்டன்

எனக்கென ஒரு இடம்

நல்ல படைப்பாளிகள் நிறையப்பேர் எழுதும்வலைப்பதிவில் எழுத எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியாமல் தான் வலைப்பதிவினை உருவாக்கிவிட்டு இவ்வளவு நாள் எதுவும் எழுதாமல் இருந்தேன்.ஆனால் விமர்சனம் எழுதுவதை கூட தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் இங்கு உலவுவது சமீமபாக உணர்ந்தேன்.குறைந்தபட்சம் என் விமர்சனங்களை முன்வைக்கவாவது இந்த வலைப்பதிவு எனக்கு உதவக்கூடும்.

ஆனால் என்னைக்குறித்த எந்த விமர்சனம் எனினும் பதில் சொல்வேன்.எந்த பின்னூட்டமும் இதில் நீக்கப்படாது என்பதும் உறுதி.(ஆபாசம் கலந்த பின்னூட்டங்கள் விதிவிலக்கு).

வலைப்பதிவு/இலக்கிய உலகில் எனக்கு தூண்டுகோலாக இருந்த மனுஷ்யபுத்திரன்,தேசிகன் ஆகியோருக்கு நன்றி.

உத்வேகம் ஊட்டக்கூடிய பின்னூட்டங்களை எனக்கு தந்த ரோசவசந்த்,பெயரிலி-க்கும் நன்றி.
இனி பேசுவோம் சந்திரவதனா.

வா.மணிகண்டன்

புதிதாக நானும்

எதையாவது பேசலாம் என்று இருக்கிறேன்.வலைப்பதிவில் யார் பேசினாலும் கேட்பதற்க்கு யாராவது இருக்கிறார்கள்.புதிதாக நானும்.

வா.மணிகண்டன்