Dec 4, 2005

கட்டுரை : உடலியல் மீது கட்டமைக்கப்படும் கலாச்சாரம்

இன்றைய கலாச்சார நகர்வில், உடலியல் அதன் முழுமையான பகுதியாக இருப்புப் பெற்றுவிட்டது. வன்முறை நிகழ்த்தப்படும் போதெல்லாம் பெண்களின் உடல் மீது இறக்கப்படும் தாக்குதலே, எதிரி அணிக்கான அடியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் -இன்னும் குறுகி- தமிழ்க் கலாச்சாரம் தகர்க்கப்படுகிறது என்னும் குரல் உயரும் போதெல்லாம் உடலியல் தன்னை முன்னிலைப் படுத்தியிருப்பதை உணரலாம்.

உடலியலும் காமமும் மட்டுமே சமூகத்தின் கலாச்சாரக் குறியீடுகளாக நிறுத்தப்பட்டுவிட்டது. தனிமனித நிகழ்வுகளும் அதனையே பிரதிபலித்து அமைகின்றன. கலாச்சாரம்- சமூகத்தின் அமைப்புமுறை, இயல்பான நிலையில் அல்லது சூழல் மாறும் போது சமூகத்தின் நெகிழ்வு,தனிமனித வாழ்வியல் முறைகள் என எண்ணற்ற கூறுகளில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. சமையலில் தொடங்குகிறது எனலாம். ஒரு சமூகத்தின் கலை, அருகாமையிலிருப்பனுடனான உறவுமுறை, விழாக்கள், சடங்குகள், வன்முறைகள், ஏவப்படும் அடக்குமுறைகள் என நூற்றுக்கணக்கான நுண்ணிய கூறுகளின் கட்டமைப்பு.கலாச்சாரம் பரந்த வெளியாகக் கிடக்கிறது. இவ்வெளியை விடுத்து வேறு நிலப் பரப்பில் நின்று நோக்கும் போது- மழை நனைத்து விட்ட கரும்பச்சை நிற இலையின் நரம்பில் காணப்படும் சிறு வெண்புள்ளியாக மட்டுமே உடலியல் இதனில் இருக்கும்.

கலாச்சாரக் கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ஆண்-பெண் உறவு குறித்தான வாதங்களையே தொடர்ந்து முன் வைக்கிறது. ஏற்கனவே காமமே கலாச்சாரம் என தொன்மாக்கப்பட்டுவிட்டதன் செறிவு இன்னமும் கூட்டப்படுகிறது. ஊடகங்களின் ஆழமான ஊடுருவலில், காமம் குறித்தான தேடல் எல்லா மட்டதிலும் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டு நகர்கிறது. இதன் விவரிக்க இயலாத பிரம்மாண்டமே, இதன் கருப் பொருள் குறித்தும், உருவாக்கப்படும் சொற்கள் குறித்தும் மேலும் அதீத தேடலுன் ஊடகத்தை நகர்த்துகிறது.

கலாச்சாரக் காவலர்கள் என தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் யாவரும், பெண்ணின் ஆடைமுறைகளையும், அவளின் அந்தரங்க உணர்வுகளையும் சமூகத்தின் கட்டமைப்பாக்கி காமத்தைக் கூரிய கத்தியின் முனைகளாக சமூகத்தினுள் செருகிக் கொண்டே இருக்கிறார்கள்.இவர்களின் இயங்கியலுக்கு வெறு பல தளங்கள் இருப்பினும், அவை எதுவும் பிரம்மாண்டமான கவனத்தைத் தங்களின் மீது படியச் செய்வதில்லை. உடலியல் மட்டும் புதைக்கப்பட்ட ஆயிரம் ரகசியங்களை சுமந்து கொண்டு திரிகிறது. அவற்றின் புதிர்களை அவிழ்ப்பதில் எல்லோருக்கும் ஏதோவிதமான கிளர்ச்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஏதாவதொரு புள்ளியில் சொற்களோ, சைகைகளோ உடலியல் குறித்து உதிர்ந்து விடும்போது உதிர்ந்தவற்றைப் பொறுக்கியெடுத்து நசுக்குவதற்கென இவர்களின் கரங்கள் தயாராகிவிடுகின்றன. இந்த நசுக்கலில் வடியும் குருதிதான் இவர்களின் நிறைவேறாத நுண்விருப்பங்களில் உண்டான காயங்களின் களிம்பு.

இரு உடல்களின் துகிப்பு தவிர யாவையும் மறந்துவிடப்படும் காமத்தில்- இங்கு மட்டும் தான் மதம், இனம், மொழி என பல துகள்கள் தந்திரமாக திணிக்கப்படுகின்றன்.

பெண்ணியம், தலித்தியம்- இவையெல்லாம் இன்னமும் தங்களின் மேற்புறத் தோலின் செதில்களை மட்டுமே உதிர்த்துள்ளன. இதன் முழுமையான பரப்பினை உணரும் போதும், ஆழமான வினாக்களுக்கு உட்படும் போதும் மட்டுமே தொடர்ச்சியாகப் பின்னப்பட்டு வந்த மரபுகளின் பகுதிகள் அதிரத் தொடங்கும். அதுவரையிலும் கலாச்சாரம் தொடர்பாக எழும் எந்த அதிர்வும், ஆண்-பெண் உறவு முறைகளில் மட்டும் மாற்றத்தைக் கொணரலாம். அடுத்த தளத்திற்கு கலாச்சாரம் நகர்கிறது என்பதெல்லாம் விவாதமாகவே நின்று கொண்டிருக்கும். போராட்டங்களின் வெற்றியில்- அடையாளமற்ற ஆசை ஒன்றினை வேறொரு வடிவத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வா.மணிகண்டன்.
நன்றி:www.tamiloviam.com