Aug 26, 2005

தமிழன் ஐய்யா,இது இந்தியத் தமிழன்.

இந்தியா மீதோ,இந்திய அரசின் மீதோ இலங்கைத்தமிழர்களுக்கு தீவிரமான கோபம் இருக்கலாம்.இருப்பது என் பதிவில் இடப்பட்ட ஒரு சில பதிவுகளில் தெரிகிறது.அதுவும் நன்றாக.
ஒரு நாட்டினை மற்ற நாட்டின் இராணுவம் கையக்கப்படுத்த நினைக்கும் போதோ அல்லது தனது போலிஷ்க்காரத்தனத்தினை காட்ட நினைக்கும் போதோ சுயமரியாதை உள்ள யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
அதுவும் தன் தாயின் மீதும்,தனது தங்கையின் மீதும் கை வைக்கும் போது?

எனது பதிவினை பதித்துவிட்டு,திரு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.("அது அந்தக் காலம்" ஆசிரியர்).

இலங்கையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் உள்ள நிகழ்வுகளை,சார்பின்றி விளக்கினார்.ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப்போல்.

பிரபாகரன் அவர்கள் டெல்லியில் கையொப்பம் இட்டது,சத்ரபதி சிவாஜி,அவுரங்கசீப்பிடம் அகப்பட்டதற்கு இணையானது.

இவ்வளவு நாட்களாக இலங்கையின் மீது ஒரு உணர்வுப்பூர்வமான பிடிப்பு மட்டும் இருந்து வந்தது.இப்போது அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கத்தோன்றுகிறது.

இந்தப் பதிவில் என்னுடைய அநுதாபத்தை தெரிவிக்க வேண்டும் எனவோ,எனது ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவோ எழுத ஆரம்பிக்கவில்லை.

இலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது உள்ள கோபம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீதும் இருக்ககூடும்.ஆனால் இங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக பேசத்தயங்கினாலும்,பெரும்பான்மையானோர் உணர்வுப்பூர்வமாக உங்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்.

ஒரு உதாரணத்திற்காக.என் ஊர்ப்பெயரினை இநணையத்தில் தேடினால் கண்டறிவது மிகக்கடினம்.
என் ஊரில்,பொதுக்கூட்டங்கள் நடக்கும் திடலுக்குப் பெயர்,திலீபன் திடல்.

Aug 21, 2005

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினை.

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதாக தெரியவில்லை.அங்கு நடைபெறும் குண்டுவெடிப்பு மட்டுமே இங்குள்ளவரின் கவனம் பெறுகிறது.அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பரபரப்பெல்லாம் கிடையாது.தினத்தந்தியில் அதுவும் ஒரு செய்தி.அவ்வளவே.

காரணம் என்னவாக இருக்கும் என யொசிக்கும் போது ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை.காஷ்மீர்ப் பிரிவினையினை பெரும்பாலான இந்தியர்கள் நிராகரிக்கிறார்கள்.அவ்ர்களின் ஆயுதம் ஏந்திய போராட்டம் இங்கு பலருக்கும் வெறுப்பினையே தருகிறது.

இங்குள்ளவர்கள்,இலங்கைப் போராட்டத்தினை,காஷ்மீர்ப் பிரிவினையுடன் ஒப்பிடக்கூடும்.இந்தியர்கள் இன்னும் காந்தியக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன்,இலங்கைப் பிரச்சினையினை ஒப்பிட முடியாது.இங்கு சுதந்திரப் போராட்டத்தில் இங்குள்ள மக்களின் ஆதரவு முழுமையாக போராளிகளுக்கு கிடைத்தது.இலங்கையில் ஆதரிக்கும் மக்களும்,எதிர்க்கும் மக்களும் ஒரே நாட்டில் வசிப்பது தான் பிரச்சினையே.

அன்னியனை வெளியேற்றிவிடலாம்.ஆனால் பிரிவினை என்பது சாதாரணமான செயல் அன்று.

ஆயுதம் இல்லாமல் போராடினால் அங்கு வெற்றி கிடைப்பதற்கான வழி இல்லையா?உலகின் கவனத்தையும் ஆதரவையும் இலங்கைத் தமிழர்களால் ஏன் இன்னும் பெற முடியவில்லை.பிரிவினை தான் ஒரே பதில் எனில்,அது எந்த வழியில் என்றால் என்ன?ஏன் மற்ற முறைகளை புலிகள் ஆதரிப்பதில்லை?எங்கேயோ வேண்டாம்,இந்தியாவில் அதுவும் தமிழ் மக்களிடம் ஆதரவினை பெறாமல் போகக் காரணம் என்ன?ராஜிவ் கொலை மட்டும் தான் காரணமா?வேறு ஏதேனும் காரணம் உண்டா?

உலகின் ஆதரவு இல்லாமல் ஒரு நாட்டினுள் பிரிவினை என்பது இயலக்கூடிய காரியமா?எனக்குள் மட்டும் ஆயிரம் கேள்விகள் உள்ளன.எனில் ஒட்டு மொத்தக் கேள்விகளின் எண்ணிக்கை?

Aug 17, 2005

கவிஞர் விவேகா கவனிக்கப்பட வேண்டியவரா?

நீ வருவாய் என படத்தில் "பூங்குயில் பாட்டு பிடிசிருக்கா?" என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பாடலாசிரியர் என அறிமுகம் ஆனவர் கவிஞர் விவேகா.

ஒரு மெல்லிய சோகத்தை இவரது பெரும்பாலான பாடல்கள் தாங்கி நிற்கின்றன.

"சொல்லத்தான் நினைக்கிறேன்,சொல்லாமல் தவிக்கிறேன்" என்னும் பாடலும் இந்த வகையினதே.இந்த பாடலில் "வாசப்படி ஓரமாய் வந்து வந்து போகும் காதல்" என பெண்மையை இதமாய் விளிக்கிறார்.

"மின்சாரம் என் மீது பாய்கின்றதே" என்னும் பாடல் வரிகளும் கவனிக்கத்தக்கவை.

இவரின் முதல் கவிதை நூலான "உயரங்களின் வேர்"(கற்பகம் புத்தகாலயம் வெளீயீடு) பல தரப்பட்ட தளங்களில் பயணிக்கிறது(முற்றிலும் புதுக்கவிதை என்னும் பிடிக்குள் இல்லை).

இந்தப்புத்தகத்தில் வரும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பேசப்படவேண்டிய நல்ல கவிதை.

அரசியல் குறித்த கவிதைகளும்,நிகழ்காலம் குறித்த கவிதைகளும் எள்ளல் மிகுந்து காணப்படுகின்றன.

இவரும் "டப்பாங்குத்து" எனப்படும் அதிரடிப்பாடல்களுக்கு முயன்று வருவது "ஜி" படத்தில் இடம் பெற்றிருக்கும் "வம்பை வெலைக்கு வாங்கும்" என்ற பாடலில் தெரிகிறது.இந்தப்பாடலில் ஓரிரு சொற்கள் மெட்டினை மீறி தொக்கி நிற்பது கொஞ்சம் நெருடலை தருகிறது. எனினும் நல்ல கற்பனை வளம் தெறிகிறது.

இதே சமயத்தில் வெளி வந்துள்ள ஆயுதம் படத்தில் வரும் "ஆலால விஷம்" நல்ல செறிவுடன் திகழ்கிறது.

திரைப்பாடலின் வெற்றி என்பது படத்தின் வெற்றியைப் பொறுத்தது என்பது இவரின் பல நல்ல பாடல்களுக்கு பொருந்த்தும்.

திரைப்பட பாடல் குறித்த நீண்ட விவாதம் தேவையில்லை என்னும் போதும் நல்ல கவிஞர்களை குறித்த நேரத்தில் இனம் காணுதல் அவசியம்.விவேகா அந்தப்புள்ளியில் நிற்கிறார்.

Aug 10, 2005

ங்கோத்தா(நன்றி:சுஜாதா)

ங்கோத்தா,ங்கொம்மாளை போன்ற சொற்கள் அதற்கான விவகாரமான அர்த்தங்களை இழந்து வருவதாக எழுத்தாளர் சுஜாதா தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அந்தச் சொற்களை உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை இருந்தது.விலங்கினை உடைத்த சுஜாதாவுக்கு நன்றிகள்.

ங்கோத்தா!

ஆணியில் மாட்டப்பட்ட சட்டை அப்பாவுக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட குடை அம்மாவுக்கு
ஓரமாய் கிடக்கும் கைப்பை அக்காவுக்கு
அவரவரின் அடையாளங்களுடன்
சேர்ந்து கொண்டிருக்கிறது
ங்கோத்தா
என் இண்டர்வியூ ஃபைல்.

Aug 7, 2005

புரட்டப்படும் நடிகை தேவயானி

இந்த தேவயானி இருவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்.ஆனாலும் இவரின் அலம்பல் தாங்க முடியவில்லை.

விகடனில் ஒரு கேள்வி.தனிக்குடும்பத்திற்கும்,கூட்டுக்குடும்பத்திற்கும் வித்தியாசம்?தனிக்குடும்பம் புதுக்கவிதையாம்.கூட்டுக்குடும்பம் மரபுக்கவிதையாம்.சொன்னவர் புதிய அவ்வையார் தேவயானி.

ஏன் தேவயானிக்கு கவிதை தெரியக்கூடாதா என வினவுபவர்களுக்கு....

திரையிசைக்கவிஞர் விவேகாவின் "உயரங்களின் வேர்" நூல் வெளியீட்டு விழாவில் குத்துவிளக்கேற்றிய குத்துவிளக்கு தான் தேவயானி."உயிர்களின் வேர்" என்று கடைசி வரைக்கும் உயிர் பற்றி எல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசி காமெடி செய்தததை படித்திருக்கலாம்/பார்த்திருக்கலாம்.யாராவது சென்னையில் அம்மையாரை பார்த்தால் கவிதை பற்றி எதாவது கேளுங்கள்.ராஜகுமாரன் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதே விகடனில் மக்களின் மனம் கவர்ந்த நடிகை,"விகடன் டெலிவிஸ்டாஸ்"ன் தேவயானி.மனம்கவர்ந்த தொடர் அவர்களின் "கோலங்கள்".இத்தனை நாள் கோலோச்சி வந்த ராதிகா மக்களால் அல்லது விகடனால்,மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டார்.அப்படியா?

இங்கு வருகிறது குமுதம்.
எடு தேவயானியின் மாமியாரிடம் ஒரு பேட்டி.அவரை முறுக்கு சுட வைத்து ஒரு படம்."நியாயமா மருமகளே"னு ஒரு கவர் ஸ்டோரி.வாசகர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் தேவயானியின் மாமியாரின் நிலையை பாருங்கள் என ஒரு புலம்பல்.

உங்களை நம்பி தேடிப்பிடித்து(ஐதராபாத் கோட்டியில் தேடிப்பிடித்தால் தான் கிடைக்கும்) 8 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்லா மிளகாய் அரைக்கிறீர்கள்.வளரட்டும் உங்கள் இலக்கியப்பணி.தொடரட்டும் எங்கள் இளிச்சவாயப்பணி.