Mar 26, 2005

என்னைப் பற்றி

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்த எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். இரண்டாம் வகுப்பு வரைக்கும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்தார்கள். கோபியில் இயங்கிக் கொண்டிருந்த காந்தி கல்வி நிலையம் மற்றும் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷனில் படித்தேன். பிறகு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வைரவிழா பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதிலிருந்து தமிழ் வழிக்கல்வி. நூற்றாண்டு கண்ட பள்ளி அது. பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் அங்குதான் படிப்பு தொடர்ந்தது. எழுதுவதற்கும் பேசுவதற்குமான ஆர்வம் அங்கேதான் ஊன்றப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் BE படிப்பில் சேர்ந்தேன். மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடம். அதன் பிறகு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.டெக்(மெக்ட்ரானிக்ஸ்) படிப்பை 2005 ஆம் ஆண்டு முடித்தேன்.

இடையில் 2004 ஆம் சென்னையில் எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் சுற்றிக் கொண்டிருந்த போது கவிஞர். மனுஷ்ய புத்திரனுடனான அறிமுகம் கிடைத்தது. அதுவரை எழுதியிருந்த கவிதைகளில் இருக்கும் சிக்கல்களைப் புரியவைத்து நவீன இலக்கியத்தின் பக்கமாக திருப்பிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்த வாசிப்பும் பல கவிஞர்களுடனான நெருக்கமும் கவிதைகளின் மீதான விருப்பத்தை அதிகரித்தது. முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ உயிர்மை பதிப்பகத்தின் வழியாகவே வெளியானது. அதன் பிறகு சைபர் குற்றங்களைப் பற்றிய தொடரான சைபர் சாத்தான்கள் என்ற புத்தகமும் உயிர்மை வெளியீடாக வெளியானது. இந்தச் சமயத்தில் கவிதைகளோடு சேர்த்து சில கட்டுரைகளும் எழுதத் துவங்கியிருந்தேன். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கல்கியில் ‘ரோபோடிக்ஸ்’ குறித்தான தொடர் எழுதக் கிடைத்த வாய்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கவிதைகளை உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, புது எழுத்து, அம்ருதா உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு உற்சாகமளித்தன. இந்தச் சமயத்திலேயே வலைப்பதிவு எழுதத் தொடங்கியிருந்தேன். ஆரம்பத்தில் வெகு குறைவானவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். குறைவானவர்கள் என்பதைவிடவும் சொற்பமானவர்கள் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும். 2012 ஆம் ஆண்டில் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளியானது. இந்தச் சமயத்தில் தொடர்ந்து எழுதியதாலோ என்னவோ நிசப்தம் வலைப்பதிவும் பரவலான கவனம் பெறத் தொடங்கியிருந்தது. அதன் பிறகு வெளியான ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசால் தோசை 38 ரூபாய்’ கட்டுரைத் தொகுப்பும் பிற புத்தகங்களைக் காட்டிலும் அதிகப்படியான கவனத்தை பெற்றன என்று சொல்ல முடியும்.

2013 ஆம் ஆண்டுக்கான சுஜாதா இணைய விருது நிசப்தம் தளத்திற்குக் கிடைத்தது. 

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது Prelude solutions என்ற நிறுவனத்தில் கொஞ்ச நாட்களுக்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது மூன்றாயிரத்து அறுநூறு ரூபாய் சம்பளம் என்பது மிகக் குறைவானது. விட்டுவிட்டு ஹைதராபாத்தில் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்திலேயே நான்கு ஆண்டுகளுக்கான பிணை கோரினார்கள். குறைவான சம்பளம்தான். ஆனால் வேறு வழியில்லை. கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன்.  அதே சமயத்தில் மாலை நேரக் கணினி பயிற்சி நிறுவனத்தில் ஒரு படிப்பை முடித்த போது சியர்ரா அட்லாண்டிக் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்திலிருந்து சொல்லாமல் ஓடி வந்துவிட்டேன். வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் பிறவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்ட தருணம் அது. சியர்ரா அட்லாண்டிக்கிலிருந்து சம்பளம் ஒழுங்காக வரத் துவங்கியது. அங்குதான் பல நாடுகளுக்கும் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசியா, பிரான்ஸ், ஹாங்காங், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணிக்கத் தொடங்கியது நல்ல அனுபவமாக இருந்தது.

டெல் நிறுவனத்தில் செய்ய வேண்டிய பணி ஒன்றுக்காக சியர்ரா அட்லாண்டிக் அனுப்பி வைத்தது. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தங்களது நிறுவனத்திலேயே பணிக்குச் சேரச் சொல்லிக் கேட்டார்கள். ஒத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு அந்நிறுவனம்தான் தாங்கிப் பிடித்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து பிறிதொரு அமெரிக்க நிறுவனத்திற்காக பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன்.

இடையில் 2008 ஆம் ஆண்டு கிருஷ்ணவேணியைத் திருமணம் செய்து வைத்தார்கள். அடுத்த வருடம் மகிநந்தன் பிறந்தான். எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான குடும்பச் சூழல் அமைந்தது. அதற்கு காரணமிருக்கிறது. வேணியின் தங்கையை எனது தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். நான்கு பேருக்குமென பெங்களூரில் வீடு கட்டிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்கள். அப்பா வாசுதேவன் மின்சாரவாரியத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா சுப்புலட்சுமி கிராம நிர்வாக அலுவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தம்பியின் குழந்தை யுவநந்தனுடன் சேர்த்து வீட்டில் எட்டுப் பேர். வரவு செலவு, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுதல் என்ற எந்தப் பொறுப்பும் எனக்கு இல்லை. விட்டுவிட்டார்கள். இப்படி குடும்பப் பொறுப்புமில்லாமல் இந்த வயதில் வாழ்க்கை வாய்ப்பது வரம் என்று புரிந்து கொண்ட போதுதான் நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கும் எண்ணம் உதித்தது.

இதுவரையிலும் யோசித்துப் பார்த்தால் நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பல லட்ச ரூபாய்கள் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. பல பயனாளிகளுக்கு உதவ முடிந்திருக்கிறது. எழுத்து வழியாகச் செய்ய முடிந்த முக்கியமான காரியம் இது என்று நினைத்துக் கொள்கிறேன்.

சென்னை, கடலூரில் வெள்ள நிவாரணத்துக்கென கிட்டத்தட்ட அறுபது லட்ச ரூபாய் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வந்திருக்கிறது.

மூன்றாம் நதி என்ற நாவலும் ஃபாரின் சிடி என்ற உலகத் திரைப்படங்கள் குறித்த புத்தகமும் சமீபத்தில் வெளியானவை.

2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.