Apr 27, 2005

ஜெயகாந்தனை இகழலாமா?

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
"..ஜெயகாந்தன் கடந்த கால் நூற்றாண்டாக குறிப்பிடும்படியாக எதையும் எழுதவில்லை.அவருடைய பல அரசியல்,சமூகக்கருத்துக்கள் சகிக்க முடியாதவை.அவருடைய கதைகளின் வடிவம் மற்றும் அழகியல்,பல்வேறு பலவீனங்களைக் கொண்டவை..."-"உயிர்மை" இதழில் ஜெயகாந்தனை வாழ்த்திய கவிஞர் மனுஷ்ய புத்திரன்,கூடவே இப்படி ஒரு விமர்சனக்குட்டும் வைத்துள்ளார்!சக எழுத்தாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

அசோகமித்திரன் :
ஜெயகாந்தனின் இலக்கியச் செல்வாக்கையும்,பிற எழுத்தாளர்கள் மீதான அவரது பாதிப்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.கிட்டத்தட்ட 20,25 வருடங்களாக,தமிழ் இலக்கிய உலகத்தில் அவர் இயங்கி வந்திருக்கிறார்.இன்றைய நவீன எழுத்தாளர்களிடம் கூட ஜெயகாந்தனின் பாதிப்பு இருக்கவே செய்கிறது.இவ்வாறிருக்க,ஜெயகாந்தனுக்கு கிடைத்திருக்கிற ஞானபீட விருதினால் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் .அதுதான் சரி.
அப்படியானால் அவரது படைப்புகள் மீது விமர்சனம் செய்யவே கூடாதா?அவரது பங்களிப்பைப் பற்றி விவாதிக்கக் கூடாதா?கட்டாயம் செய்யலாம்.ஆனால்,அதற்கான சமயம் இதுவல்ல.அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது ஒரு முக்கிய சமூக நிகழ்வு.இது ஒரு திருமணம் போல.இந்தச்சமயத்தில் நாம் அவரை வாழ்த்துவதுதான் சரியான செயல்.இந்த மகிழ்ச்சியான சமயத்தில்,"மாப்பிள்ளையின் சுண்டு விரல் சரியல்ல" போன்ற விமர்சனங்களால் எந்த விதப்பயனும் கிடையாது.
திருப்பூர் கிருஷ்ணன் :
ஓர் எழுத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் வேண்டுமென்றே இட்டுக்கட்டி தாக்குவதென்றால்,எவ்வளவு வேண்டுமென்றாலும் தாக்கலாம்.தமிழில் வெளிவந்த நாவல்களில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்' குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது.சிறுகதை,கட்டுரை,நாவல் என்ற மூன்று துறைகளிலும் சாதனை படைத்தவர் ஜெயகாந்தன்.அவரது அரசியல்,சமூகக் கருத்துக்கள் ஒரு சிலருக்கு உவப்பு இல்லாததாக இருக்கலாம்.ஒரு எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டை எல்லாக்காலத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது.படைப்பிலக்கியத் துறையில் அவர் மாபெரும் சாதனையாளர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.அவர் எழுதியதற்க்குத்தான் இந்த விருது.இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறாரா போன்ற வாதம் தேவையற்றது.
இரா. முருகன் :
நல்ல வேளையாக எம்.டி. வாசு தேவன் நாயரும்,காப்ரியல் மார்வேஸும் தமிழர்களாக பிறக்கவில்லை.ஒருவேளை அப்படி அவர்கள் பிறந்திருந்தால்,இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.ஏனென்றால்,எந்த விதத்தில் யாரிடம் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்,குற்றம் கண்டுபிடித்து,எப்படித் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ரீதியில்தான் பலர் இங்கு செயல்பட்டு வருகிறார்கள்.
உறங்கி கிடந்த தமிழ் இலக்கியத்தை,கைப்பிடித்து எழுப்பி நிற்க வைத்து ஒரு புதிய பாதையை கண்டுபிடித்துக் கொடுத்தவர் ஜெயகாந்தன்.அவருடைய 'ஒரு மனித,ஒரு வீடு, ஒரு உலகம்' புத்தகத்திற்கு மட்டுமே ஒரு நோபல் பரிசைக்கொடுக்கலாம்.என்னைக்கேட்டால்,இது காலம் தாழ்ந்து அவருக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் என்றுதான் சொல்வேன்.
பாரதி பாலன் :
மனுஷ்ய புத்திரன் கூறியது எப்படி விமர்சனமாகும்?அவரின் இலக்கியக்கொள்கை என்ன?ஜெயகாந்தன் மீது அவர் தொடுக்கும் குற்றச்சாடுகளுக்கு என்ன ஆதாரங்களை சொல்கிறார்?ஒன்றுமேயில்லை.மேம்போக்காக ஏதேனும் ஒன்றைச் சொல்வதுதான் விமர்சனமா?
புத்தகங்களை வைத்து மட்டும் தான் ஓர் எழுத்தாளர் மதிப்பிடப்பட வேண்டுமா?ஜெயகாந்தனை எடுத்துக்கொண்டால் அவர் எப்பொழுதும் மக்களிடமிருந்து விலகி இருக்கவில்லை.அவர்களுடன் கலந்து அவர்களைப்பற்றித்தான் எழுதி வந்திருக்கிறார்.அதிரடியாக,பிறரை வியக்க வைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மனுஷ்ய புத்திரன் போன்றோர் முன் வைக்கும் விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை.
இது இந்த வார கல்கி யில் வந்துள்ள விவாதம்,இனி இது இணயத்தில் உலவுகிறவர்களுக்காக!

Apr 20, 2005

நிழல்-உயிர்மை கவிதை

Image hosted by Photobucket.com
நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்

எனக்கு முன்பாகவும்,
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.

பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல்,நேர்த்தியாக.

நிழல் எந்தப்பக்கம் எனினும்,

சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலிமட்டும் ஒரே திசையில்.

நன்றி:உயிர்மை-ஏப்ரல்'2005

Apr 19, 2005

புறக்கணிப்பு!

Image hosted by Photobucket.com

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின்
ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்
புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

Apr 12, 2005

அது பிசாசு போலவே இல்லை!

Image hosted by Photobucket.com
அது
பிசாசு
போலவே இல்லை

மெழுகுவர்த்தியின்
வெளிச்சம்
என
உள் நுழைந்தது

காற்றில்
விரவிகிடக்கும்
பஞ்சுத்துகளின்
மென்மையில் தலை கோதித்-
தந்தது

மெல்லிய
விசும்பலுடன்
நிறைய பேசி,

என் மனைவியின்
மார்பில்
பார்வையை நிறுத்தியது.

இப்போது
தெரிந்தது
அதன்
பல்லில்-படிந்திருந்த
ஒரு துளி இரத்தம்.

Apr 11, 2005

தமிழனை நம்ப முடியாது பா!

இணையத்தில் தேடி கிடைக்கும் நல்ல பகுதிகளை எல்லாம் விக்கிபீடிய வில் தொகுத்து வருகிறேன்.

நானே கூட தட்டச்சு செய்யலாம் தான்.ஆனால் அனைத்து பகுதிகளையும் செய்வது என்பது மலைப்பிற்க்குரியதாக இருக்கிறது.

ஏதேனும் பிரசினைகள் வருமா?யாரேனும் உரிமை கொண்டாடி வரும் போது தப்பிக்க வழி இருக்கிறதா?

நான் எதனை பற்றியும் கவலைப்படாமல் விக்கிபீடியா வில் போட்டு வருகிறேன்.மற்ற நண்பர்கள் என்ன செய்து வருகிறார்கள்?

யாரேனும் விளக்குங்கள்.

வருங்கால தமிழ் சமுதாயத்திற்காகதான் செய்தேன் எனச்சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

தமிழனை நம்ப முடியாது பா!

தமிழ் விக்கிபீடியா வில் உங்கள் பங்களிப்பு!

தமிழ் விக்கிபீடியா என்பது நல்ல என்சைக்ளோபீடியா.ஆனால் தமிழ் இல் 588 கட்டுரைகளே உள்ளன.ஆங்கிலத்தில் கிட்டதட்ட 500000 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை பெற முடியும்.இது முழுவதும் அந்த மொழி சார்ந்தவர்களின் பங்களிப்பால் மட்டுமே இயல்க்கூடிய காரியம்.

மாலன் அவர்கள் சொன்னது போல்,நாம் திருக்குறள் அனைத்தினயும் இதில் இடப்போவதில்லை.திருக்குறள் குறித்தான ஒரு குறிப்பு இடம்பெறும்.வேண்டுமானால்,திருக்குறளுக்கு ஒரு இணைப்பினை அந்த பக்கத்தில் தரலாம்.

இது மற்றவர்களுக்கான ஒரு விவரம் தரும் பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும்.நமது படைப்புகளையோ,நமது சொந்த அநுபவங்களையோ இதனில் இடும்போது மற்றவருக்கு எவ்வாறு பயன் படும் என்பதனையும் யோசிக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தவறான தகவல்களை இடும் போது மற்றவர்களுக்கு அது தீவிரமான பின்விளைவினை எற்படுத்தக்கூடும்.

கட்டுரைகளில் ஒரு நல்ல தரத்தினை பின்பற்றுவதும் மிக முக்கியம்.ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்வதனைக்காட்டிலும்,ஒரு குழு வாக செய்யும் போது நிறைய நல்ல விசயஙளை செய்ய முடியும் என்பது என் கருத்து.

இதில் எற்க்கனவே இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும் நம்மால் தரம் உயர்த்த இயலும்.

1.முத்லில் www.ta.wikipedia.com என உள் நுழையுங்கள்.
2."புகுபதிகையில்" உங்கள் குறித்தான தகவல்களை பதியுங்கள்.
3."முதற்பக்கத்துக்கு" செல்லுங்கள்.
4.உங்களுக்கு பிடித்த "கட்டுரை பிரிவுகளில்" ஒன்றில் உள் நுழையுங்கள்.
5."தொகு" பொத்தானை அழுத்தி உங்கள் கட்டுரையினை சேர்க்கலாம்.

எனக்கு தெரியாத விஷயங்கள்:
1.நமது பெயரை கட்டுரையினில் சேர்க்க முடியுமா?
2.கட்டுரையை அகர வரிசையில் தொகுப்பது எப்படி?

மற்றபடி கையாளுவது எளிதாகவே இருக்கிறது.

இன்னும் வேறு ஏதெனும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.எனக்கும்.மற்றவருக்கும்.

எதிர்கால தமிழ் சமுதாயத்திற்க்கு நம்மால் இயன்ற சிறு உதவி தான் இது.

Apr 8, 2005

அவ அழுதுட்டு போயிட்டா!

Image hosted by Photobucket.com
//நான் சும்மா feel பண்ணிக்கின்னு குந்தினேன்.....அந்த துளி மனச பேஜார் பண்ணிடுச்சு பா!

வீட்ல யாரும் பார்க்காம(படிக்காம) இருந்த சரி தான் :) //


சிதறிக்கிடக்கும்
உன்
உள்ளீடற்ற
கண்ணீர்த்துளியொன்றில்
புதைந்து கிடக்கிறது.

என்
பிரக்ஞையற்றமுகம்.

நன்றி:திண்ணை.காம்

வா.மணிகண்டன்

Apr 6, 2005

நினைவு-ஒரு குட்டிக்கவிதை

இன்று-
குளிக்கும்போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு
கல் தடுக்கிய நொடியும்,
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது எளிதெனக்கு.

வா.மணிகண்டன்.

Apr 3, 2005

மெய்யருள் கவிதை

மெய்யருள் என்னும் நண்பர் மிக சமீமபாக எனக்கு அறிமுகம் ஆனார்.

அவருடைய கவிதைகள் சற்று வித்தியாசமானவையாக இருக்கின்றன.

நிறைய கவிதைகள் வெவ்வேறு தளஙளில் பயணக்கின்றன.வாசகனுக்குள் வித்தியாசமான அநுபவத்தினை விதைத்து.

அவரின் படைப்புகளில் எனக்கு பிடித்த ஒரு கவிதையை பதிக்கிறேன்.

இனி,
செய்வதற்கெதுவுமில்லை
எனும்பொழுதில்

இந்த முன்வாசல் மரத்தில்
இரண்டு இலைகள் உதிரலாம்

வானம் சிறிது
தூறல் போடலாம்.

இந்த பூனைக்குட்டி
மெலிதாக கண் திறக்கலாம்

-மெய்யருள்

Apr 2, 2005

எனக்கு தெரு நாய்கள் பிடிக்கும்-கவிதை

தெரு நாய்கள்
விநோதமானவை.

குனிந்தொரு
கல் தொடும்வரையில்
குரைக்கின்றன.

கடித்தலேதுமின்றி
உறுமலுடன்
முடிந்துபோகும்
சண்டைகள்.

தலை சாய்த்து,
ஒடுங்கிய கண்களை
புவியில் புதைத்து
அலைகின்றன.

எச்சிலொழுகும்
நாவுடன்
யாரையாவது
நினைவுபடுத்துகின்றன.

ஏதொவொரு
வாகனச்சக்கரத்தில்
வீழும் வரை
அலைகின்றன.
திக்கற்று.

தெரு நாய்கள்
விநோதமானவை.

வா.மணிகண்டன்