Nov 24, 2005

பெண்ணியமும் வறட்டுக் கூச்சலும்

குழந்தை பெற்று மதத்தைக் காப்பாற்றுங்கள்.ஆர்.எஸ்.எஸ் தலைமை இவ்வாறு கதறியிருக்கிறது.அவர்கள் முன் வைக்கும் வாதம்- ஒப்பீட்டளவில் இந்து மதத்தை பின்பற்றுவோரைக் காட்டிலும், மற்ற மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பது.இந்துக்குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதத்தின் வலுக் கூட்டப்படும் என்கின்றனர்.

களைகளினூடாக மத்ததை வலுப்படுத்த எண்ணிக்கை காரணியாக அமையாது. இந்த விவாதத்தில் எனக்கு நாட்டம் இல்லை. இரைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் அமைப்புகள் இங்கு தலையிடுகின்றன.

பெண்ணியம் பேசும் பெண்களில் பெரும்பான்மையானோர் இந்திய கிராமப்புற பெண்களின் ஜீவாதாரமான பிரச்சினைகள் குறித்தான கவலை கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சானியா மிர்ஸாவின் குட்டைப் பாவாடை, குஷ்பூவின் ஆண் பெண் உறவு முறைகள், ஆர்.எஸ்.எஸ் இன் விவாதம் போன்ற ஊடகங்களினால் செறிவூட்டப்பட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து சிதறி விழும் வெளிச்சத்தினை தங்களின் முகத்தில் படியச் செய்துகொள்வது மட்டுமே இவர்களின் பெரும்பணி.

காமம் சார்ந்த-மேற்குறிபிடப்பட்ட விஷயங்களை ஓடியவற்றை மட்டும் கையிலெடுப்பது மட்டுமின்றி, பெண்களின் மீதான வன்முறைகளில் உடலியல் குறித்தானவை தவிர எதுவும் இல்லை என்னும் படிமத்தையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தின் முதுகெலும்பே தாங்கள் தான் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஒரு மத அமைப்பு தனது மதம் குறித்தான கருத்தினை, தனது மதத்தினருக்கு தெரிவிக்கும் போது இவர்கள் ஏன் தலையிட வேண்டும்?(இது ஒரு வாததிற்காக முன் வைக்கிறேன். எதிர்ப்பதும் அவர்கள் உரிமைதான்)

இவர்கள் சொல்லும் கருத்துகளில் நியாயம் இருக்கலாம்.இருக்கும். ஆனால் இந்த மாதிரியான விவாதங்களில் மட்டும் நுழைந்து தங்கள் இருத்தியலைப் பதிவு செய்து கொள்வதோடு நில்லாமல் , இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்வதில்தான் வேறுபடுகிறேன்.

இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கான வழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.

பப் குறித்தோ, குடிப்பது குறித்தோ நைட்கிளப்புகளில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பதால் ஒன்றும் நிகழந்து விடப் போவதில்லை.

ஊடக வெளிச்சம் மட்டுமே பெரிதாகப் படும் இவர்கள் குறித்துப் பேசுவதும் நையாப் பைசா பிரையோஜனம் இல்லாத குஷ்பூ விவகாரம் பற்றி பேசுவதும் ஒன்று தான்.

Nov 21, 2005

ஃபைவ்ஸ்டார் ஓட்டலும் பட்டையைக் கிளப்பலும்

இரண்டு நாளைக்கு முன்னாடிங்கண்ணா, இங்க ஒரு கன்ஃபரன்ஸோ, கருமாந்திரமோ ஒரு ஃபைவ்ஸ்டார் ஒட்டலுக்குப் போனனுங்க! எல்லாரும் சொர்புர்னு அஸென்ட்லயும்,ஸ்விப்ட்லையும் வந்தாங்க.நானு கூட வந்தவன் ஸ்கூட்டர்ல தொத்திட்டுப் போக வேண்டியதா இருந்துச்சு.ஆளாளுக்கு ஆட்டையப் போடறன்னு சொல்லிட்டு மொக்கையப் போட்டுத் தள்ளிட்டாங்க.

எனக்கா ங்கொக்கமக்கா குளிர்காலத்து அவசரம்.ஆனது ஆயிப்போச்சுடா மணி கொஞ்சம் பொறுத்துக்கடானு உக்காந்தா, டீ குடுக்கறன்னு சொன்னாங்க.உட்றா சவாரினு ஓடி போயி
காரியத்த முடிச்சுட்டு வந்து டீய ஒரு மொடக்கு குடிச்சா உள்ளயே எறங்க மாட்டீங்குது. சுப்பன்ங்கட டீதானுங்க நம்மள்ளுக்கு தேனு மாதிரி.எடுத்துப் போட்டம். கீழயும் ஊத்த முடியாது.அவனவன் பட்டும் படமா குடிக்கிறானுக!நானும் அவங்கள மாதிரி உதடு படாம குடிச்சா சட்டைல ஊத்துது.மேல ஊத்தி கீழ ஊத்திட்டு கிடக்கிறக்கு நமக்குத்தெரிஞ்ச மாதிரியே குடிச்சுப் போடறது உசத்தி இல்லீங்களா?.

அது முடிஞ்சு போயி உக்காந்தா கண்ணுக்கு லட்சணமா செவப்பா ஒரு புள்ள எதோ
பேசுனாளுங்க.என்ன பேசுனானு எல்லாம் நான் கவனிக்கறதுல்லீங்க.அதே மாதிரிதான் கேள்வி கேக்கறதும். வந்தமா பொட்டாட்ட உக்காந்தமானு இல்லாம தொணதொணனு கேள்வி கேக்கறது என்னங்க கெட்ட பழக்கம்.

அப்படியே இருந்தா சோத்துக்கு போறவிய எல்லாம் போலாம்னு சொன்னாங்க, நாம மட்டும் எந்திரிச்சா நல்லா இருக்காதுனு பார்த்தா,அட மொத்த சனமும் எந்திருச்சுருசுங்க.காலு நெலத்துல நிக்கமாட்டீங்குது.

உள்ள பூந்து பார்த்தா ஏகப்பட்டது வருசையா அடுக்கி வெச்சுருக்காங்க.போகையலயே நம்ம கூட இருக்குற பசங்க எல்லாம் சொன்னாங்க."மச்சா,இதான் சாக்குன்னு எல்லாத்தையும் ருசி பாக்கலாம்னு நெனச்சீன்னா,நல்லத திங்க முடியாதுனு".சரின்னுட்டு ஒரு நோட்டம் வுட்டேன். ஒரு பத்து,பதினாறு வகை.எத எடுக்கறது,எத வுடறதுனு தெரியல.பேர பாருங்க.சாமீ வாயுலயே நுழைய மாட்டீங்குது.படிப்புதான் எம்.டெக்கு. நாந்தான் சொல்லிக்கோணும்.

எங்க அமத்தாவக் கூட்டிட்டு வந்துருந்தா, கண்ணுல தண்ணி உட்டுருக்கும். பேர்களப் பாத்து. அடப் பேரு தான் இப்படின்னா சைவமா,அசைவமானு தெரியலை.

வக்காலி,அசைவம் மட்டும்தான் திங்கறதுங்கற முடிவுல போயாச்சு. நூடுல்ஸாவது,வெங்காயமாவது.வெங்காயானு எதோ வெச்சிருந்தாங்க.சத்தியமாத்தானுங்க.ஒரு பேரு வெளக்கமா இருந்துச்சுங்க 'ஐதரபாத் தம் கி பிரியாணி' நு.அட்றா...அட்றா...அப்புரம் பார்த்த 'ஆந்திர
சிக்கன் மசாலா' அடேசாமி ரெண்ட மட்டும் மூக்குல ரெண்டு சோறு எட்டிபார்க்குற அளவுக்குத் தின்னேன்.

பொக்குனு போயிடக்கூடாதுனா கொஞ்சம் தயிரும் ஊத்திச் சாப்பிடுன்னு எங்கம்மா சொல்லுவாங்களா.கொஞ்சமா ஒரு ஒணேமுக்கா கரண்டி தயிர ஊத்தி கொழச்சு அடிச்சுட்டு இருந்தப்ப, ஐஸ்கிரீம் கண்ணுல பட்டுச்சு.

அங்க போனா சாக்லேட்டுனு சூடா ஒண்ணு குடுத்தாங்க. ஜில்லுனு ஒண்ணு குடுத்தாங்க. சூட்டையும்,குளிரையும் ஒண்ணா தின்னா பல்லு போயிரும்னு தெரியும்.என்ன பண்ரதுன்னு தெரியாம முழிச்சு, ஒரு கோட்டு போட்ட தாத்தாவ நான் பார்த்தா, அவரு என்ன பண்றன்னு என்னைய பாக்கறாரு. அடிச்சு உடுடானு இரண்டையும் சேத்தி அடிச்சா, அவரும் நம்மளை மாதிரியே பண்றாரு.

எல்லாம் தின்னு முடிச்சுட்டு வெளிய வந்தா, கூட வந்தவன் சொல்றான்(சோத்து முசுவுல அவன இதுவரைக்கும் பாக்காவே இல்லீங்கோ!) கோழி பிரை நல்லா இருந்துச்சுன்னு.

அட விசாரிச்சு பார்த்த அந்த கெரகத்த நான் காலிபிளவர்ன்னுல உட்டுட்டு வந்தேன்.மனசே ஆறல போங்க. அது சரி இந்த பஃபே ல கையெல்லாம் வலில நடுங்க ஆரம்பிச்சுடுதுப, உட்காந்து இலைல சோறு போட்டு குழைச்சு அடிக்கிற மாதிரி வருமுங்களா? சொல்லுங்க பார்க்கலாம்.

Nov 16, 2005

ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா!

சென்ற வார நட்சத்திரம் கணேஷிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்."யோவ் மணி,சென்சிடிவான மேட்டர தான் எழுதுவியா?"னு. ரஜினி ராம்கி "இப்படியே தொடருங்கள்"னு சொல்றாரு.

ஏன்?ஜாலி மேட்டர் எழுதலாமே!

எங்க ஊருல 'டவுசரு தங்கராசு'னு ஒரு 'ஆ'சாமி. டவுசருன்னா-டவுசரு தெரியற மாதிரி-பட்டை போட்ட காடாத்துணி டவுசர்-வேட்டி கட்டுவாரு. ரைமிங்கா யாரோ பேரும் வச்சுட்டாங்க.அண்ணன் தம்பிக மூனு பேர்லயே அதிகமா நாலாவது வரைக்கும் படிச்சவரு. வாத்தி பொண்ணுக்கு 'ரூட்' போட்டதுல துரத்தி விட்டுட்டதா சொல்வாரு. தினத்தந்திய மட்டும் கரைச்சு குடிப்பாரு. சுப்பு கடை டீ ல போட்டு. லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம்-அதுவும் இன்டர்னேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம் இவரு கிட்ட தான் கேட்டு தெரிசுக்குவாங்க.சும்மா அடிச்சு உடுவாரு.அமார்த்தியா சென் கணக்கா.

தலையோட வேலையே ஊருக்குள்ள பேரு வைக்கிறதுதான்.பேருன்னா பட்டாசும் கிளப்பும்.பற்றியும் எரியும்.வவுறன்(வயிறு உடையோன் என்பதன் மரு உ), பின்னூசியான், கடுவான் இந்தப் பேரு எல்லாம் பிரச்சினை கிளப்பாத பேருக.

கல்யாணம் ஆகாத ஆளு. பிரம்மச்சாரினு எல்லாம் சொல்ல முடியாது. அங்க,இங்க போய் காசு சம்பாதிச்சு, காரு வாங்கி, வூடு கட்டி அரைவயசுல என்ன சந்தோஷம், இங்க வா உலகத்த நம்ம ஊருக்கு கொண்டு வரலாம்னு சொல்ற மனுஷன்.

சரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லையா? இருக்கே. என்னை மாதிரியே கவிதை எழுதி மத்தவங்க கழுத்த அறுக்கிறது, நோன்பி(திருவிழா)னு வந்தா மைனர் ஷோக்கு பண்ணி-மூஞ்சி நிறைய பவுடரு பூசி-கலர்க் கண்ணாடி போட்டு பார்க்கிறவங்களை தலை தெறிக்க ஓட வைக்கிறது, 'சீன் பாத்'(வாய்க்கால்ல பொண்ணுக குளிக்கிற இடம்) எடுக்கிறன்னு சொல்லி ஜிகினா வேலை பண்ணுறதெல்லாம்,ராசவுக்கு பொழுதுபோக்கு.

'வலைப்பதிவுகள்' குறித்து கூட டவுசருக்குத் தெரியும். சில பேர்களை எல்லாம் தெளிவா சொல்லுவாரு. சரி இவரை பத்தியே சொல்லிட்டு இருந்தா எப்படி இதை முடிக்கிறது.ஆங்! ஒரு விஷயம் இருக்கு.நம்ம கணேஷ் க்கு பேரு வெச்சாரு.அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது.எனக்குத் தெரியாது.

பேரு தெரியுமா? "ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா".

Nov 13, 2005

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்?.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் "இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்","வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்".

கருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.

மிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.

முகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.

இதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.

இந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.


ஜாலியா முடிகலாமா? சிறுபுள்ளத்தனமா என்னையும் திட்டாதீங்க....

Nov 12, 2005

கடலை போடலையோ கடலை!

கல்லூரிக் கடலை குறித்து விட்டத்தை பார்த்து கிடந்த சமயம் வந்த மின்னஞ்சல் இது.நாம்ம கொஞ்சத்தை 'உல்டா' அடிச்சு பண்ணினது.


மணி,அனிதாவுக்கு ரிங் பண்ணுறாம் பா

அனிதா: சொல்லுடா!

மணி: வாட் த டூயிங்?

அனிதா: இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். சார் என்ன பண்ணிட்டு இருக்காரு?

மணி: இப்போ தான் 'சுட்டும் விழி சுடரே' பாட்டு பார்த்தேன் சன் மியூசிக்ல

அனிதா: நல்ல பாட்டு.

(அனிதா பாடுறா..."மழை அழகா,வெய்யில் அழகா")

மணி: அப்பா!! நீ இவ்ளோ நல்லா பாடுவியா?(ஆரம்பிச்சுட்டான் யா)

அனிதா: *சிரிப்பு*

மணி: ஏய். இன்னொரு வாட்டி பாடேன்

அனிதா: என் ரூம் மேட் தூங்கிட்டா. அவ பயந்துடுவா பா(சீன பாருங்க)

மணி: கம் ஆன்! ப்ளீஸ் டா!

அனிதா: போடா. ஐ டோன்'ட் சிங் தட் வெல்

மணி: இட் வாஸ் ரியலி ஸ்வீட். ப்ளீஸ் பாடேன்

அனிதா: எனக்கு ஆட் ஆ இருக்கு டா

மணி: இதுல என்னமா இருக்கு?நான் தானே இருக்கேன்.நல்ல பாடறே.

அனிதா: நீ தான் சொல்லணும்

மணி: இப்போ பாடுவியா மாட்டியா?

அனிதா: ஏண்டா படுத்தறே

மணி: சை?சரி! ஓ.கே

அனிதா: ஐ டோன்'ட் கேவ் தட் கிரேட் வாய்ஸ்

மணி:ம்ம்ம்ம்

அனிதா: ஸரி. இவ்ளோ கேக்கறே. உனக்காக ஒரெ ஒரு லைன் பாடறென்(சுசீலா பா :))

மணி: கிரேட்!!(வழியல்)

அனிதா: எந்த பாட்டு பாடட்டும்? (ம்ம்ம்...சோதனை மேல் சோதனை)

மணி: ம்ம்ம்ம். 'உன் பெரை சொன்னலே' ஃப்ரம் டும் டும் டும்?

அனிதா: நைய்ஸ் சாங். பட் எனக்கு லிரிக்ஸ் ஞாபகம் இல்லை

மணி: சின்ன சின்ன ஆசை?

அனிதா: இல்லை இந்க பாட்டெ பாடறேன்

மணி: வாவ்!

(மேம் தொண்டையை ரெடி பண்ணிட்டு ரெண்டு லைன் பாடுறாங்க(சகிக்கலை)

அனிதா: இல்லை வேன்டாம். ஐ அம் ஃபீலிங் வெரி ஷய்!

மணி: பாடு சே பாடு. உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே ச்சே. பாடு

அனிதா: கலாட்ட பண்ற பார்த்தியா

மணி: நோ நோ. நீ ஷய் ஆ ஃபீல் பண்ற இல்லையா.ட்ரையிங் டு மேக் யூ கூல்

அனிதா: ம்ம்ம்

மணி: ப்ளீஸ் பாடேன் டா செல்லம்

அனிதா: நாளைக்கு பாடட்டுமாஅ?

மணி: ஸரி மா. உனக்கு எப்படி தொன்றதோ அப்படியே பண்ணு

அனிதா: ம்ம்ம்

மணி: குட் நைட்

அனிதா: குட் நைட்

கொஞ்ஜம் நேரம் கழித்து அனிதா,மணிக்கு ஃபோன் பண்ணுறா.

அனிதா: தூங்கிட்டயா?

மணி: இல்லை மா. மேட்ச் பார்த்துண்டு இருந்தேன்
(ஐயர் பாஷை சும்மா சீன் க்கு)

அனிதா: ஸரி. நீ மேட்ச் பாரு

மணி: ஏய். இட்ஸ் ஓ.கே. பழைய மேட்ச் தான்.

அனிதா: இல்லை. டிட் யூ ஃபீல் பேட் ஐ டிட்ன்'ட் சிங்?

(இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி.ஐயா யோசிக்கறாரு)

மணி: பேட் அப்படினு சொல்ல மாட்டேன். பட் ஐ வான்ட் யூ டு பி கம்ஃபொர்டபிள் ஃபர்ஸ்ட்.
நாளைக்கு பாடரென்னு சொன்னே இல்ல. சோ மீ வெயிட்டிங்
அனிதா பாடுறா.

மணி: வாவ். டூ குட்!

அனிதா: போறும். ஐ நோ கவ் கேவலம் மை வாய்ஸ் ஈஸ்

மணி: ஏய் யூ ரியலி சிங் வெல்.

அனிதா: போடா...நீ சொல்லனுமே அப்படினு சொல்றே

மணி: சே! சே! உன் வய்ஸ் நல்லா இல்லாடி நான் இவ்ளோ கெக்காவே மாட்டேன்

அனிதா: ம்ம்ம்ம்

மணி: நீ இவ்ளோ நல்லா பாடுவேனு எனக்கு தெரியாது(தெரிஞ்சிருந்தா?)

அனிதா: ம்ம்ம்! ஸரி குட் நைட்

மணி: குட் நைட்!

அனிதா: டேக் கேர்

மணி: யூ டூ

அனிதா: நெஜமாவே என் வாய்ஸ் நல்லா இருந்ததா(பார்றா)

மணி: நெஜமா! அஃப்கோர்ஸ்.

அனிதா: நீ பொய் சொல்றே

மணி: நாட் அட் ஆல். யூ சிங் வெரி வெல்

அனிதா: ம்ம்ம். என்னமோ சொல்றே. குட் நைட்.

மணி: குட் நைட்!!

Nov 10, 2005

புதிய வலைப்பதிவாளர்களே!

சில ஐடியாக்கள்.உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.

1)தனிப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நடத்துங்கள்.
2)"குஜால்" மேட்டராக தொடருங்கள்.
3)தெரிகிறதோ இல்லையோ எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமிடுங்கள்.
4)குஷ்பூ,தங்கர்,ரஜினி,ராமதாஸ் - பட்டாசான மேட்டர்.
5)கவிதை-நமுத்த மேட்டர்
6)பண்பாடு என்றாலே கிழித்தெறிய வேண்டும் எனக் கூவுங்கள்
7) சண்டைக்கென இருக்கும் சிலரை தொடர்ச்சியாக வம்பிழுங்கள்.
8)நினைவில் நிறுத்துங்கள்.நீங்கள் தான் இந்த சமுதாயத்தைத் திருப்பிப் போட வந்த முற்போக்குச் சிந்தனாவாதி.
9)முடிந்தால் இலங்கை குறித்து எழுதுங்கள்.இந்தியா...ம்ம்ம்ம்...'மூச்'
10)ஒவ்வொரு கமெண்டுக்கும் பதிலிடுங்கள்.100,200 ஐ த் தொடும் வரை. உதாரணத்திற்கு நிறைய பேர் உண்டு.
11)இலக்கியம் படித்ததில்லையா?கவலை வேண்டாம்.எழுதுங்கள்.அதுதான் தேவை.
12)பெண் பெயர் என்றால் மிக்க சந்தோஷம்.
13)ஜல்லியடித்தல் என ஒன்று உண்டு. மிக முக்கியமான விஷயம் அது. தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
14)பெயரில்லாமல் யாராவது திட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
15)கடைசியாக ஒன்று.கேள்வி மட்டும் கேட்டு விடாதீர்கள்.