Apr 27, 2005

ஜெயகாந்தனை இகழலாமா?

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
"..ஜெயகாந்தன் கடந்த கால் நூற்றாண்டாக குறிப்பிடும்படியாக எதையும் எழுதவில்லை.அவருடைய பல அரசியல்,சமூகக்கருத்துக்கள் சகிக்க முடியாதவை.அவருடைய கதைகளின் வடிவம் மற்றும் அழகியல்,பல்வேறு பலவீனங்களைக் கொண்டவை..."-"உயிர்மை" இதழில் ஜெயகாந்தனை வாழ்த்திய கவிஞர் மனுஷ்ய புத்திரன்,கூடவே இப்படி ஒரு விமர்சனக்குட்டும் வைத்துள்ளார்!சக எழுத்தாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

அசோகமித்திரன் :
ஜெயகாந்தனின் இலக்கியச் செல்வாக்கையும்,பிற எழுத்தாளர்கள் மீதான அவரது பாதிப்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.கிட்டத்தட்ட 20,25 வருடங்களாக,தமிழ் இலக்கிய உலகத்தில் அவர் இயங்கி வந்திருக்கிறார்.இன்றைய நவீன எழுத்தாளர்களிடம் கூட ஜெயகாந்தனின் பாதிப்பு இருக்கவே செய்கிறது.இவ்வாறிருக்க,ஜெயகாந்தனுக்கு கிடைத்திருக்கிற ஞானபீட விருதினால் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் .அதுதான் சரி.
அப்படியானால் அவரது படைப்புகள் மீது விமர்சனம் செய்யவே கூடாதா?அவரது பங்களிப்பைப் பற்றி விவாதிக்கக் கூடாதா?கட்டாயம் செய்யலாம்.ஆனால்,அதற்கான சமயம் இதுவல்ல.அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது ஒரு முக்கிய சமூக நிகழ்வு.இது ஒரு திருமணம் போல.இந்தச்சமயத்தில் நாம் அவரை வாழ்த்துவதுதான் சரியான செயல்.இந்த மகிழ்ச்சியான சமயத்தில்,"மாப்பிள்ளையின் சுண்டு விரல் சரியல்ல" போன்ற விமர்சனங்களால் எந்த விதப்பயனும் கிடையாது.
திருப்பூர் கிருஷ்ணன் :
ஓர் எழுத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் வேண்டுமென்றே இட்டுக்கட்டி தாக்குவதென்றால்,எவ்வளவு வேண்டுமென்றாலும் தாக்கலாம்.தமிழில் வெளிவந்த நாவல்களில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்' குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது.சிறுகதை,கட்டுரை,நாவல் என்ற மூன்று துறைகளிலும் சாதனை படைத்தவர் ஜெயகாந்தன்.அவரது அரசியல்,சமூகக் கருத்துக்கள் ஒரு சிலருக்கு உவப்பு இல்லாததாக இருக்கலாம்.ஒரு எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டை எல்லாக்காலத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது.படைப்பிலக்கியத் துறையில் அவர் மாபெரும் சாதனையாளர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.அவர் எழுதியதற்க்குத்தான் இந்த விருது.இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறாரா போன்ற வாதம் தேவையற்றது.
இரா. முருகன் :
நல்ல வேளையாக எம்.டி. வாசு தேவன் நாயரும்,காப்ரியல் மார்வேஸும் தமிழர்களாக பிறக்கவில்லை.ஒருவேளை அப்படி அவர்கள் பிறந்திருந்தால்,இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.ஏனென்றால்,எந்த விதத்தில் யாரிடம் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்,குற்றம் கண்டுபிடித்து,எப்படித் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ரீதியில்தான் பலர் இங்கு செயல்பட்டு வருகிறார்கள்.
உறங்கி கிடந்த தமிழ் இலக்கியத்தை,கைப்பிடித்து எழுப்பி நிற்க வைத்து ஒரு புதிய பாதையை கண்டுபிடித்துக் கொடுத்தவர் ஜெயகாந்தன்.அவருடைய 'ஒரு மனித,ஒரு வீடு, ஒரு உலகம்' புத்தகத்திற்கு மட்டுமே ஒரு நோபல் பரிசைக்கொடுக்கலாம்.என்னைக்கேட்டால்,இது காலம் தாழ்ந்து அவருக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் என்றுதான் சொல்வேன்.
பாரதி பாலன் :
மனுஷ்ய புத்திரன் கூறியது எப்படி விமர்சனமாகும்?அவரின் இலக்கியக்கொள்கை என்ன?ஜெயகாந்தன் மீது அவர் தொடுக்கும் குற்றச்சாடுகளுக்கு என்ன ஆதாரங்களை சொல்கிறார்?ஒன்றுமேயில்லை.மேம்போக்காக ஏதேனும் ஒன்றைச் சொல்வதுதான் விமர்சனமா?
புத்தகங்களை வைத்து மட்டும் தான் ஓர் எழுத்தாளர் மதிப்பிடப்பட வேண்டுமா?ஜெயகாந்தனை எடுத்துக்கொண்டால் அவர் எப்பொழுதும் மக்களிடமிருந்து விலகி இருக்கவில்லை.அவர்களுடன் கலந்து அவர்களைப்பற்றித்தான் எழுதி வந்திருக்கிறார்.அதிரடியாக,பிறரை வியக்க வைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மனுஷ்ய புத்திரன் போன்றோர் முன் வைக்கும் விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை.
இது இந்த வார கல்கி யில் வந்துள்ள விவாதம்,இனி இது இணயத்தில் உலவுகிறவர்களுக்காக!