Sep 28, 2005

நடுங்க ஆரம்பித்திருக்கும் இந்திய அரசு.

21 பில்லியன் டாலர் மதிப்பு,25 ஆண்டுகள்,ஒரு பேரல் 31 டாலர் மட்டுமே.ஒரு மாபெரும் திட்டம் நாசம் அடைந்திருக்கிறது.ஈரான் இந்தியா இடையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு(குழாய் மூலம்) திட்டம் நிறுத்தப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரமான,பயந்த மனநிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் நாள் உலக அணு அற்றல் மையத்தில்,ஈரானுக்கு எதிராக வாக்களித்ததன் எதிர்வினை இந்நிகழ்வு.

அமெரிக்கத் தலையீட்டுடன் இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.குழாய் எரிவாயு திட்டம் ஆரம்பிக்கும் போது அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.முன்பு இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்த இந்தியா,கான்டலீஸா ரைஸ் இந்தியா வந்த போதும்,மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற போதும் பின் வாங்க ஆரம்பித்தது.

உலகின் எண்ணை வளத்திலும்,அணு வணிகத்திலும் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்னும் அமெரிக்காவின் எண்ணத்திற்கு வலு சேர்க்கக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தில்,அடிபணிந்து வக்களித்து,இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும்,தனது தனித்தன்மையிலும் பெரும் பின்னடைவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்த அரசு.

தனது அற்றல்(மின்) தேவைக்காக,அணுவைப் பயன்படுத்தும் உரிமை ஒரு தேசத்திற்கு முழுமையாக இருக்கிறது.இதுவரை ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கான எந்த வித ஆதாரமும் யாரிடமும் இல்லை.ஐ.ஏ.ஈ.ஏ பொது இயக்குநர் கடந்த செப்டம்பர் 2 ஆம் நாள்,அணு குறித்த விவகாரங்களில் ஈரான் முழு ஒத்துழைப்பு தருவதாகவும்,விவகாரங்கள் சுமூகமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்னும் நிலையில்,புஷ் மூலமாக ஒரு கட்டாயத்திற்கு ஈரான் இழுத்துச் செல்லப்படுகிறது.

இந்த பிரச்சினையில் எந்த வித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது நடுவண் அரசு.எந்த தேசத்தையும் பார்த்து பயப்படத் தேவை இல்லை,அதற்கான பொருளாதாரமும்,ஆற்றலும் நம்மிடம் இருக்கிறது எனச் சொல்லி வந்த அரசு இப்போது நடுங்க ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஈரானை எதிர்ப்பதால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.அமெரிக்கா வழக்கம் போலவே இந்தியாவுடன் நட்பு எனச் சொல்லி,பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்கும்.ஈரானுடனான உறவை இழப்பது மட்டுமே இந்தியாவுக்கான பயன்.

எதிர்த்து வாக்களித்ததனால் திட்டத்திற்கு எந்த பாதிப்பு வராது எனச் சொன்ன இந்திய அரசுக்கு பதில் சொல்லும் முகத்தான்,தனது அரசியல்,பொருளாதார விவகாரங்கள் இணைந்தே இருக்கும் என தீர்க்கமாக அறிவித்திருக்கிறது ஈரானிய அரசு.

அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தடியெடுக்க முயல்கிறது.இந்தியா சலாம் போட ஆரம்பிக்கிறது.

Sep 26, 2005

"கோயில் கொண்ட மகராசி" குஷ்பூ வாழ்க.

"பண்பாட்டு நாயகி" குஷ்பூ ஒன்று சொல்லி இருக்கிறார்.யார் வேண்டுமானாலும் யார் கூடவும் உறவு வைத்துக்கொள்ளலாம்.(ஆணும் பெண்ணும்தாங்க).ஆனால் அந்த பெண் கர்ப்பம் ஆகாமலோ அல்லது கண்ட நோய் வராமலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.

குஷ்பூ கோயில்,குஷ்பூ இட்லி,குஷ்பூ ஜாக்கெட்(?)னு எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள்.

சுந்தர்.c க்கும் திறந்த மனது.மனைவியை முழுமையாக ஆதரிக்கிறார்.தமிழ் பண்பாட்டை பற்றியும்,அதற்கு வரைமுறைகள் வைப்பதற்கும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்று தெரியவில்லை.

தங்கர் பச்சான் ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு வந்த இவருக்கு இப்போது தமிழ்நாடுப் பண்பாடு குறித்துப் பேசும் போது அறிவு எங்காவது தொலைந்து விட்டதா என்று தெரியவில்லை.

அனைத்து நிகழ்வுகளுக்கும் எதாவது பின்புலம் இருக்கும்.இந்த நிகழ்வுக்கும் இருக்கிறது.புடவை கட்டிப் பேசினால் அவள் தமிழ் பெண்ணாகி விடுவாள்.தமிழ்நாட்டு மருமகள் என்றெல்லாம் எழுதிய தமிழ் ஊடகங்களும்,தமிழ் மக்களும் தான்.

இவர்கள் எப்படியோ தொலைந்து/அழிந்து போகட்டும்.குஷ்பூ பிரபு என ஆட்டோகிராஃப் போடட்டும்.வேறு மலையாள நடிகருடன் சுற்றட்டும்.எதாவது டைரக்டரை திருமணம் செய்து கொள்ளட்டும்.தன்னுடன் நடிக்கும் நாடக நடிகருடன் கும்மாளம் அடிக்கட்டும்.

ஏற்கனவே கரையான் அரித்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.இவர்களுக்கு எல்லாம் ஏதாவது வகையில் பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும்.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.விபச்சார வழக்கில் கூட.

விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் போது கூட தமிழ்நாட்டில் யாருக்கும் செக்ஸ் பற்றி தெரியாதா என வினவுகிறார்.தெரியும்.அதற்காக சாலையில் கூட உறவு வைத்துக்கொள்ள முடியுமா?.இவரை எல்லாம் அறிவாளி என்று கொண்டாட ஒரு கூட்டம் தயாராகி விடும்.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் இதை போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்.அல்லது விவாததிற்கென வைக்கப்படும் போது,எதிர் வினைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.பிறிதொருவர் இது போன்றதொரு கருத்தை வெளியிட தயங்க வேண்டும்.

Sep 18, 2005

மரணம் மரணம் மரணம் கேட்டேன்!

ஐதராபாத்தின் பெருமைகளைச் சொல்ல ஒரு நாள் போதாது.அதே போல்தான் அதன் கொடுமைகளையும்.'அமர்க்களம் படத்தில் வரும் ""கேட்டேன் பாடல் ஆசைகளைப் போல்தான் எனது ஆசைகளும்.


பாக்கு போடாத ஆணைக் கேட்டேன்
பர்தா போடாத ஃபிகரைக் கேட்டேன்
எச்சில் துப்பாத மனிதன் கேட்டேன்
ட்ராபிக் இல்லாத சாலையைக் கேட்டேன்
ரூல்ஸை ஃபாலோ பண்ணும் டிரைவர் கேட்டேன்
சர்க்கரை இல்லாத சாம்பார் கேட்டேன்
காரம் இல்லாத சாதம் கேட்டேன்
பொடிஞ்சு போகாத இட்லி கேட்டேன்
லு சேர்க்காத வார்த்தை கேட்டேன்
உ இணையாத ஆங்கிலம் கேட்டேன்
கப்ஷா இல்லாத சினிமா கேட்டேன்
குத்தாட்டம் இல்லாத ஊர்வலம் கேட்டேன்
தகரம் அடிக்காத பேண்ட் க்ரூப் கேட்டேன்
சாலைகள் நிரம்பாத மழை நாள் கேட்டேன்
பேச்சிலருக்கு தரும் வீடுகள் கேட்டேன்
குறைந்த செலவில் பஸ் பயணம் கேட்டேன்
பயந்து போகாத போலீஸ் கேட்டேன்
மேகப் செய்யாத பெருசுகள் கேட்டேன்
டையிங் செய்யாத சிறுசுகள் கேட்டேன்
படித்துப் பார்க்க தமிழ் பேப்பர் கேட்டேன்
குளித்துப் பார்க்க வாய்க்கால் கேட்டேன்
நடந்து பார்க்க கடற்கரை கேட்டேன்
அட்லீச்ட் எனக்கொரு ஃபிகரைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்க வில்லை
கிடைத்தவை யாவும் பிடிக்கவில்லை.....
இந்த ஊரே ஊரே வேண்டாம்
வேறு ஊரு ஊரைக்கேடேஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......

Sep 10, 2005

நயன் தாரா சினிமாவிற்கு வந்த சூட்சுமம்!

இந்த நயன் தாரா சினிமாவிற்குள் வந்த கதையை திரைத்துறையில் பணிபுரியும் என் நண்பன் சொன்னான்.எல்லோரும் வேறு மாதிரி நினைத்துகொண்டு இருப்பர்.உண்மை இந்தக் கட்டுரையின் முடிவில் தெரியும்/புரியும்.

அதாவுதுங்க.....நானு பாரதியாரின் கட்டுரையை மாங்கு மாங்குனு படிச்சு கண்ணா முழி கண்ணுக்குள்ள போறா மாதிரி பொழிச்சு பொழிச்சுனு டைப்ப் பண்ணி சந்தோஷமா இந்த வலைப்பதிவுல போட்டனுங்க.அட மொத்தமா முப்பது பேரு கூட படிக்காம போய்ட்டாங்க போங்க.எனக்கு பொசுக்குனு போய்டுச்சு.அட என்னங்க பார்தியார் என்ன அவ்வளவு பாவப்பட்ட சென்மமா?

பொக்குனு உக்காந்துட்டு இருந்த என்றகிட்ட பிரெண்டு வந்து சொன்னான்.சும்மா ரவுசுக்குனு ஏதாவது சினிமாக்காரியப் பத்தி போடுன்னு.ஆனது ஆகுட்டும்னு போட்டேன்.நான் இத எழுதும் போத்து என்ற ப்லாக்க பார்த்தவங்க மொத்தம் 4804.(அதாவது பாரதி வரைக்கும்).

நயன் தாராவுக்கு வந்தவங்கள்ல நீங்க எத்தனாவதுன்னு நீங்களே பார்த்துக்குங்க.

ஆமாம் மறந்துட்டேன்.நயன் தாரா "உழைப்பால" சினிமாவுக்கு வந்தாங்களாம்.

Sep 7, 2005

பாரதியின் கண்டறியப்பட்ட புதிய கட்டுரைகள்

"பாரதியின் கண்டறியப்பட்ட புதிய கட்டுரைகள்" என்னும் புத்தகம் எனக்குக் கிடைத்தது.பாரதியின் வெளியுலக்குக்கு அறிமுகமாகாத கட்டுரைகளின் தொகுப்பு இது.(தொகுப்பாசிரியர்:சீனி.விசுவநாதன்,கவிக்குயில் அச்சகம்,சென்னை)1994 ஆம் ஆண்டில் வெளி வந்த புத்தகம்.கட்டுரைகள் சுவாரசியாமாக இருக்கின்றன.பாரதியின் நடை பிரம்மாண்டமாக இருக்கிறது.இரண்டு கட்டுரைகளை பதித்துள்ளேன்.

சுதேசினிகள்.
"சுதேசியம்"என்று கூறப்படும் முயற்சி இப்போது இத் தேசம் முழுதும்பரவி வருவதை அனைவரும் உணர்வார்கள்.
அன்னிய தேசத்தில் செய்து வரும் பொருள்களை விலக்கி வைத்து விட்டு,நமது தேசத்துச் சாமான்களையே விலைக்கு வாங்கி,நமது வர்த்தக நிலையையும் பொருள் நிலையையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே "சுதேசியத்"தின் நோக்கம்.

பெங்காள ஜனங்களுக்குள்ளேதான் இவ்வூக்கம் மிகுதியாக ஏற்பட்டிருக்கிறது.
ஆனால்,பெங்காளத்தில் ஒருவிதத் திருத்தமும் ஆண் பிள்ளைகளோடு நிற்பதில்லை.

பெங்காளத்து ஆண் மக்களை யெல்லாம் பற்றியிருக்கும் சுதேச ஆவேசம்
பெண்களுக்குள்ளும் பரவுகின்றது.எனவே மாதர்களும் பிரத்தியேகமாகச் சபைகள் கூடி,அந்நியச் சரக்குகளை விலக்கி விட வேண்டும்மென்று பிரதிக்கினைகள் செய்து வருகிறார்கள்.

(சக்ரவர்த்தினி:1905 செப்டம்பர்-ப.46)

வால்மீகி ராமாயணப்பாட்டு
தமிழ் நாட்டு மாதர்கள் எத்தனையோ தலை முறைகளாக மதப்பயிற்சியும்,சன்மார்க்க நடையும் அடைவதற்க்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தவை பாரத-ராமாயண முதலிய புராதன சரித்திரங்களின் லாரத்தை எளிய நடையில் கொண்டனவாகிய வீட்டு பாடல்களே என்பதை எல்லோரும் அறிவார்கள்.
பழைய காலத்து மாதர்கள் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கா விடினும்,மேற்கூறப்பட்ட பாடல்களே அவர்களுக்கு கூடியவரை ஞான ஊற்றுக்களாக விளங்கின.

கல்விப்பயிற்சியின் பொருட்டுப் பாட சாலைகளுக்குச் செல்வோராகிய
தற்காலத்துப் பெண்கள் இளமையிலிருந்தே வீட்டில் மேற்கூறப்பட்ட இனிய
பாடல்களைக் கற்றுக்கொள்ளச் சாவகாச மேற்படுகிறதில்லை.ஆதலால் மேற்படி பாடல்களை யாவரேனும் திரட்டிப் பிரசுரித்துக் கொடுப்பார்களாயின்,அது மிகுந்த உபகாரச் செயலாகும் என்பதில் ஆட்சேபமில்லை......
(சக்ரவர்த்தினி:1906 ஜூலை-பக்.284)

Sep 4, 2005

நகுலன்

ஏனோ பலருக்கு கவிதைகள் பிடிப்பதில்லை.குறிப்பாக வலைப்பதிவு நண்பர்களுக்கு.கவிதையைப்பதிவில் இடும்போது மட்டும் குறைவான "ரெஸ்பான்ஸ்" .நகுலன்(தொகுப்பு:சுருதி) கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள் இங்கே.

1.வேறு

உலகச்சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்

உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்

விஷயம் வேறு


2.சிலர்

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.

3.அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

4.தேடல்.

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.

Sep 1, 2005

எடுடா அருவாளை! போடுடா பெருமாளை!.

நான் கவிதை படிக்க ஆரம்பித்த சமயம்,எனக்கு இரண்டே வகைக் கவிதைகள் தான் தெரியும்.

முதல் வகை,

கண்ணே உன் கன்னம்
என்ன
கடலை மிட்டாயா?
இத்தனை தித்திப்பு!

இரண்டாவது வகை

தோழா
பொறுத்தது போதும்
எடுடா அருவாளை
போடுடா பெருமாளை.

சிறு பத்திரிக்கையை ஆரம்பித்த போது அதிர்ச்சி+ஆச்சரியம் கூடிக் கும்மாளம் அடித்தன.அந்த கவிதைகள் எனக்குப் புரியாமலே இருந்தன.இன்றும் பல கவிதைகள் எனக்குப் புரிவதில்லை.

மரபுக்கவிதை உடைக்கப்பட்டதே சாமானியனுக்கும் கவிதை புரிய வேண்டும் என்று தானே?
ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒரு படிமத்தைத் தரலாம்.அல்லது எல்லோருக்கும் ஒரே படிமத்தைத் தரலாம்.ஆனால் புரிய வேண்டும்.

படிமத்தை நுழைக்கிறேன்,பட்டாசு கிளப்பறேன் எனச் சொல்லும் புரியாத கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு குட்டிக் கவிதை.உங்களுக்கு உடன்பாடா எனச் சொல்லுங்கள்.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.