Dec 24, 2005

வலைப்பதிவுகளின் தொடர்ச்சியான வீழ்ச்சி

நான் வலைப்பதிவு பற்றி அறிந்த சமயத்தில் மிகுந்த உத்வேகத்துடன் எழுதி வந்த பலரின் பெயர்களைக் கூட இப்போது படிக்க முடிவதில்லை. அவ்வளவு தான் வலைப்பதிவு எழுத்தின் ஆயுளா? அல்லது ஒருமுறை நட்சத்திரம் ஆனவுடன் முடித்துக் கொள்கிறார்களா? செறிவற்ற பின்னூட்டங்களும், தனிப்பட்ட வெறுப்பு தாங்கிய சொற்களும்,வரிகளும் பலருக்கும் வலியினைத் தந்திருக்கலாம். அல்லது உபயோகமற்ற சொல்லாடலின் பயன் என்ன என்ற வினா கூட எழுந்திருக்கலாம்.

ஏதோ,
மிக உக்கிரமான விவாதம் எதுவும் அரங்கேறுவது போல் தெரியவில்லை. அனானிமஸ்கள் கூட ஓய்ந்துவிட்டர்கள். மழையும் காற்றும் வீசி முடித்த அமைதியை உணரமுடிகிறது.

புதியவர்கள் பலர் சாரலடித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகள் பக்குவமற்று ஏதோ எழுதுகிறேன் என எழுதிவருகிறார்கள். ஆனால் புதியவர்கள் தனித்து வெளிப்படக் கூடும்.தொடர்ந்து நிலைத்து எழுதுவார்களா என்றுதான் தெரியவில்லை.

ஜெயமோகன் சொல்வார். அலுப்பு தராத எந்த பெரும் நாவலும் இருக்க முடியாது என்று. வலைப்பதிவில் இப்போது வருகின்ற அலுப்பு அவ்வகையானது இல்லை.

பலரும் சொன்னதுதான். தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஊடகம் இணையமாக இருக்கும். வலைப் பதிவு அதில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று.இன்றைய சூழலில் எனக்கு இரண்டாவது கூற்று சரியெனப் படவில்லை.

Dec 4, 2005

கட்டுரை : உடலியல் மீது கட்டமைக்கப்படும் கலாச்சாரம்

இன்றைய கலாச்சார நகர்வில், உடலியல் அதன் முழுமையான பகுதியாக இருப்புப் பெற்றுவிட்டது. வன்முறை நிகழ்த்தப்படும் போதெல்லாம் பெண்களின் உடல் மீது இறக்கப்படும் தாக்குதலே, எதிரி அணிக்கான அடியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் -இன்னும் குறுகி- தமிழ்க் கலாச்சாரம் தகர்க்கப்படுகிறது என்னும் குரல் உயரும் போதெல்லாம் உடலியல் தன்னை முன்னிலைப் படுத்தியிருப்பதை உணரலாம்.

உடலியலும் காமமும் மட்டுமே சமூகத்தின் கலாச்சாரக் குறியீடுகளாக நிறுத்தப்பட்டுவிட்டது. தனிமனித நிகழ்வுகளும் அதனையே பிரதிபலித்து அமைகின்றன. கலாச்சாரம்- சமூகத்தின் அமைப்புமுறை, இயல்பான நிலையில் அல்லது சூழல் மாறும் போது சமூகத்தின் நெகிழ்வு,தனிமனித வாழ்வியல் முறைகள் என எண்ணற்ற கூறுகளில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. சமையலில் தொடங்குகிறது எனலாம். ஒரு சமூகத்தின் கலை, அருகாமையிலிருப்பனுடனான உறவுமுறை, விழாக்கள், சடங்குகள், வன்முறைகள், ஏவப்படும் அடக்குமுறைகள் என நூற்றுக்கணக்கான நுண்ணிய கூறுகளின் கட்டமைப்பு.கலாச்சாரம் பரந்த வெளியாகக் கிடக்கிறது. இவ்வெளியை விடுத்து வேறு நிலப் பரப்பில் நின்று நோக்கும் போது- மழை நனைத்து விட்ட கரும்பச்சை நிற இலையின் நரம்பில் காணப்படும் சிறு வெண்புள்ளியாக மட்டுமே உடலியல் இதனில் இருக்கும்.

கலாச்சாரக் கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ஆண்-பெண் உறவு குறித்தான வாதங்களையே தொடர்ந்து முன் வைக்கிறது. ஏற்கனவே காமமே கலாச்சாரம் என தொன்மாக்கப்பட்டுவிட்டதன் செறிவு இன்னமும் கூட்டப்படுகிறது. ஊடகங்களின் ஆழமான ஊடுருவலில், காமம் குறித்தான தேடல் எல்லா மட்டதிலும் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டு நகர்கிறது. இதன் விவரிக்க இயலாத பிரம்மாண்டமே, இதன் கருப் பொருள் குறித்தும், உருவாக்கப்படும் சொற்கள் குறித்தும் மேலும் அதீத தேடலுன் ஊடகத்தை நகர்த்துகிறது.

கலாச்சாரக் காவலர்கள் என தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் யாவரும், பெண்ணின் ஆடைமுறைகளையும், அவளின் அந்தரங்க உணர்வுகளையும் சமூகத்தின் கட்டமைப்பாக்கி காமத்தைக் கூரிய கத்தியின் முனைகளாக சமூகத்தினுள் செருகிக் கொண்டே இருக்கிறார்கள்.இவர்களின் இயங்கியலுக்கு வெறு பல தளங்கள் இருப்பினும், அவை எதுவும் பிரம்மாண்டமான கவனத்தைத் தங்களின் மீது படியச் செய்வதில்லை. உடலியல் மட்டும் புதைக்கப்பட்ட ஆயிரம் ரகசியங்களை சுமந்து கொண்டு திரிகிறது. அவற்றின் புதிர்களை அவிழ்ப்பதில் எல்லோருக்கும் ஏதோவிதமான கிளர்ச்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஏதாவதொரு புள்ளியில் சொற்களோ, சைகைகளோ உடலியல் குறித்து உதிர்ந்து விடும்போது உதிர்ந்தவற்றைப் பொறுக்கியெடுத்து நசுக்குவதற்கென இவர்களின் கரங்கள் தயாராகிவிடுகின்றன. இந்த நசுக்கலில் வடியும் குருதிதான் இவர்களின் நிறைவேறாத நுண்விருப்பங்களில் உண்டான காயங்களின் களிம்பு.

இரு உடல்களின் துகிப்பு தவிர யாவையும் மறந்துவிடப்படும் காமத்தில்- இங்கு மட்டும் தான் மதம், இனம், மொழி என பல துகள்கள் தந்திரமாக திணிக்கப்படுகின்றன்.

பெண்ணியம், தலித்தியம்- இவையெல்லாம் இன்னமும் தங்களின் மேற்புறத் தோலின் செதில்களை மட்டுமே உதிர்த்துள்ளன. இதன் முழுமையான பரப்பினை உணரும் போதும், ஆழமான வினாக்களுக்கு உட்படும் போதும் மட்டுமே தொடர்ச்சியாகப் பின்னப்பட்டு வந்த மரபுகளின் பகுதிகள் அதிரத் தொடங்கும். அதுவரையிலும் கலாச்சாரம் தொடர்பாக எழும் எந்த அதிர்வும், ஆண்-பெண் உறவு முறைகளில் மட்டும் மாற்றத்தைக் கொணரலாம். அடுத்த தளத்திற்கு கலாச்சாரம் நகர்கிறது என்பதெல்லாம் விவாதமாகவே நின்று கொண்டிருக்கும். போராட்டங்களின் வெற்றியில்- அடையாளமற்ற ஆசை ஒன்றினை வேறொரு வடிவத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வா.மணிகண்டன்.
நன்றி:www.tamiloviam.com

Nov 24, 2005

பெண்ணியமும் வறட்டுக் கூச்சலும்

குழந்தை பெற்று மதத்தைக் காப்பாற்றுங்கள்.ஆர்.எஸ்.எஸ் தலைமை இவ்வாறு கதறியிருக்கிறது.அவர்கள் முன் வைக்கும் வாதம்- ஒப்பீட்டளவில் இந்து மதத்தை பின்பற்றுவோரைக் காட்டிலும், மற்ற மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பது.இந்துக்குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதத்தின் வலுக் கூட்டப்படும் என்கின்றனர்.

களைகளினூடாக மத்ததை வலுப்படுத்த எண்ணிக்கை காரணியாக அமையாது. இந்த விவாதத்தில் எனக்கு நாட்டம் இல்லை. இரைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் அமைப்புகள் இங்கு தலையிடுகின்றன.

பெண்ணியம் பேசும் பெண்களில் பெரும்பான்மையானோர் இந்திய கிராமப்புற பெண்களின் ஜீவாதாரமான பிரச்சினைகள் குறித்தான கவலை கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சானியா மிர்ஸாவின் குட்டைப் பாவாடை, குஷ்பூவின் ஆண் பெண் உறவு முறைகள், ஆர்.எஸ்.எஸ் இன் விவாதம் போன்ற ஊடகங்களினால் செறிவூட்டப்பட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து சிதறி விழும் வெளிச்சத்தினை தங்களின் முகத்தில் படியச் செய்துகொள்வது மட்டுமே இவர்களின் பெரும்பணி.

காமம் சார்ந்த-மேற்குறிபிடப்பட்ட விஷயங்களை ஓடியவற்றை மட்டும் கையிலெடுப்பது மட்டுமின்றி, பெண்களின் மீதான வன்முறைகளில் உடலியல் குறித்தானவை தவிர எதுவும் இல்லை என்னும் படிமத்தையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தின் முதுகெலும்பே தாங்கள் தான் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஒரு மத அமைப்பு தனது மதம் குறித்தான கருத்தினை, தனது மதத்தினருக்கு தெரிவிக்கும் போது இவர்கள் ஏன் தலையிட வேண்டும்?(இது ஒரு வாததிற்காக முன் வைக்கிறேன். எதிர்ப்பதும் அவர்கள் உரிமைதான்)

இவர்கள் சொல்லும் கருத்துகளில் நியாயம் இருக்கலாம்.இருக்கும். ஆனால் இந்த மாதிரியான விவாதங்களில் மட்டும் நுழைந்து தங்கள் இருத்தியலைப் பதிவு செய்து கொள்வதோடு நில்லாமல் , இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்வதில்தான் வேறுபடுகிறேன்.

இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கான வழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.

பப் குறித்தோ, குடிப்பது குறித்தோ நைட்கிளப்புகளில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பதால் ஒன்றும் நிகழந்து விடப் போவதில்லை.

ஊடக வெளிச்சம் மட்டுமே பெரிதாகப் படும் இவர்கள் குறித்துப் பேசுவதும் நையாப் பைசா பிரையோஜனம் இல்லாத குஷ்பூ விவகாரம் பற்றி பேசுவதும் ஒன்று தான்.

Nov 21, 2005

ஃபைவ்ஸ்டார் ஓட்டலும் பட்டையைக் கிளப்பலும்

இரண்டு நாளைக்கு முன்னாடிங்கண்ணா, இங்க ஒரு கன்ஃபரன்ஸோ, கருமாந்திரமோ ஒரு ஃபைவ்ஸ்டார் ஒட்டலுக்குப் போனனுங்க! எல்லாரும் சொர்புர்னு அஸென்ட்லயும்,ஸ்விப்ட்லையும் வந்தாங்க.நானு கூட வந்தவன் ஸ்கூட்டர்ல தொத்திட்டுப் போக வேண்டியதா இருந்துச்சு.ஆளாளுக்கு ஆட்டையப் போடறன்னு சொல்லிட்டு மொக்கையப் போட்டுத் தள்ளிட்டாங்க.

எனக்கா ங்கொக்கமக்கா குளிர்காலத்து அவசரம்.ஆனது ஆயிப்போச்சுடா மணி கொஞ்சம் பொறுத்துக்கடானு உக்காந்தா, டீ குடுக்கறன்னு சொன்னாங்க.உட்றா சவாரினு ஓடி போயி
காரியத்த முடிச்சுட்டு வந்து டீய ஒரு மொடக்கு குடிச்சா உள்ளயே எறங்க மாட்டீங்குது. சுப்பன்ங்கட டீதானுங்க நம்மள்ளுக்கு தேனு மாதிரி.எடுத்துப் போட்டம். கீழயும் ஊத்த முடியாது.அவனவன் பட்டும் படமா குடிக்கிறானுக!நானும் அவங்கள மாதிரி உதடு படாம குடிச்சா சட்டைல ஊத்துது.மேல ஊத்தி கீழ ஊத்திட்டு கிடக்கிறக்கு நமக்குத்தெரிஞ்ச மாதிரியே குடிச்சுப் போடறது உசத்தி இல்லீங்களா?.

அது முடிஞ்சு போயி உக்காந்தா கண்ணுக்கு லட்சணமா செவப்பா ஒரு புள்ள எதோ
பேசுனாளுங்க.என்ன பேசுனானு எல்லாம் நான் கவனிக்கறதுல்லீங்க.அதே மாதிரிதான் கேள்வி கேக்கறதும். வந்தமா பொட்டாட்ட உக்காந்தமானு இல்லாம தொணதொணனு கேள்வி கேக்கறது என்னங்க கெட்ட பழக்கம்.

அப்படியே இருந்தா சோத்துக்கு போறவிய எல்லாம் போலாம்னு சொன்னாங்க, நாம மட்டும் எந்திரிச்சா நல்லா இருக்காதுனு பார்த்தா,அட மொத்த சனமும் எந்திருச்சுருசுங்க.காலு நெலத்துல நிக்கமாட்டீங்குது.

உள்ள பூந்து பார்த்தா ஏகப்பட்டது வருசையா அடுக்கி வெச்சுருக்காங்க.போகையலயே நம்ம கூட இருக்குற பசங்க எல்லாம் சொன்னாங்க."மச்சா,இதான் சாக்குன்னு எல்லாத்தையும் ருசி பாக்கலாம்னு நெனச்சீன்னா,நல்லத திங்க முடியாதுனு".சரின்னுட்டு ஒரு நோட்டம் வுட்டேன். ஒரு பத்து,பதினாறு வகை.எத எடுக்கறது,எத வுடறதுனு தெரியல.பேர பாருங்க.சாமீ வாயுலயே நுழைய மாட்டீங்குது.படிப்புதான் எம்.டெக்கு. நாந்தான் சொல்லிக்கோணும்.

எங்க அமத்தாவக் கூட்டிட்டு வந்துருந்தா, கண்ணுல தண்ணி உட்டுருக்கும். பேர்களப் பாத்து. அடப் பேரு தான் இப்படின்னா சைவமா,அசைவமானு தெரியலை.

வக்காலி,அசைவம் மட்டும்தான் திங்கறதுங்கற முடிவுல போயாச்சு. நூடுல்ஸாவது,வெங்காயமாவது.வெங்காயானு எதோ வெச்சிருந்தாங்க.சத்தியமாத்தானுங்க.ஒரு பேரு வெளக்கமா இருந்துச்சுங்க 'ஐதரபாத் தம் கி பிரியாணி' நு.அட்றா...அட்றா...அப்புரம் பார்த்த 'ஆந்திர
சிக்கன் மசாலா' அடேசாமி ரெண்ட மட்டும் மூக்குல ரெண்டு சோறு எட்டிபார்க்குற அளவுக்குத் தின்னேன்.

பொக்குனு போயிடக்கூடாதுனா கொஞ்சம் தயிரும் ஊத்திச் சாப்பிடுன்னு எங்கம்மா சொல்லுவாங்களா.கொஞ்சமா ஒரு ஒணேமுக்கா கரண்டி தயிர ஊத்தி கொழச்சு அடிச்சுட்டு இருந்தப்ப, ஐஸ்கிரீம் கண்ணுல பட்டுச்சு.

அங்க போனா சாக்லேட்டுனு சூடா ஒண்ணு குடுத்தாங்க. ஜில்லுனு ஒண்ணு குடுத்தாங்க. சூட்டையும்,குளிரையும் ஒண்ணா தின்னா பல்லு போயிரும்னு தெரியும்.என்ன பண்ரதுன்னு தெரியாம முழிச்சு, ஒரு கோட்டு போட்ட தாத்தாவ நான் பார்த்தா, அவரு என்ன பண்றன்னு என்னைய பாக்கறாரு. அடிச்சு உடுடானு இரண்டையும் சேத்தி அடிச்சா, அவரும் நம்மளை மாதிரியே பண்றாரு.

எல்லாம் தின்னு முடிச்சுட்டு வெளிய வந்தா, கூட வந்தவன் சொல்றான்(சோத்து முசுவுல அவன இதுவரைக்கும் பாக்காவே இல்லீங்கோ!) கோழி பிரை நல்லா இருந்துச்சுன்னு.

அட விசாரிச்சு பார்த்த அந்த கெரகத்த நான் காலிபிளவர்ன்னுல உட்டுட்டு வந்தேன்.மனசே ஆறல போங்க. அது சரி இந்த பஃபே ல கையெல்லாம் வலில நடுங்க ஆரம்பிச்சுடுதுப, உட்காந்து இலைல சோறு போட்டு குழைச்சு அடிக்கிற மாதிரி வருமுங்களா? சொல்லுங்க பார்க்கலாம்.

Nov 16, 2005

ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா!

சென்ற வார நட்சத்திரம் கணேஷிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்."யோவ் மணி,சென்சிடிவான மேட்டர தான் எழுதுவியா?"னு. ரஜினி ராம்கி "இப்படியே தொடருங்கள்"னு சொல்றாரு.

ஏன்?ஜாலி மேட்டர் எழுதலாமே!

எங்க ஊருல 'டவுசரு தங்கராசு'னு ஒரு 'ஆ'சாமி. டவுசருன்னா-டவுசரு தெரியற மாதிரி-பட்டை போட்ட காடாத்துணி டவுசர்-வேட்டி கட்டுவாரு. ரைமிங்கா யாரோ பேரும் வச்சுட்டாங்க.அண்ணன் தம்பிக மூனு பேர்லயே அதிகமா நாலாவது வரைக்கும் படிச்சவரு. வாத்தி பொண்ணுக்கு 'ரூட்' போட்டதுல துரத்தி விட்டுட்டதா சொல்வாரு. தினத்தந்திய மட்டும் கரைச்சு குடிப்பாரு. சுப்பு கடை டீ ல போட்டு. லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம்-அதுவும் இன்டர்னேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம் இவரு கிட்ட தான் கேட்டு தெரிசுக்குவாங்க.சும்மா அடிச்சு உடுவாரு.அமார்த்தியா சென் கணக்கா.

தலையோட வேலையே ஊருக்குள்ள பேரு வைக்கிறதுதான்.பேருன்னா பட்டாசும் கிளப்பும்.பற்றியும் எரியும்.வவுறன்(வயிறு உடையோன் என்பதன் மரு உ), பின்னூசியான், கடுவான் இந்தப் பேரு எல்லாம் பிரச்சினை கிளப்பாத பேருக.

கல்யாணம் ஆகாத ஆளு. பிரம்மச்சாரினு எல்லாம் சொல்ல முடியாது. அங்க,இங்க போய் காசு சம்பாதிச்சு, காரு வாங்கி, வூடு கட்டி அரைவயசுல என்ன சந்தோஷம், இங்க வா உலகத்த நம்ம ஊருக்கு கொண்டு வரலாம்னு சொல்ற மனுஷன்.

சரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லையா? இருக்கே. என்னை மாதிரியே கவிதை எழுதி மத்தவங்க கழுத்த அறுக்கிறது, நோன்பி(திருவிழா)னு வந்தா மைனர் ஷோக்கு பண்ணி-மூஞ்சி நிறைய பவுடரு பூசி-கலர்க் கண்ணாடி போட்டு பார்க்கிறவங்களை தலை தெறிக்க ஓட வைக்கிறது, 'சீன் பாத்'(வாய்க்கால்ல பொண்ணுக குளிக்கிற இடம்) எடுக்கிறன்னு சொல்லி ஜிகினா வேலை பண்ணுறதெல்லாம்,ராசவுக்கு பொழுதுபோக்கு.

'வலைப்பதிவுகள்' குறித்து கூட டவுசருக்குத் தெரியும். சில பேர்களை எல்லாம் தெளிவா சொல்லுவாரு. சரி இவரை பத்தியே சொல்லிட்டு இருந்தா எப்படி இதை முடிக்கிறது.ஆங்! ஒரு விஷயம் இருக்கு.நம்ம கணேஷ் க்கு பேரு வெச்சாரு.அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது.எனக்குத் தெரியாது.

பேரு தெரியுமா? "ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா".

Nov 13, 2005

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்?.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் "இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்","வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்".

கருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.

மிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.

முகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.

இதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.

இந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.


ஜாலியா முடிகலாமா? சிறுபுள்ளத்தனமா என்னையும் திட்டாதீங்க....

Nov 12, 2005

கடலை போடலையோ கடலை!

கல்லூரிக் கடலை குறித்து விட்டத்தை பார்த்து கிடந்த சமயம் வந்த மின்னஞ்சல் இது.நாம்ம கொஞ்சத்தை 'உல்டா' அடிச்சு பண்ணினது.


மணி,அனிதாவுக்கு ரிங் பண்ணுறாம் பா

அனிதா: சொல்லுடா!

மணி: வாட் த டூயிங்?

அனிதா: இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். சார் என்ன பண்ணிட்டு இருக்காரு?

மணி: இப்போ தான் 'சுட்டும் விழி சுடரே' பாட்டு பார்த்தேன் சன் மியூசிக்ல

அனிதா: நல்ல பாட்டு.

(அனிதா பாடுறா..."மழை அழகா,வெய்யில் அழகா")

மணி: அப்பா!! நீ இவ்ளோ நல்லா பாடுவியா?(ஆரம்பிச்சுட்டான் யா)

அனிதா: *சிரிப்பு*

மணி: ஏய். இன்னொரு வாட்டி பாடேன்

அனிதா: என் ரூம் மேட் தூங்கிட்டா. அவ பயந்துடுவா பா(சீன பாருங்க)

மணி: கம் ஆன்! ப்ளீஸ் டா!

அனிதா: போடா. ஐ டோன்'ட் சிங் தட் வெல்

மணி: இட் வாஸ் ரியலி ஸ்வீட். ப்ளீஸ் பாடேன்

அனிதா: எனக்கு ஆட் ஆ இருக்கு டா

மணி: இதுல என்னமா இருக்கு?நான் தானே இருக்கேன்.நல்ல பாடறே.

அனிதா: நீ தான் சொல்லணும்

மணி: இப்போ பாடுவியா மாட்டியா?

அனிதா: ஏண்டா படுத்தறே

மணி: சை?சரி! ஓ.கே

அனிதா: ஐ டோன்'ட் கேவ் தட் கிரேட் வாய்ஸ்

மணி:ம்ம்ம்ம்

அனிதா: ஸரி. இவ்ளோ கேக்கறே. உனக்காக ஒரெ ஒரு லைன் பாடறென்(சுசீலா பா :))

மணி: கிரேட்!!(வழியல்)

அனிதா: எந்த பாட்டு பாடட்டும்? (ம்ம்ம்...சோதனை மேல் சோதனை)

மணி: ம்ம்ம்ம். 'உன் பெரை சொன்னலே' ஃப்ரம் டும் டும் டும்?

அனிதா: நைய்ஸ் சாங். பட் எனக்கு லிரிக்ஸ் ஞாபகம் இல்லை

மணி: சின்ன சின்ன ஆசை?

அனிதா: இல்லை இந்க பாட்டெ பாடறேன்

மணி: வாவ்!

(மேம் தொண்டையை ரெடி பண்ணிட்டு ரெண்டு லைன் பாடுறாங்க(சகிக்கலை)

அனிதா: இல்லை வேன்டாம். ஐ அம் ஃபீலிங் வெரி ஷய்!

மணி: பாடு சே பாடு. உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே ச்சே. பாடு

அனிதா: கலாட்ட பண்ற பார்த்தியா

மணி: நோ நோ. நீ ஷய் ஆ ஃபீல் பண்ற இல்லையா.ட்ரையிங் டு மேக் யூ கூல்

அனிதா: ம்ம்ம்

மணி: ப்ளீஸ் பாடேன் டா செல்லம்

அனிதா: நாளைக்கு பாடட்டுமாஅ?

மணி: ஸரி மா. உனக்கு எப்படி தொன்றதோ அப்படியே பண்ணு

அனிதா: ம்ம்ம்

மணி: குட் நைட்

அனிதா: குட் நைட்

கொஞ்ஜம் நேரம் கழித்து அனிதா,மணிக்கு ஃபோன் பண்ணுறா.

அனிதா: தூங்கிட்டயா?

மணி: இல்லை மா. மேட்ச் பார்த்துண்டு இருந்தேன்
(ஐயர் பாஷை சும்மா சீன் க்கு)

அனிதா: ஸரி. நீ மேட்ச் பாரு

மணி: ஏய். இட்ஸ் ஓ.கே. பழைய மேட்ச் தான்.

அனிதா: இல்லை. டிட் யூ ஃபீல் பேட் ஐ டிட்ன்'ட் சிங்?

(இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி.ஐயா யோசிக்கறாரு)

மணி: பேட் அப்படினு சொல்ல மாட்டேன். பட் ஐ வான்ட் யூ டு பி கம்ஃபொர்டபிள் ஃபர்ஸ்ட்.
நாளைக்கு பாடரென்னு சொன்னே இல்ல. சோ மீ வெயிட்டிங்
அனிதா பாடுறா.

மணி: வாவ். டூ குட்!

அனிதா: போறும். ஐ நோ கவ் கேவலம் மை வாய்ஸ் ஈஸ்

மணி: ஏய் யூ ரியலி சிங் வெல்.

அனிதா: போடா...நீ சொல்லனுமே அப்படினு சொல்றே

மணி: சே! சே! உன் வய்ஸ் நல்லா இல்லாடி நான் இவ்ளோ கெக்காவே மாட்டேன்

அனிதா: ம்ம்ம்ம்

மணி: நீ இவ்ளோ நல்லா பாடுவேனு எனக்கு தெரியாது(தெரிஞ்சிருந்தா?)

அனிதா: ம்ம்ம்! ஸரி குட் நைட்

மணி: குட் நைட்!

அனிதா: டேக் கேர்

மணி: யூ டூ

அனிதா: நெஜமாவே என் வாய்ஸ் நல்லா இருந்ததா(பார்றா)

மணி: நெஜமா! அஃப்கோர்ஸ்.

அனிதா: நீ பொய் சொல்றே

மணி: நாட் அட் ஆல். யூ சிங் வெரி வெல்

அனிதா: ம்ம்ம். என்னமோ சொல்றே. குட் நைட்.

மணி: குட் நைட்!!

Nov 10, 2005

புதிய வலைப்பதிவாளர்களே!

சில ஐடியாக்கள்.உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.

1)தனிப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நடத்துங்கள்.
2)"குஜால்" மேட்டராக தொடருங்கள்.
3)தெரிகிறதோ இல்லையோ எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமிடுங்கள்.
4)குஷ்பூ,தங்கர்,ரஜினி,ராமதாஸ் - பட்டாசான மேட்டர்.
5)கவிதை-நமுத்த மேட்டர்
6)பண்பாடு என்றாலே கிழித்தெறிய வேண்டும் எனக் கூவுங்கள்
7) சண்டைக்கென இருக்கும் சிலரை தொடர்ச்சியாக வம்பிழுங்கள்.
8)நினைவில் நிறுத்துங்கள்.நீங்கள் தான் இந்த சமுதாயத்தைத் திருப்பிப் போட வந்த முற்போக்குச் சிந்தனாவாதி.
9)முடிந்தால் இலங்கை குறித்து எழுதுங்கள்.இந்தியா...ம்ம்ம்ம்...'மூச்'
10)ஒவ்வொரு கமெண்டுக்கும் பதிலிடுங்கள்.100,200 ஐ த் தொடும் வரை. உதாரணத்திற்கு நிறைய பேர் உண்டு.
11)இலக்கியம் படித்ததில்லையா?கவலை வேண்டாம்.எழுதுங்கள்.அதுதான் தேவை.
12)பெண் பெயர் என்றால் மிக்க சந்தோஷம்.
13)ஜல்லியடித்தல் என ஒன்று உண்டு. மிக முக்கியமான விஷயம் அது. தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
14)பெயரில்லாமல் யாராவது திட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
15)கடைசியாக ஒன்று.கேள்வி மட்டும் கேட்டு விடாதீர்கள்.

Oct 26, 2005

வயது வந்தவர்களுக்கு மட்டும்

கனவு ஒரு சுகமான விஷயம் தான்.சந்தேகமே இல்லை.எந்த மாதிரியான விஷயங்கள் கனவில் வருகின்றன எனபது கவனிக்கப் படவேண்டிய விஷயம் அல்லவா?கனவு
காணச் சொல்கிறார்கள்
எனக்குப்
புரிய வில்லை.

முன்னேற்றத்திற்கும்
ஷகிலாவுக்குமான
தொடர்பு.


தலைப்ப இப்படி "குஜால்"ஆ வெச்சுட்டு மேட்டர் ல ஏமாத்திடான்னு - வோட்டுப் போட்டு தாக்கிடாதீங்க!கூட்டம் அதிகமாகிப் போச்சு.இதெல்லாம் "சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட்" டெக்னிக். :)

Oct 21, 2005

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல்

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல்

நாஞ்சில் நாடன்

சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிýருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிýருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிýருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு. ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங்குக் குரும்பை போன்றவை உண்டு. கெவுளி பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப் பெறும் செவ்விளநீர் எனக் கூறுவோருண்டு.

பழைய காலத்தில் சுள்ளிக்காடுகளில் குழுவாக வாசிக்கப்பட்ட சரோஜாதேவி இதிகாசங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட உவமை தேன்கூடு. அந்த உவமை சகிக்கவில்லை. பாலடை என்பது தேனடை அல்ல. மேலும் தீப் பந்தத்துடன் அணுகும் உறுப்புமல்ல அது. சொக்கநாதப்புலவன் பாடுகிறான், "முன்னே இரண்டு முலை, முற்றியபின் நாலு முலை, எந்நேரம் என் மதலைக்கு எட்டு முலை' என்று.

வடிவாக உடைக்கப்பட்ட தேங்காய் முறி சரியானதாக இருக்கும். சிறியதும் திண்ணியதும் கருமையானதும் என்றால் கண்முளைத்த உடன்குடி கருப்பட்டி என்பார்கள். நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் ஒருவர், எழுபத்து ஆறாவது வயதில் பால்நோய் வந்து இறந்தவர், மாநிறமும் வýயதும் இளகியதுமான முலைகள் எனில் சூரங்குடி கருப்பட்டி என்பார். கருப்பட்டிகள் எஞ்ஞான்றும் பால்வெள்ளை நிறமோ பொன்னின் நிறமோ கொண்டவை அல்ல.

அபினி மலர் மொட்டுக்கள் போன்ற முலைக் காம்புகள் என்றான் ஈழத்துக்கவிஞன் வ.ஐ.ச. ஜெய பாலன். பொல்லா வறுமையினால் முலைக்காம்பின் சுரப்பித் துளைகள் தூர்ந்து போயின தன் மனைவிக்கு -இல்ý தூர்ந்த பொல்லா வறுமுலை - என்றார் ஒப்பிலா மணிப் புலவர். அந்தப் பாடம் நடத்தியபோது, எனது விரிவுரையாளர், முலை எனும் இடங்களில் எல்லாம் கலை என்று வாசித்தார். நான் வாசித்த கல்லூரி இருபாலருக்குமானது. அன்றெல்லாம் எனக்கு உடýல் கொழுப்புக் கிடையாது எனினும் மனதில் கொழுப்பு உண்டு. விரிவுரையாளர் "வறுமுலை'யை "வறுகலை' என்று வாசித்தபோது, "ஐயா, அது இடைக்குறை, வறுகடலை என்று இருக்க வேண்டும்' என்று சொன்னேன். எட்டு நாட்கள் வகுப்பில் ஏற முடியவில்லை. எவனோ ஒரு தமிழ்முனி அவருக்குக் கொடுத்த சாபத்தினால், பின்னர் எனது நாவலொன்றை அவர் பாடம் நடத்த வேண்டியது வந்தது.

உங்களில் பலர் தாடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், தாரமங்கலம், திருவில்ýப்புத்தூர், பேரூர், திருவானைக் காவல் போயிருக்கலாம். அடுத்துப் போனால் சற்று இணக்கமாக நின்று கவனியுங்கள். நமது சிற்பிகள் எத்தனை நுணுக்கமாய் தெளிவும் தேர்ச்சியும் உடற்கூற்றறிவும் கொண்டவர்கள் என்பது தெரிய வரும். மொத்தமாகப் பார்த்தாலும் பங்கு பங்காய்த் தசைக்கோளம், கருவட்டம், காம்பு எனப் பார்த்தாலும் ஒன்று போல் மற்றொன்று இல்லை. ஒன்றின் அழகுபோல் மற்றதின் அழகு இல்லை. முலைகளுக்கும் அரசியல் பார்வை உண்டு, இடதுசாரி வலதுசாரி என்று. என்றாலும் வடிவில், தன்மையில், கொள்கையில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே.

முலைகள் என்பவை mammal glands அடங்கிய தசைக் கோளம் எனவும் பாýயýல் அதற்கு வேறெந்த சிறப்பான பணியும் இல்லை என்பர் உடற்கூற்றியல் விஞ்ஞானிகள். அதைப் பால்சுரப்பிகளின் கோளம் என்று மட்டும் மனிதன் பார்க்கவில்லை. கவிஞனும் காமுகனும் பார்க்கவில்லை.

"என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பது திருவெம்பாவை. ஏனதை எதிர்மறையில் சொன்னான் மாணிக்கவாசகன்? "உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எங்கணவராவார்' என்று உடன்பாட்டில் பேசியவன்தானே! "என் கொங்கை நின் அன்பர் தோற் சேர்க' என்பதுதானே இயல்பு. இயல்பில் கவிதை வாய்ப்பதை விடவும் எதிர்மறையில் சரியாக வாய்க்கிறது என உணர்ந்திருப்பான் போலும்.

"கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென்
அழலைத் தீர்வேனே!'

என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில். "திரி விக்கிரமன் திருகஙிகைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிலும் என் தடமுலையும்' என்கிறாள். "முற்றிலாத பிள்ளைகளோம், முலை போந்திலாதோம்' என்கிறாள்.

"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகýத்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்'

என்கிறாள். "கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை' என்கிறாள். "குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே' என்கிறாள்.

ஆண்டாளை, பெரியாழ்வாரின் double act என்பாரும் உளர். ஒரு பெண் விரகதாபத்தை இத்தனை வெளிப்படையாகப் பேசும் போக்கு பெண் குலத்துக்கே இழிவு என்று காபந்து செய்யும் முயற்சியாகக்கூட இருக்கலாம் அது. ஆனால் கவிதையின் மொழியை, தொனியைக் கவனிக்க வேண்டும். மேலும் பெரியாழ்வார் ஏன் இன்னொரு புனைபெயரில் எழுத வேண்டும்? நாயகி பாவம் என்பது புனைபெயரில்தான் வருமா?

மாணிக்கவாசகனின் "நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பது அரற்றல் இல்லை. தோள் சேர்தல் என்பது அணைதல் மட்டுமல்ல. தோளோடு இறுக அணைதýல் ஆசையும் காமமும் வெளிப்பாடு. தோள் சேர்தல் என்பதில் ஒரு கொஞ்சல், இசைவு, இணக்கம், கனிவு, காதல் . . . காதýத்தவர்க்கும் காதலுள்ள மனைவியைக் கொண்டவர்க்குமே அது அர்த்தமாகும். ஆண்டாளின் முலைகள் காமத்தின் வெளிப்பாடு எனின் எங்ஙனம் ஐயா அது mammal glands மட்டுமே ஆகும்?

திருப்பூவனத்துத் தாசியை - "முலை சுருங்கிய வையை திருப்பூவனத்துப் பொன்னனையாள்' என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர், மதுரை மீனாட்சியின் கிழக்கு வாசல் சமீபம் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கும் கவிஞர் ந. ஜயபாஸ்கரன்.

முலை சுருங்கிப் போனது இன்று வையையுமே ஆகும். பொன்னனையாள் திருப்பூவன நாதர் மீது வைத்த நகக்குறி புராணம் என்றாலும், நகக்குறி வைத்த தாசி பொன்னனையாளின் கொங்கைகள் காமத் திரவியம்தானே! முலையழுந்தத் தழுவிக் கிடந்திருப்பாள்தானே! ஆனால் குட்டி ரேவதி, "முலைகள்' என்ற கவிதை எழுதினால் தமிழ்ப் பண்பாட்டுக் காப்பீட்டுக் கழக நிறுவனர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பொது மேலாளர்களுக்கும் கோபம் வருகிறது. "சாயாத கொம்பு' என்று அந்தக் காலத்தில் பாடிய போது பக்திப் பரவசத்தில் நின்றார்கள் போலும்.

"எங்கள் தனம் கச்சிருக்கும் பாýருக்கும் காம பாணங்கள் பட்டுப் பிச்சிருக்கும்' என்பதை என் செய்யலாம்? "முலையும் குழலும் முளைப்பதற்கு முன்னே கலையும் வளையும் கழன்றாள்' என்பதை என் செய்?

தாசனின் மோகம் உணர லால்குடி சப்தரிஷி ராமமிர்தத்தின் "அபிதா' படியுங்கள் ஐயா!

ஒரு முலை திருகி எறிந்து சங்ககால மதுரையை எரியூட்டியவள் இளங்கோவின் கண்ணகி. அதென்ன bolt-nut போட்டு இறுக்கி வைத்திருந்தாளா என்றனர் திராவிடர்கள். "வா, மீத முலை எறி' என்கிறார் நெல்லை கண்ணன். உடம்பெல்லாம் இந்திரனுக்கு அல்குல் கண் முளைத்ததைப் போல, முலை முளைத்து ஒவ்வொன்றாய்த் திருகி எறிந்து எரியூட்ட இங்கே ஏராளம் மாநகர்கள் உண்டு. மறுபடியும் பசுக்களையும் சிசுக்களையும் அறவோரையும் பத்தினிப் பெண்டிரையும் தீயிýருந்து காத்துவிடலாம்.

ஆனால் அந்த முலை, நம் சொந்த முலை, தமிழனுக்குக் கெட்ட வார்த்தை. சுந்தர ராமசாமி ஒருமுறை எழுதினார், சிறுகதையில் முலை என்று எழுதினால் பத்திரிகை ஆசிரியர் வெட்டிவிடுவார் என. "அச்சமில்லை அச்சமில்லை' எனும் பாரதி பாடýலேயே "கச்சணிந்த கொங்கை மாதர்' எனும் வரியைத் தணிக்கை செய்தவர் ஆகாஷ்வாணியினர். ஆனால் இன்று தூர்தர்ஷன் சானல்களில் முலையைப் போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குகின்றனர். சூர்ப்பனகையின் முலையரிந்த இலக்குமணரின் வம்சாவளியினர் அவர்கள். முலைக்குப் பதில் மார்பு என்று அச்சுக் கோப்பார்கள். முலையும் மார்பும் ஒன்றா ஐயா? கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு' சிறுகதையில் வரும் "எனக்குத்தான் மாரே இல்லையே' என்பது வட்டார வழக்கு. சமகாலத் தமிழருக்கு நெஞ்சு, மார்பு, மார்பகம், மாங்கனி, ஆப்பிள், குத்தீட்டி, இளநீர், நுங்கு எல்லாம் முலைக்கு மாற்றுச் சொற்கள்.

"கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பு' என்றெழுதினால் பத்மபூஷண் விருதுக்குக் கோளுண்டு. ஆனால் முலை எனில் தீட்டு; குண்டி, பீ, மூத்திரம் எல்லாம் அமங் கலம். என்னுடைய சிறுகதை ஒன்றினைப் பிரசுரித்தவர் பீ, மூத்திரம் என வரும் இடங்களை வெட்டிவிட்டார். நேரில் பார்த்தபோது கேட்டேன், "உமக்கு அதுவெல்லாம் வருவதில்லையா? ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் என்றுதான் வருமா?' என. எனவே இடக்கரடக்கல், குழுஊக்குறி பயன்படுத்த வேண்டும். ஆனால் மனதின் மொழி முலை எனும் சொல். அது பால்பண்ணையும் பசி நிவாரணியும் மட்டுமல்ல. வளமுலை, இளமுலை, இணைமுலை, தடமுலை, உண்ணாமுலை என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்.

நாம் தப்புக்கொட்டும் திராவிட மொழிக் குடும்பத்தின் உறுப்பான மலையாளத்தில் முலை கெட்ட வார்த்தை இல்லை. "முலையும் தலையும்' என்பது அன்றாட மலையாள வழங்கு. "முலை கொடு' என்றால் பால்கொடு. "முலை குடிச்சு' என்றால் பால் குடித்தது. "முலை குடி மாறாத்த குட்டி' என்றால் பால்குடி மாறாத குழந்தை. "பகவத் கீதையும் குறைய முலைகளும்' என்பது பேப்பூர் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதைத் தலைப்பு. "ஆழ்ஹ"விற்கு முலைக்கச்சை என்பது வழக்கமான மலையாளப் பிரயோகம். ஆனால் நமக்கு "அவளுட ராவுகள்' என்பதை "அவளுட பிராவுகள்' என்று துணுக்கு வெளியிட்டுக் கிறுகிறுக்கத் தெரியும்.

"வாருருவப் பூண் முலையீர்' என்று மாணிக்கவாசகர் குறிக்கிறார்.

"பார இளநீர் சுமக்கப் பண்டே பொறாத இடை
ஆர வடம் சுமக்க ஆற்றுமோ-நேரே
புடைக்கனத்த கொங்கையின் மேல் பூங்களபம்
சாத்தி
இடைக்கு அனத்தம் வைத்தவரார் இன்று'

என்பது கவிஞனின் கரிசனம்.

"பிரம்மம் சத்யம், ஜகத் மித்யா' என்பது breast,bra போல என்கிறார் மலையாளக் கவி குஞ்சுண்ணி (நன்றி : விகடகவி விஜயகுமார் குனிசேரி). நடக்கவே போகாததோர் காரியத்தை "கோழிக்கு முலை முளைத்தாற்போல' என்னும் பழமொழியில் சொல்லும் பழக்கம் மலையாளத்தில் உண்டு. தமிழனுக்கு "ஸ்தனம்' என்றால் அது கெüரவமான சொல். குண்டியைப் "பிருஷ்டம்' எனச் சொல்ýப் புளகாங்கிதப்படுவதைப் போல. முலைமீது மட்டும் என்ன காழ்ப்பு என்பது புலப்படவில்லை. ஸ்தனம் என்பதும் அற்புதமான வார்த்தைதான். சஸ்தனீ எனில் முலைகொடுக்கின்ற உயிரினங்கள் என்பது பொருள். ஆங்கிலத்தில் சொன்னால் mammals.

"சங்கீதாமபி சாகித்யம் சரஸ்வதீய ஸ்தனத்வயம்' என்பது சங்கீதமும் சாகித்யமும் சரஸ்வதியின் இரண்டு ஸ்தனங்கள் என்றாகும். நான் சரஸ்வதியின் இரு தனங்களிலும் பால் குடித்தவன்.

பார்வதிக்கு மூன்று ஸ்தனங்கள் இருந்தன என்றும் நாதனைக் கண்டு நாணியபோது மூன்றாவது ஸ்தனம் மறைந்தது என்பதும் புராணம். லா.ச.ரா. "புத்ர' நாவýல் "அவளுக்கு மூன்றாவது ஸ்தனம் மறைந்தது' என்று எழுதியதைப் புரிந்து அனுபவிக்க புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

"விள்ளப் புதுமை ஒன்றுண்டு ஆலவாயினில் மேவு தென்னன்
பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை
பிடித்து அதிலே
கொள்ளிக் கண்ணன் திட்டியால் ஓர் குரும்பை
குறைந்து அமிர்தம்
உள்ளில் பொதிந்த இரண்டு இளநீர் கச்சு உறைந்தனவே'

என்றார் கவி காளமேகம். அதுதான் லா.ச.ரா.

"அன்று இரவு' சிறுகதையில் பிட்டுக்கு மண் சுமந்தவன் பிரம்படி வாங்கியபோது, பிரம்படி எங்கு எல்லாம் விழுந்தது என்பதைச் சொல்லப் புறப்பட்ட புதுமைப்பித்தன் "மூன்று கவராக முளைத்து எழுந்ததன் மீது' என்று எழுதுவதும் மூன்று முலைகளையே என்று தோன்றுகிறது.

முலை என்பது மனித உறுப்பின் பெயர் மாத்திரம் இல்லை. கோமாதா என்று இன்று காவியர் கொஞ்சும் பசுக்களின் மடுவை அல்லது மடியை முலை என்றுதான் ஆண்டாள் அழைக்கிறாள். "சீர்த்த முலை பற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்' என்பது திருப்பாவை.

முலை என்பது வெகுஜனத் தமிழில் கெட்ட வார்த்தையே தவிர, பெரியதோர் தொழில்துறையான திரைப்படத் துறையில் அஃதோர் மூலதனம். காற்று, தண்ணீர், சூரிய ஒளிபோல செலவில்லாததோர் கால்ஷீட். குனிந்து பெருக்கும், குதித்து மாங்காய் பறிக்கும், மழையில் நனைந்து கொடுங்கும், குலுங்கக் குலுங்க ஓடிவரும் சங்க கால யானை கற்கோட்டையை மத்தகத்தால் இடித்துத் தகர்க்க முயல்வதுபோல காதலனை ஓடிவந்து முலைகளால் இடித்துத் தாக்கும் காட்சிகளை நமது கலையுலகத் திலகங்கள் அறியாமலோ நோக்கமின்றியோ வைப்பதில்லை.

மேலும் பெருந்தனக்காரிகள் மீது அவர்களுக்குப் பெரும்பித்து. இறுகப் பிதுங்கக் கட்டிய முலைகள் குலுங்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். என்ன வேகத்தில், எந்தக் கோணத்தில் என்ன சந்தத்துக்கு ஓடிவந்தால் எம்முலை எப்படிக் குலுங்கும் என்பது அவர்களின் தொழில்நுட்ப அறிவு. தகப்பன் இறந்துபோன காட்சியானாலும், தம்பி சாகக் கிடக்கும் காட்சியானாலும், காதலன் கரிந்து கிடக்கும் காட்சியானாலும் முலைகளுக்கு முக்கியமானதோர் பங்களிப்பு உண்டு. ஆனால் நீதி சொல்லாமல், தர்மத்தின் பால் நில்லாமல், பெண்ணைப் பேணாமல், சமத்துவம் பேசாமல், அரசியல்வாதிகளின் காவல்துறையின் ஒழுக்கம் பற்றிப் போதிக்காமல் ஒரு திரைப்படம் காணக்கிட்டாது இங்கே.

பன்னிரண்டு வயதிýருந்தே, நாற்பத்தைந்து ஆண்டுகளாக, முகக்கண்களை விடவும் அகக் கண்களைவிடவும் முலைக்கண்கள் தீவிரமாக வெறித்து வெறித்துப் பார்க்கின்றன. பாலூறும் பரிவுடன், காமத்தின் வெப்பத்துடன், வடிவுப் பெருமை பொங்க, "சீ, நாயே' எனும் சுளிப்புடன், "நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?' எனும் வெறுப்புடன், தனது இருப்பையே பொருட்படுத்தாத செருக்குடன், வாயைப்போல் மூக்கைப்போல் செவியைப்போல் தானே நானும் எனக்கென ஏன் சிறப்புச் சலுகை எனும் அலட்சியத்துடன், உனது தகப்பன் வயதொத்தவன் பருகியது அல்லது தொட்டுத் தடவியது எனும் தெளிவுடன். . .

"இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை' என்பது பட்டர் பார்த்த அபிராமியின் முலைகள். அது பக்தியின் வெளிப்பாடு.

"அனைத்திரவும் சேர்ந்துறங்க முலை ரெண்டு
வேண்டும்
வேறு குறையொன்றுமில்லை
நிறைமூர்த்தி கண்ணா' என்பதும்

கொங்கைச் செல்வி என்பவள் குடமுலையாட்டி என்பதும் விடலை விளையாட்டு.

அறவுரையாகச் சொல்லும், பேயைப் பெண்ணாக மாற்றிய ஒளவையின் வெளிப்பாடு "பெண்ணாவாய், பொற்றொடி மாதர் புணர்முலைமேல் சாராரை என்றோ மற்றெற்றோ மற்றெற்று' என்பதன் கடுமை.

இரயில் பயணங்களிலும் பிற பயணங்களிலும் பொதுக்கழிப்பிடங்களில் பாரத தேசத்தவர், செப்பும் மொழி பதினெட்டு உடையவர் (முழு வளர்ச்சி பெற்ற ஆனால் வரி வடிவம் இன்னும் வாய்க்காத ஆயிரக்கணக்கான இந்திய மொழி பேசுகிறவர் பற்றிய கணக்குத் தெரியவில்லை) தங்கள் கலை உணர்வையும் உடற்கூறஙிறு அறிவையும் வெளிப்படுத்துவது மூன்றே மூன்று உறுப்புகளில்தாம். ஆண்குறி, பெண்குறி, முலைகள் . . .

"பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்'

என்றார் பட்டினத்தடிகள். பட்டினத்தடிகள் பெண்ணை என்னவென்று நினைத்துப் பாடினார் என்று தெரியவில்லை. "எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் நட்ட குழி, எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்' என்கிறார். தென்மாவட்டங்களில் பட்டினத்தடிகளைப் பெண்கள் வாசிப்பதில்லை. அதில் ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.

லதா ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை ஒன்று -முலைகள் முதுகில் முளைத்தால் என்னவாகும் என்பது பற்றியது. முகத்துக்குச் செய்வது போல் முலைகளுக்கும் இன்று ஒப்பனைகள் செய்கிறார்கள் வசதி உடையவர்கள். முலைக்காம்பில் பொன் வளையம் அணிகிறார்கள். அல்ýவட்டம், புல்ýவட்டத்தில் வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் செய்கிறார்கள். முலை கொழுக்க, வெளுக்க, மினுங்கத் தைலம் தடவுகிறார்கள். முலை மணக்கச் சாந்துகள், குழம்புகள், லோஷன் பூசுகிறார்கள். இறங்கிச் சரிந்த முலைகளை, தவிலுக்கு வார் பிடிப்பதைப் போன்று, அறுத்துத் தைத்து ஏற்றிக் கட்டுகிறார்கள். சிறுமுலையாட்டிகள் சிýக்கன் ஜெல்ý செலுத்தி வடிவு செய்கிறார்கள்.

ஆனால் வயýல் களை பறிக்கிறவர்கள், சிற்றார்கள், செங்கற்சூளைப் பணிப்பெண்கள், தமிழ் சினிமாக்களும் வாராந்தரத் துணுக்குகளும் சித்தரிக்கும் "முனியம்மா'க்கள், பூக்காரிகள், கீரைக்காரிகள், கூறுகட்டிக் காய்கறி விற்போர், ஓய்வுபெற்ற பால் தொழிலாளிகள் ஆதிவாசிகள் எல்லோரும் என்ன செய்வார்கள்? பட்டினத்தடிகளுக்கு அவர்பற்றி எல்லாம் அக்கறை உண்டா?

சமீப காலம் வரை நம்பூதிரி, நாயர், ஈழவப் பெண்களும் தீயரும் புலைச்சிகளும் கேரளத்தில் முலை மறைத்ததில்லை. இன்னும் கிராமத்துச் சிற்றோடைகளில் குளங்களில் முலைகள் தொங்கக் கிழவிகள் துவைத்துக் குளிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் தோள்சீலைப் போராட்டம் பற்றி எழுதுகிறவர்கள் அரை உண்மைகளையே எழுதுகிறார்கள். வரலாறு என்பதே சார்புடையதுதான் போலும். அன்று கேரளத்தில் பெண்கள் நடக்கும்போது முலைகள் ஆடக்கூடாது. ஆடினால் அதற்கென்று வரி இருந்தது, "முலை குலுக்கிப் பணம்' என்று. கேரளம் என்பது கடவுளின் சொந்த நாடு.

ஆனால் என்ன கொடுமை பாருங்கள் "மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கட்டுப் போகாத குண்டு மாங்கா' என்றெழுதும் கவிச் சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின் வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும், கனிமொழிக்கும், உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும் கவிதை எழுதப் பாடம் நடத்துகிறார்கள். கிருத்திகா, அம்பை எனும் பெயர்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பிறப்புறுப்பு பற்றிப் பேசினால் பத்தினித் தன்மைக்கு என்ன பங்கம் வந்துவிடும் என்று தெரியவில்லை. முதýல் பத்தினி என்பதன் பொருள் என்ன என்று யாராவது சொல்வார்களா? ஒரு சிலர் சொல்கிறார்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்புக்கும் வேண்டி மட்டும் யோனி என்றும் முலைகள் என்றும் எழுதுகிறார்கள் என்று. அவ்வாறெனில் பட்டினத்தாரும் ஆண்டாளும் அதிர்ச்சிக்கு ஆளாக்கவே எழுதினார்களா? தமிழ் சமூகத்தை அவ்வளவு எளிதில் அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட முடியுமா? தமிழ் சினிமா பார்த்து, pulp நாவல்கள் படித்து, வணிக இதழ்கள் படித்து, blow-ups ம் pin-ups ம் பார்த்து, சமூக நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் பார்த்து தமிழ் சமூகம் அதிர்ச்சிக்கு ஆளாகிக் கிடக்கிறதா இங்கு? மலை முழுங்கி மகாதேவனுக்குக் கதவு ஒரு பப்படம் அல்லவா?

மேலும் நாங்கள் எங்களுக்காகவே எழுதி, எங்களுக்குள்ளேயே வாசித்து, எங்களுடனேயே சச்சரவு கொண்டு, எங்களுக்குள்ளேயே முடங்கிப் போகிறவர்கள் தானே வெகுஜன ஊடக மதிப்பீட்டில்! சென்னைவாழ் திரைப்பட உதவி இயக்குநர்கள் இருநூற்றுச் சொச்சம் பேர் தவிர எங்கள் வாசகர் அயýல் யார் ஐயா?

ஆனால் இதில் பெண்ணின் தரப்பு பற்றி யார் யோசிக்கிறார்கள்? "விரிகிறதென் யோனி' என்றும் "உன்னித் தெழுந்தது என் முலை' என்றும் எழுதினால் அதன் பொருள் கவிஞரின் யோனி அல்லது முலை என்பதல்ல. என் கதாபாத்திரத்துக்கு நான்கு மனைவியர் எனில் எனக்கு நான்கு மனைவியர் என்றா பொருள்? கவிதையின் வெளியில் துலங்குவது பெண்ணின் மனம். அது ஆண்டாள் ஆனால் என்ன, ஒளவையார் ஆனால் என்ன?

ஒரு ஆணின் மார்பு போன்ற தட்டையான, பலகை போன்ற நெஞ்சு கொண்ட வாýபப் பெண்ணின் நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்! மேனாடுகள் போல், நம் நாட்டிலேயே மேட்டுக் குடியினர் போல் சிýக்கன் ஜெல் அல்லது செலைன் வாட்டர் பைகள் கொண்டு முலைகளைச் சீரமைத்துக்கொள்ளும் வசதியும் வாய்ப்பும் அற்ற பெண்களின் துயரத்தைப் பெண் கவிஞர் ஒருவர் எழுதினால் சொல்வார்கள், காம விகாரம் கொண்டு அலைகிறாள் என. ஆனால் படைப்பிலக்கியவாதி கிருஷ்ணன் நம்பி யோசித்திருக்கிறார். வள்ளுவன் அதுபற்றி கவன்றிருக்கிறான் -

"கல்லாதான் சொற்காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று' - என்று.

நமது சங்கத் தமிழ் இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்கள், கýங்கத்துப் பரணியின் "கடைதிறப்புக் காதை', விறý விடு தூது எனப் பலவும் "நகக்குறி இடுதல்' பற்றி சொக்கிச் சொக்கிப் பேசுகின்றன. எனக்கு நீண்ட நாட்களாய் ஒரு கேள்வி உண்டு. அதென்ன நகக்குறி "இடுதல்'? அது நெற்றிக்கு இடுதல் போலவா? அல்லது மாகாளிக்கிழங்கு ஊறுகாய் இடுதல் போலவா?

புணர்ச்சியின்போது அல்லது புணர்ச்சிக்கான முன்களியின்போது இருபாலருக்கும் பற்தடம் பதியும். நகங்கள் கீறும். விரல்பட மென்தசை கன்னும். உதைத்தலும் கடித்தலும் கழுதைகளுக்கு மாத்திரமான முன்களி அல்ல. ஆனால் நகக்குறி "இடுதல்' என்றால், இடுதல் எனும் சொல்ýல் ஒரு மனப்பூர்வம் தெரிகிறது. உத்தேசம் தெரிகிறது. சற்று அணுகிப் பார்த்தால் வன்முறை தெரிகிறது. நகக்குறி விழுதல் என்பதல்ல, நகக்குறி இடுதல் என்பது. தனங்களில் இடப்பட்ட நகக்குறியைப் பெண் பகல்பொழுதுகளில் தடவித் தடவித் திரிவாள் என்றும் அடுத்த இரவுப் புணர்ச்சிக்கு ஆயத்தம் கொள்வாள் என்றும் ஆண்பாற் புலவர்க்கும் உரையாசிரியர்களுக்கும் கற்பித்தார் எனில் பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை.

நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா எனப் பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களிடம் கேட்க வேண்டும். விதைப் பை பற்றிக் குறிப்புகள் உண்டா? கலவிக்கும் காமத்துக்கும் கிரியா ஊக்கி முலைகள்தானா? கம்பனோ எனில், "தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலத்தன்ன தாள்கண்டார் தாளே கண்டார்' எனத் தோளிýருந்து நேரே ராமன் தாளுக்குச் சரிகிறான். ஆனால் சூர்ப்பன கையைப் பாடும்போது சல்லாப சரசம் செய்கிறான்.

சங்கம் இருக்கட்டும், காப்பியங்கள், நீதி நூற்கள், இராமகாதை, பெரியபுராணம், தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி, திருமுறைகள், நாலாயிரம் தொடங்கி இன்றைய கவியரசுகள் வரை எங்கேனும் ஆண்குறி பற்றிய பேச்சு உண்டா? ஒருவேளை அது மாய காம உறுப்போ? ஆனால் நம் சிற்பிகள் அது போன்ற ஓரவஞ்சனை கொண்டவர்கள் அல்ல.

நெப்போýயனின் 29.984750333 செ.மீ. நீளமுள்ள, ஐரோப்பிய ஆண்களின் பெருமையின் வாழும் அடையாளமான, பதப்படுத்தப்பட்ட, தோற் சுருக்கங்கள் நீக்கப்பட்ட, முழு நீள சாத்தியத்தை நீட்டியெடுத்த ஆண்குறி இன்னும் காட்சியில் இருக்கிறது என்கிறார்கள். ஐரோப்பிய கலைப்பயணங்கள் மேற்கொண்டவர் கண்டிருக்கக் கூடும்.

ஐரோப்பியப் பெருமைக்குத் தலை தாழ்த்தி நின்ற ருஷ்யப் பெருமையின் பங்கப்பட்ட வடிவத்திற்கு விடிவொன்று கிட்டியிருப்பது சமீபத்திய செய்திக் குறிப்பில் தெரிய வந்தது. ஙஹக் ஙர்ய்ந், ஞப்க் ஙர்ய்ந்அல்ல, என்றழைக்கப்பட்ட ரஸ்புடீன் ஆண்குறி மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அதன் பதப்படுத்தப்பட்ட, தோற் சுருக்கங்கள் நீக்கப்பட்ட, முழு சாத்தியத்தை நீட்டி எடுத்த, 30.18794666 செ.மீ நீளம் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் முற்போக்குப் பயணிகள் இனி காணலாம். நமது தொல் தமிழ் மன்னர்களின் குறி பற்றிய பரணியும் இல்லை பள்ளும் இல்லை. செம்மொழி என்றால் முலைபற்றி மட்டும் பேசினால் போதுமா? அல்லது முலை பற்றிப் பெண்கள் மட்டும் பேசக்கூடாது என்பதா?


நாஞ்சில் நாடன்
நன்றி:உயிர்மை'2004

ஆபாசம் இல்லையே?

Oct 3, 2005

காலச்சுவடு கவிதைகள்!

தனிமை-1
தன் நாவுகளால்
என் கண்ணீரையும்

அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்

இப்போது
படிமமாக்குகிறது.

சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை

தனிமை-2

கண்ணாடி பதித்த
ஓட்டின் வழியே
நகர்ந்து கொண்டிருக்கும்

இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்.

உருக்கமற்ற
உணர்ச்சியில் வழியும்
வியர்வையில்.

வா.மணிகண்டன்
நன்றி:காலச்சுவடு'அக்.2005

Oct 1, 2005

ஐதராபாத் நண்பர்களே!!!சந்திப்போமா?

எல்லோரும் அங்கங்கே சந்திக்கிறார்கள்.நாமும் சந்திப்போம்.கூடிய விரைவில்.இடம்,நாள் எல்லாம் நானாக முடிவு செய்தால் எனக்கு அடி விழக்கூடும்(பின்னிப் படல் அடுக்குதல்.,ஒரு சிறு திருத்தம் எல்லோரும் பெடல் என இதனைச் சொல்லுகிறார்கள்.இது படல்,ஓலையில் பின்னப்பட்ட படல்).

அனைவரும் சேர்ந்தே முடிவு செய்யலாம்.ஒரு வார இறுதியில்,ஒரு அமைதியான இடமாகச் சொல்லுங்கள்.

கோபி,வீ.எம்,வாய்ஸ் ஆன் விங்க்ஸ்,நந்தா,பாலராஜன்கீதா ஆகியோர் இங்கு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள்!

Sep 28, 2005

நடுங்க ஆரம்பித்திருக்கும் இந்திய அரசு.

21 பில்லியன் டாலர் மதிப்பு,25 ஆண்டுகள்,ஒரு பேரல் 31 டாலர் மட்டுமே.ஒரு மாபெரும் திட்டம் நாசம் அடைந்திருக்கிறது.ஈரான் இந்தியா இடையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு(குழாய் மூலம்) திட்டம் நிறுத்தப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரமான,பயந்த மனநிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் நாள் உலக அணு அற்றல் மையத்தில்,ஈரானுக்கு எதிராக வாக்களித்ததன் எதிர்வினை இந்நிகழ்வு.

அமெரிக்கத் தலையீட்டுடன் இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.குழாய் எரிவாயு திட்டம் ஆரம்பிக்கும் போது அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.முன்பு இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்த இந்தியா,கான்டலீஸா ரைஸ் இந்தியா வந்த போதும்,மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற போதும் பின் வாங்க ஆரம்பித்தது.

உலகின் எண்ணை வளத்திலும்,அணு வணிகத்திலும் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்னும் அமெரிக்காவின் எண்ணத்திற்கு வலு சேர்க்கக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தில்,அடிபணிந்து வக்களித்து,இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும்,தனது தனித்தன்மையிலும் பெரும் பின்னடைவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்த அரசு.

தனது அற்றல்(மின்) தேவைக்காக,அணுவைப் பயன்படுத்தும் உரிமை ஒரு தேசத்திற்கு முழுமையாக இருக்கிறது.இதுவரை ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கான எந்த வித ஆதாரமும் யாரிடமும் இல்லை.ஐ.ஏ.ஈ.ஏ பொது இயக்குநர் கடந்த செப்டம்பர் 2 ஆம் நாள்,அணு குறித்த விவகாரங்களில் ஈரான் முழு ஒத்துழைப்பு தருவதாகவும்,விவகாரங்கள் சுமூகமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்னும் நிலையில்,புஷ் மூலமாக ஒரு கட்டாயத்திற்கு ஈரான் இழுத்துச் செல்லப்படுகிறது.

இந்த பிரச்சினையில் எந்த வித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது நடுவண் அரசு.எந்த தேசத்தையும் பார்த்து பயப்படத் தேவை இல்லை,அதற்கான பொருளாதாரமும்,ஆற்றலும் நம்மிடம் இருக்கிறது எனச் சொல்லி வந்த அரசு இப்போது நடுங்க ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஈரானை எதிர்ப்பதால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.அமெரிக்கா வழக்கம் போலவே இந்தியாவுடன் நட்பு எனச் சொல்லி,பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்கும்.ஈரானுடனான உறவை இழப்பது மட்டுமே இந்தியாவுக்கான பயன்.

எதிர்த்து வாக்களித்ததனால் திட்டத்திற்கு எந்த பாதிப்பு வராது எனச் சொன்ன இந்திய அரசுக்கு பதில் சொல்லும் முகத்தான்,தனது அரசியல்,பொருளாதார விவகாரங்கள் இணைந்தே இருக்கும் என தீர்க்கமாக அறிவித்திருக்கிறது ஈரானிய அரசு.

அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தடியெடுக்க முயல்கிறது.இந்தியா சலாம் போட ஆரம்பிக்கிறது.

Sep 26, 2005

"கோயில் கொண்ட மகராசி" குஷ்பூ வாழ்க.

"பண்பாட்டு நாயகி" குஷ்பூ ஒன்று சொல்லி இருக்கிறார்.யார் வேண்டுமானாலும் யார் கூடவும் உறவு வைத்துக்கொள்ளலாம்.(ஆணும் பெண்ணும்தாங்க).ஆனால் அந்த பெண் கர்ப்பம் ஆகாமலோ அல்லது கண்ட நோய் வராமலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.

குஷ்பூ கோயில்,குஷ்பூ இட்லி,குஷ்பூ ஜாக்கெட்(?)னு எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள்.

சுந்தர்.c க்கும் திறந்த மனது.மனைவியை முழுமையாக ஆதரிக்கிறார்.தமிழ் பண்பாட்டை பற்றியும்,அதற்கு வரைமுறைகள் வைப்பதற்கும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்று தெரியவில்லை.

தங்கர் பச்சான் ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு வந்த இவருக்கு இப்போது தமிழ்நாடுப் பண்பாடு குறித்துப் பேசும் போது அறிவு எங்காவது தொலைந்து விட்டதா என்று தெரியவில்லை.

அனைத்து நிகழ்வுகளுக்கும் எதாவது பின்புலம் இருக்கும்.இந்த நிகழ்வுக்கும் இருக்கிறது.புடவை கட்டிப் பேசினால் அவள் தமிழ் பெண்ணாகி விடுவாள்.தமிழ்நாட்டு மருமகள் என்றெல்லாம் எழுதிய தமிழ் ஊடகங்களும்,தமிழ் மக்களும் தான்.

இவர்கள் எப்படியோ தொலைந்து/அழிந்து போகட்டும்.குஷ்பூ பிரபு என ஆட்டோகிராஃப் போடட்டும்.வேறு மலையாள நடிகருடன் சுற்றட்டும்.எதாவது டைரக்டரை திருமணம் செய்து கொள்ளட்டும்.தன்னுடன் நடிக்கும் நாடக நடிகருடன் கும்மாளம் அடிக்கட்டும்.

ஏற்கனவே கரையான் அரித்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.இவர்களுக்கு எல்லாம் ஏதாவது வகையில் பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும்.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.விபச்சார வழக்கில் கூட.

விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் போது கூட தமிழ்நாட்டில் யாருக்கும் செக்ஸ் பற்றி தெரியாதா என வினவுகிறார்.தெரியும்.அதற்காக சாலையில் கூட உறவு வைத்துக்கொள்ள முடியுமா?.இவரை எல்லாம் அறிவாளி என்று கொண்டாட ஒரு கூட்டம் தயாராகி விடும்.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் இதை போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்.அல்லது விவாததிற்கென வைக்கப்படும் போது,எதிர் வினைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.பிறிதொருவர் இது போன்றதொரு கருத்தை வெளியிட தயங்க வேண்டும்.

Sep 18, 2005

மரணம் மரணம் மரணம் கேட்டேன்!

ஐதராபாத்தின் பெருமைகளைச் சொல்ல ஒரு நாள் போதாது.அதே போல்தான் அதன் கொடுமைகளையும்.'அமர்க்களம் படத்தில் வரும் ""கேட்டேன் பாடல் ஆசைகளைப் போல்தான் எனது ஆசைகளும்.


பாக்கு போடாத ஆணைக் கேட்டேன்
பர்தா போடாத ஃபிகரைக் கேட்டேன்
எச்சில் துப்பாத மனிதன் கேட்டேன்
ட்ராபிக் இல்லாத சாலையைக் கேட்டேன்
ரூல்ஸை ஃபாலோ பண்ணும் டிரைவர் கேட்டேன்
சர்க்கரை இல்லாத சாம்பார் கேட்டேன்
காரம் இல்லாத சாதம் கேட்டேன்
பொடிஞ்சு போகாத இட்லி கேட்டேன்
லு சேர்க்காத வார்த்தை கேட்டேன்
உ இணையாத ஆங்கிலம் கேட்டேன்
கப்ஷா இல்லாத சினிமா கேட்டேன்
குத்தாட்டம் இல்லாத ஊர்வலம் கேட்டேன்
தகரம் அடிக்காத பேண்ட் க்ரூப் கேட்டேன்
சாலைகள் நிரம்பாத மழை நாள் கேட்டேன்
பேச்சிலருக்கு தரும் வீடுகள் கேட்டேன்
குறைந்த செலவில் பஸ் பயணம் கேட்டேன்
பயந்து போகாத போலீஸ் கேட்டேன்
மேகப் செய்யாத பெருசுகள் கேட்டேன்
டையிங் செய்யாத சிறுசுகள் கேட்டேன்
படித்துப் பார்க்க தமிழ் பேப்பர் கேட்டேன்
குளித்துப் பார்க்க வாய்க்கால் கேட்டேன்
நடந்து பார்க்க கடற்கரை கேட்டேன்
அட்லீச்ட் எனக்கொரு ஃபிகரைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்க வில்லை
கிடைத்தவை யாவும் பிடிக்கவில்லை.....
இந்த ஊரே ஊரே வேண்டாம்
வேறு ஊரு ஊரைக்கேடேஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......

Sep 10, 2005

நயன் தாரா சினிமாவிற்கு வந்த சூட்சுமம்!

இந்த நயன் தாரா சினிமாவிற்குள் வந்த கதையை திரைத்துறையில் பணிபுரியும் என் நண்பன் சொன்னான்.எல்லோரும் வேறு மாதிரி நினைத்துகொண்டு இருப்பர்.உண்மை இந்தக் கட்டுரையின் முடிவில் தெரியும்/புரியும்.

அதாவுதுங்க.....நானு பாரதியாரின் கட்டுரையை மாங்கு மாங்குனு படிச்சு கண்ணா முழி கண்ணுக்குள்ள போறா மாதிரி பொழிச்சு பொழிச்சுனு டைப்ப் பண்ணி சந்தோஷமா இந்த வலைப்பதிவுல போட்டனுங்க.அட மொத்தமா முப்பது பேரு கூட படிக்காம போய்ட்டாங்க போங்க.எனக்கு பொசுக்குனு போய்டுச்சு.அட என்னங்க பார்தியார் என்ன அவ்வளவு பாவப்பட்ட சென்மமா?

பொக்குனு உக்காந்துட்டு இருந்த என்றகிட்ட பிரெண்டு வந்து சொன்னான்.சும்மா ரவுசுக்குனு ஏதாவது சினிமாக்காரியப் பத்தி போடுன்னு.ஆனது ஆகுட்டும்னு போட்டேன்.நான் இத எழுதும் போத்து என்ற ப்லாக்க பார்த்தவங்க மொத்தம் 4804.(அதாவது பாரதி வரைக்கும்).

நயன் தாராவுக்கு வந்தவங்கள்ல நீங்க எத்தனாவதுன்னு நீங்களே பார்த்துக்குங்க.

ஆமாம் மறந்துட்டேன்.நயன் தாரா "உழைப்பால" சினிமாவுக்கு வந்தாங்களாம்.

Sep 7, 2005

பாரதியின் கண்டறியப்பட்ட புதிய கட்டுரைகள்

"பாரதியின் கண்டறியப்பட்ட புதிய கட்டுரைகள்" என்னும் புத்தகம் எனக்குக் கிடைத்தது.பாரதியின் வெளியுலக்குக்கு அறிமுகமாகாத கட்டுரைகளின் தொகுப்பு இது.(தொகுப்பாசிரியர்:சீனி.விசுவநாதன்,கவிக்குயில் அச்சகம்,சென்னை)1994 ஆம் ஆண்டில் வெளி வந்த புத்தகம்.கட்டுரைகள் சுவாரசியாமாக இருக்கின்றன.பாரதியின் நடை பிரம்மாண்டமாக இருக்கிறது.இரண்டு கட்டுரைகளை பதித்துள்ளேன்.

சுதேசினிகள்.
"சுதேசியம்"என்று கூறப்படும் முயற்சி இப்போது இத் தேசம் முழுதும்பரவி வருவதை அனைவரும் உணர்வார்கள்.
அன்னிய தேசத்தில் செய்து வரும் பொருள்களை விலக்கி வைத்து விட்டு,நமது தேசத்துச் சாமான்களையே விலைக்கு வாங்கி,நமது வர்த்தக நிலையையும் பொருள் நிலையையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே "சுதேசியத்"தின் நோக்கம்.

பெங்காள ஜனங்களுக்குள்ளேதான் இவ்வூக்கம் மிகுதியாக ஏற்பட்டிருக்கிறது.
ஆனால்,பெங்காளத்தில் ஒருவிதத் திருத்தமும் ஆண் பிள்ளைகளோடு நிற்பதில்லை.

பெங்காளத்து ஆண் மக்களை யெல்லாம் பற்றியிருக்கும் சுதேச ஆவேசம்
பெண்களுக்குள்ளும் பரவுகின்றது.எனவே மாதர்களும் பிரத்தியேகமாகச் சபைகள் கூடி,அந்நியச் சரக்குகளை விலக்கி விட வேண்டும்மென்று பிரதிக்கினைகள் செய்து வருகிறார்கள்.

(சக்ரவர்த்தினி:1905 செப்டம்பர்-ப.46)

வால்மீகி ராமாயணப்பாட்டு
தமிழ் நாட்டு மாதர்கள் எத்தனையோ தலை முறைகளாக மதப்பயிற்சியும்,சன்மார்க்க நடையும் அடைவதற்க்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தவை பாரத-ராமாயண முதலிய புராதன சரித்திரங்களின் லாரத்தை எளிய நடையில் கொண்டனவாகிய வீட்டு பாடல்களே என்பதை எல்லோரும் அறிவார்கள்.
பழைய காலத்து மாதர்கள் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கா விடினும்,மேற்கூறப்பட்ட பாடல்களே அவர்களுக்கு கூடியவரை ஞான ஊற்றுக்களாக விளங்கின.

கல்விப்பயிற்சியின் பொருட்டுப் பாட சாலைகளுக்குச் செல்வோராகிய
தற்காலத்துப் பெண்கள் இளமையிலிருந்தே வீட்டில் மேற்கூறப்பட்ட இனிய
பாடல்களைக் கற்றுக்கொள்ளச் சாவகாச மேற்படுகிறதில்லை.ஆதலால் மேற்படி பாடல்களை யாவரேனும் திரட்டிப் பிரசுரித்துக் கொடுப்பார்களாயின்,அது மிகுந்த உபகாரச் செயலாகும் என்பதில் ஆட்சேபமில்லை......
(சக்ரவர்த்தினி:1906 ஜூலை-பக்.284)

Sep 4, 2005

நகுலன்

ஏனோ பலருக்கு கவிதைகள் பிடிப்பதில்லை.குறிப்பாக வலைப்பதிவு நண்பர்களுக்கு.கவிதையைப்பதிவில் இடும்போது மட்டும் குறைவான "ரெஸ்பான்ஸ்" .நகுலன்(தொகுப்பு:சுருதி) கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள் இங்கே.

1.வேறு

உலகச்சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்

உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்

விஷயம் வேறு


2.சிலர்

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.

3.அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

4.தேடல்.

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.

Sep 1, 2005

எடுடா அருவாளை! போடுடா பெருமாளை!.

நான் கவிதை படிக்க ஆரம்பித்த சமயம்,எனக்கு இரண்டே வகைக் கவிதைகள் தான் தெரியும்.

முதல் வகை,

கண்ணே உன் கன்னம்
என்ன
கடலை மிட்டாயா?
இத்தனை தித்திப்பு!

இரண்டாவது வகை

தோழா
பொறுத்தது போதும்
எடுடா அருவாளை
போடுடா பெருமாளை.

சிறு பத்திரிக்கையை ஆரம்பித்த போது அதிர்ச்சி+ஆச்சரியம் கூடிக் கும்மாளம் அடித்தன.அந்த கவிதைகள் எனக்குப் புரியாமலே இருந்தன.இன்றும் பல கவிதைகள் எனக்குப் புரிவதில்லை.

மரபுக்கவிதை உடைக்கப்பட்டதே சாமானியனுக்கும் கவிதை புரிய வேண்டும் என்று தானே?
ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒரு படிமத்தைத் தரலாம்.அல்லது எல்லோருக்கும் ஒரே படிமத்தைத் தரலாம்.ஆனால் புரிய வேண்டும்.

படிமத்தை நுழைக்கிறேன்,பட்டாசு கிளப்பறேன் எனச் சொல்லும் புரியாத கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு குட்டிக் கவிதை.உங்களுக்கு உடன்பாடா எனச் சொல்லுங்கள்.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

Aug 26, 2005

தமிழன் ஐய்யா,இது இந்தியத் தமிழன்.

இந்தியா மீதோ,இந்திய அரசின் மீதோ இலங்கைத்தமிழர்களுக்கு தீவிரமான கோபம் இருக்கலாம்.இருப்பது என் பதிவில் இடப்பட்ட ஒரு சில பதிவுகளில் தெரிகிறது.அதுவும் நன்றாக.
ஒரு நாட்டினை மற்ற நாட்டின் இராணுவம் கையக்கப்படுத்த நினைக்கும் போதோ அல்லது தனது போலிஷ்க்காரத்தனத்தினை காட்ட நினைக்கும் போதோ சுயமரியாதை உள்ள யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
அதுவும் தன் தாயின் மீதும்,தனது தங்கையின் மீதும் கை வைக்கும் போது?

எனது பதிவினை பதித்துவிட்டு,திரு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.("அது அந்தக் காலம்" ஆசிரியர்).

இலங்கையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் உள்ள நிகழ்வுகளை,சார்பின்றி விளக்கினார்.ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப்போல்.

பிரபாகரன் அவர்கள் டெல்லியில் கையொப்பம் இட்டது,சத்ரபதி சிவாஜி,அவுரங்கசீப்பிடம் அகப்பட்டதற்கு இணையானது.

இவ்வளவு நாட்களாக இலங்கையின் மீது ஒரு உணர்வுப்பூர்வமான பிடிப்பு மட்டும் இருந்து வந்தது.இப்போது அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கத்தோன்றுகிறது.

இந்தப் பதிவில் என்னுடைய அநுதாபத்தை தெரிவிக்க வேண்டும் எனவோ,எனது ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவோ எழுத ஆரம்பிக்கவில்லை.

இலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது உள்ள கோபம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீதும் இருக்ககூடும்.ஆனால் இங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக பேசத்தயங்கினாலும்,பெரும்பான்மையானோர் உணர்வுப்பூர்வமாக உங்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்.

ஒரு உதாரணத்திற்காக.என் ஊர்ப்பெயரினை இநணையத்தில் தேடினால் கண்டறிவது மிகக்கடினம்.
என் ஊரில்,பொதுக்கூட்டங்கள் நடக்கும் திடலுக்குப் பெயர்,திலீபன் திடல்.

Aug 21, 2005

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினை.

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதாக தெரியவில்லை.அங்கு நடைபெறும் குண்டுவெடிப்பு மட்டுமே இங்குள்ளவரின் கவனம் பெறுகிறது.அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பரபரப்பெல்லாம் கிடையாது.தினத்தந்தியில் அதுவும் ஒரு செய்தி.அவ்வளவே.

காரணம் என்னவாக இருக்கும் என யொசிக்கும் போது ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை.காஷ்மீர்ப் பிரிவினையினை பெரும்பாலான இந்தியர்கள் நிராகரிக்கிறார்கள்.அவ்ர்களின் ஆயுதம் ஏந்திய போராட்டம் இங்கு பலருக்கும் வெறுப்பினையே தருகிறது.

இங்குள்ளவர்கள்,இலங்கைப் போராட்டத்தினை,காஷ்மீர்ப் பிரிவினையுடன் ஒப்பிடக்கூடும்.இந்தியர்கள் இன்னும் காந்தியக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன்,இலங்கைப் பிரச்சினையினை ஒப்பிட முடியாது.இங்கு சுதந்திரப் போராட்டத்தில் இங்குள்ள மக்களின் ஆதரவு முழுமையாக போராளிகளுக்கு கிடைத்தது.இலங்கையில் ஆதரிக்கும் மக்களும்,எதிர்க்கும் மக்களும் ஒரே நாட்டில் வசிப்பது தான் பிரச்சினையே.

அன்னியனை வெளியேற்றிவிடலாம்.ஆனால் பிரிவினை என்பது சாதாரணமான செயல் அன்று.

ஆயுதம் இல்லாமல் போராடினால் அங்கு வெற்றி கிடைப்பதற்கான வழி இல்லையா?உலகின் கவனத்தையும் ஆதரவையும் இலங்கைத் தமிழர்களால் ஏன் இன்னும் பெற முடியவில்லை.பிரிவினை தான் ஒரே பதில் எனில்,அது எந்த வழியில் என்றால் என்ன?ஏன் மற்ற முறைகளை புலிகள் ஆதரிப்பதில்லை?எங்கேயோ வேண்டாம்,இந்தியாவில் அதுவும் தமிழ் மக்களிடம் ஆதரவினை பெறாமல் போகக் காரணம் என்ன?ராஜிவ் கொலை மட்டும் தான் காரணமா?வேறு ஏதேனும் காரணம் உண்டா?

உலகின் ஆதரவு இல்லாமல் ஒரு நாட்டினுள் பிரிவினை என்பது இயலக்கூடிய காரியமா?எனக்குள் மட்டும் ஆயிரம் கேள்விகள் உள்ளன.எனில் ஒட்டு மொத்தக் கேள்விகளின் எண்ணிக்கை?

Aug 17, 2005

கவிஞர் விவேகா கவனிக்கப்பட வேண்டியவரா?

நீ வருவாய் என படத்தில் "பூங்குயில் பாட்டு பிடிசிருக்கா?" என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பாடலாசிரியர் என அறிமுகம் ஆனவர் கவிஞர் விவேகா.

ஒரு மெல்லிய சோகத்தை இவரது பெரும்பாலான பாடல்கள் தாங்கி நிற்கின்றன.

"சொல்லத்தான் நினைக்கிறேன்,சொல்லாமல் தவிக்கிறேன்" என்னும் பாடலும் இந்த வகையினதே.இந்த பாடலில் "வாசப்படி ஓரமாய் வந்து வந்து போகும் காதல்" என பெண்மையை இதமாய் விளிக்கிறார்.

"மின்சாரம் என் மீது பாய்கின்றதே" என்னும் பாடல் வரிகளும் கவனிக்கத்தக்கவை.

இவரின் முதல் கவிதை நூலான "உயரங்களின் வேர்"(கற்பகம் புத்தகாலயம் வெளீயீடு) பல தரப்பட்ட தளங்களில் பயணிக்கிறது(முற்றிலும் புதுக்கவிதை என்னும் பிடிக்குள் இல்லை).

இந்தப்புத்தகத்தில் வரும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பேசப்படவேண்டிய நல்ல கவிதை.

அரசியல் குறித்த கவிதைகளும்,நிகழ்காலம் குறித்த கவிதைகளும் எள்ளல் மிகுந்து காணப்படுகின்றன.

இவரும் "டப்பாங்குத்து" எனப்படும் அதிரடிப்பாடல்களுக்கு முயன்று வருவது "ஜி" படத்தில் இடம் பெற்றிருக்கும் "வம்பை வெலைக்கு வாங்கும்" என்ற பாடலில் தெரிகிறது.இந்தப்பாடலில் ஓரிரு சொற்கள் மெட்டினை மீறி தொக்கி நிற்பது கொஞ்சம் நெருடலை தருகிறது. எனினும் நல்ல கற்பனை வளம் தெறிகிறது.

இதே சமயத்தில் வெளி வந்துள்ள ஆயுதம் படத்தில் வரும் "ஆலால விஷம்" நல்ல செறிவுடன் திகழ்கிறது.

திரைப்பாடலின் வெற்றி என்பது படத்தின் வெற்றியைப் பொறுத்தது என்பது இவரின் பல நல்ல பாடல்களுக்கு பொருந்த்தும்.

திரைப்பட பாடல் குறித்த நீண்ட விவாதம் தேவையில்லை என்னும் போதும் நல்ல கவிஞர்களை குறித்த நேரத்தில் இனம் காணுதல் அவசியம்.விவேகா அந்தப்புள்ளியில் நிற்கிறார்.

Aug 10, 2005

ங்கோத்தா(நன்றி:சுஜாதா)

ங்கோத்தா,ங்கொம்மாளை போன்ற சொற்கள் அதற்கான விவகாரமான அர்த்தங்களை இழந்து வருவதாக எழுத்தாளர் சுஜாதா தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அந்தச் சொற்களை உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை இருந்தது.விலங்கினை உடைத்த சுஜாதாவுக்கு நன்றிகள்.

ங்கோத்தா!

ஆணியில் மாட்டப்பட்ட சட்டை அப்பாவுக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட குடை அம்மாவுக்கு
ஓரமாய் கிடக்கும் கைப்பை அக்காவுக்கு
அவரவரின் அடையாளங்களுடன்
சேர்ந்து கொண்டிருக்கிறது
ங்கோத்தா
என் இண்டர்வியூ ஃபைல்.

Aug 7, 2005

புரட்டப்படும் நடிகை தேவயானி

இந்த தேவயானி இருவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்.ஆனாலும் இவரின் அலம்பல் தாங்க முடியவில்லை.

விகடனில் ஒரு கேள்வி.தனிக்குடும்பத்திற்கும்,கூட்டுக்குடும்பத்திற்கும் வித்தியாசம்?தனிக்குடும்பம் புதுக்கவிதையாம்.கூட்டுக்குடும்பம் மரபுக்கவிதையாம்.சொன்னவர் புதிய அவ்வையார் தேவயானி.

ஏன் தேவயானிக்கு கவிதை தெரியக்கூடாதா என வினவுபவர்களுக்கு....

திரையிசைக்கவிஞர் விவேகாவின் "உயரங்களின் வேர்" நூல் வெளியீட்டு விழாவில் குத்துவிளக்கேற்றிய குத்துவிளக்கு தான் தேவயானி."உயிர்களின் வேர்" என்று கடைசி வரைக்கும் உயிர் பற்றி எல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசி காமெடி செய்தததை படித்திருக்கலாம்/பார்த்திருக்கலாம்.யாராவது சென்னையில் அம்மையாரை பார்த்தால் கவிதை பற்றி எதாவது கேளுங்கள்.ராஜகுமாரன் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதே விகடனில் மக்களின் மனம் கவர்ந்த நடிகை,"விகடன் டெலிவிஸ்டாஸ்"ன் தேவயானி.மனம்கவர்ந்த தொடர் அவர்களின் "கோலங்கள்".இத்தனை நாள் கோலோச்சி வந்த ராதிகா மக்களால் அல்லது விகடனால்,மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டார்.அப்படியா?

இங்கு வருகிறது குமுதம்.
எடு தேவயானியின் மாமியாரிடம் ஒரு பேட்டி.அவரை முறுக்கு சுட வைத்து ஒரு படம்."நியாயமா மருமகளே"னு ஒரு கவர் ஸ்டோரி.வாசகர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் தேவயானியின் மாமியாரின் நிலையை பாருங்கள் என ஒரு புலம்பல்.

உங்களை நம்பி தேடிப்பிடித்து(ஐதராபாத் கோட்டியில் தேடிப்பிடித்தால் தான் கிடைக்கும்) 8 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்லா மிளகாய் அரைக்கிறீர்கள்.வளரட்டும் உங்கள் இலக்கியப்பணி.தொடரட்டும் எங்கள் இளிச்சவாயப்பணி.

Jul 28, 2005

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"...

எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது!

ஆனால் வறண்டு கிடக்கிறது மனசு.(ஏற்கனவே வறண்டுதான் இருந்ததுனு யாருங்க சொல்றது?)

யாரோ CD யில் கவிதை நூல் வெளியிட்டுளார்களாமே?நல்ல முயற்சி.(ஆனந்த விகடன்)

"வித்தகக் கவிஞர்"(நன்றி:கலைஞர்)பா.விஜய் க்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"...ஒவ்வொரு என்று விளித்த பின்பு பூக்கள் என குறிக்கலாமா?அஃறிணை சொல்கிறதா? அல்லது சொல்கின்றன வா? குழப்பமாக இருக்கிறது.யாரேனும் விளக்குங்கள்.

எனக்கு இலக்கணம் தெரியாது.சிறு குழப்பம் அவ்வளவுதான்.மற்றபடி நக்கீரன் ஆகும் ஆசை எல்லாம் இல்லை.இன்னும் அந்தப் பாடலை முழுமையாக கவனியுங்கள்.

Jul 5, 2005

வந்துட்டான்யா....வந்துட்டான்!

ஐதராபாத் வந்து விட்டேன்.வேற என்ன?எல்லாம் பிழைப்புக்காகத்தான்!.தெலுங்கு ம் தெரியாது.இந்தியும் தெரியாது.எல்லோரிடமும் நாக்கு தள்ளிதுனு சொல்லி சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.காரம் வேறு.சென்னை யின் இனிய புகை வாசனை,கூட்டமான பேருந்து எல்லாவற்றையும் இழக்க வேண்டியாதாகி விட்டது.

இரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை.இப்போது தெரிகிறது அல்லது வலிக்கிறது.பிரிவின் வலி.ஊர் கடந்ததே இப்படி எனில்,நாடு கடந்தால்?கொடுமைதான்.தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி.

சரி அது எல்லாம் பின்னால் பேசலாம்.இப்போதைக்கு இது போதும்.ப்ரவுசிங் சென்டரில் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.சட்டையில் பணம் வேறு குறைவாக இருக்கிறது.தெலுங்கு அடி வாங்க இன்னும் காலம் இருக்கிறது.வந்தவுடன் எதுக்கு?

Jun 12, 2005

பொறியியல் கல்வியில் புதிய சாத்தியங்கள்

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்துவிட்டது. தங்களின் 12 ஆண்டு கால உழைப்பினைக் கொண்டு எதிர்காலத்திற்கான நல்ல படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. படிப்புகளை விட பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிறையக் குழப்பம் இருக்கிறது.  ஏற்கனவே பெற்றோர்களும், மாணவர்களும் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 250 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1,00,000க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.

கல்லூரி முக்கியமா? அல்லது பாடப்பிரிவு முக்கியமா? என்னும் வினா எழும் போது இரண்டும் முக்கியம் என பதில் வரினும், இரண்டில் கல்லூரிக்கு முக்கியத்துவம் தருதல் இன்றியமையாத ஒன்று. உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியரின் திறன் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்ற நிறுவனங்களும் இதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றன. ஒரு நல்ல மாணவன் மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்று வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடுத்து பாடப் பிரிவு. பெரும்பாலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ECE  போன்ற சில பாடங்களே தெரிகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் வேலைச் சந்தை மென்பொருள் துறையில் நன்றாக இருப்பதனால் இதற்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும். பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், அவர் எந்த பாடப்பிரிவு எனினும் மென்பொருள் துறையில் நுழைவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.

உடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. இந்தத் துறை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்துறையில் நான்காண்டுகளுக்கு முன்னர் ஐந்தாண்டு அனுபவம் மிக்க ஒரு வல்லுனருக்கு ஒரு லட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் ஊதியம் தரப்பட்டது. இன்று அது ஐம்பதிலிருந்து அறுபது ஆயிரம் என குறைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் குறையக் கூடும்.

இதற்கான காரணங்களை அலசும் போது, நான்காண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் அறிவு பெற்றோர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. நிறுவனங்களும் அதிக ஊதியம் கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்தத் தயாராக இருந்தன. இன்று சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாடப் பிரிவில் இருப்பவரும், மென்பொருள் துறையில் நுழைவது என்றாகிவிட்ட நிலையில், தேவையின் அளவிற்கு ஆட்களும் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஒருவர் ரூ.20 ஆயிரத்துக்கு செய்யும் வேலையை இன்னொருவர் ரூ.15 ஆயிரம் என்னும் அளவில் செய்ய தயாராக இருப்பர்.

இன்று வரையில், இத்துறையில் இந்தியாவிற்கு போட்டியாக வேறு எந்த நாடும் பெரிய அளவில் செயல்படவில்லை. அதற்கு நமது ஆங்கில அறிவும் ஒரு முக்கிய காரணம். சீன அரசு ஆங்கில அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற துறைகளைப் போலவே இத்துறையிலும் நமக்கு சீனா கடும் போட்டியை உண்டு பண்ணும் எனலாம்.

வேறு துறைகளில் நல்ல பணியிடங்கள் காலியாகவும், பணியிடங்கள் தகுதியற்றவர்களாலும் நிரம்பி இருக்கின்றன. ஆட்டோமேஷன், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளில் அனுபவம் பெறுகின்ற எவருக்கும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கும். இன்று இத்தகைய துறைகளில் அனுபவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் இப்போது தான் உற்பத்தி நிறுவனங்கள் நன்கு கால் பதிக்க ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

பாடப் பிரிவினை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று துறைகளில் வாய்ப்பு உள்ள பாடப் பிரிவினை எடுக்கலாம். உதாரணமாக EEE எடுக்கும் மாணவர்கள் மின்னியல், மின்னணுவியல் அல்லது மென்பொருள் துறைகளில் செல்லலாம். இது போன்று பல பாடப் பிரிவுகள் உள்ளன.

மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு என்னும் போதிலும், இப்படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. இத்துறை பொறியாளர்களுக்கான தேவை என்றும் ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் போன்ற துறைகள் மிக முக்கியமானவை. வேதியியல் தொழிலகத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் இவற்றிற்கான தேவைகள் இருக்கின்றன.

டெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இத்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மெரைன், ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளை மாணவர்களும், பெற்றோர்களும் பரிசீலிக்கலாம்.

பாலிமர், பிரிண்டிங், மைனிங் போன்ற துறைகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. குறைவான கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு குறைவான வேலை வாய்ப்பே இருக்கும் என்றாலும், அதற்கு போட்டியும் மிக குறைவாகவே இருக்கும்.

சில துறைகளில் மேற்படிப்பு படித்து தனிப்பட்ட பாடத்தில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். இது வல்லுனர்களை தனிப்படுத்திக் காட்டும். கல்லூரிகள் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணிகளை தருகின்றன.

உடனடியாக கை நிறைய சம்பளம் என ஒரே துறையில் நுழைய வேண்டியதில்லை. அதில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். கல்லூரியில் சேரும் முன்னரே மாணவர்களின் விருப்பத்தினை நன்கு ஆலோசிக்க வேண்டும். படித்த பின்னர் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளாரா, தொழில் துவங்க விருப்பம் உள்ளவரா அல்லது பணிக்கு செல்பவர் எனில், எந்திரங்களை கையாள அல்லது மின்னணுவியல் பொருட்களில் அல்லது வாகனங்களில் அல்லது கணினியில் என தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

ஆராய்ச்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் போது படித்து முடிக்கும் வரை கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் விஞ்ஞானிகளுக்கான தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக கணிசமான தொகையை செலவிடுகின்றன.

எதில் விருப்பமோ அதற்கான துறையை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும். எந்தப் பாடப்பிரிவும் மோசமானது இல்லை. படிக்கின்ற மாணவனின் ஆர்வம், திறமையை பொறுத்தே மாறுபடும்.

தகுதி வாய்ந்த எல்லா மாணவருக்கும் எல்லாத் துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.தனது ஆர்வத்தை கண்டுணர வேண்டியது மாணவனின் கடமை. தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.

வா.மணிகண்டன்

நன்றி:திணமணி/இளைஞர்மணி-06.06.2005

May 27, 2005

சுந்தர ராமசாமி சாதி வெறியரா?

சுந்தர ராமசாமி யின் "பிள்ளை கெடுத்தாள் விளை" சிறு கதையினை மிக சமீபத்தில் படித்தேன்.காலச்சுவட்டில்(பிப்ரவரி௨005)இல் வந்த போதிலும்,இன்று அதற்கான எதிர் வினைகளே படிக்கத்தூண்டின.

அதற்க்குமுன்,கதையின் சுருக்கம்.மிகவும் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை அங்குள்ள பாதிரியார் ஒருவர் படிக்க வைக்கிறார்.பின்னர் அந்த ஊரில் துவக்கப்பட்ட பள்ளிக்குதலைமை ஆசிரியராக நியமிக்க படுகிறாள்.அங்கு நிகழும் சம்பவத்தினை பார்த்து(அல்லது அவனுக்கு நிகழும் பாலியல் கொடுமை) யின் காரணமாக,மணிகண்டன் என்னும் மாணவன்(சத்தியமாக நானில்லை)ஊருக்குள் சொல்கிறான்.ஊரில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் அவளை அடித்து துரத்துகின்றனர்.வாழ்வின் இறுதி காலத்தில் அந்த ஊரில் மரணம் அடைகிறாள்.(http://tamil.sify.com/kalachuvadu/feb05/fullstory.php?id=13661961)

இதில் காட்டப்படும் பெண் தாழ்த்தபட்டவளாக வருவதே,பிரச்சினையின் மூல காரணம்.தாழ்த்த பட்டவர்களை எல்லாம் உயரத்திற்க்கு கொண்டுவரும் போது,அவர்கள் இப்படியான இழி குணங்களை காட்டி விடுவார்கள் என சு.ரா சித்தரிக்கிறார் என்பது இவர்களின் வாதம்.

இங்கு கதாபாத்திரத்தின் சாதியினைக்காட்டிலும்,எழுத்தாளரின் சாதி பார்க்கப்படுகிறது.இதனை வேறு ஒரு எழுத்தாளர் எழுதி இருப்பின் இத்தணை விவாதòதினை கிளப்பியிருக்குமா என்பது விவாதிக்க வேண்டியது.

அல்லது தாழ்த்தப்பட்ட ஒரு பெண் இவ்வாறான தவறுகளில் ஈடுபடவே மாட்டாளா?தலித் பற்றிய கதைகள்(நல்லது/கெட்டது) அது குறித்து தலித் எழுத்தாளன் மட்டுமே எழுதவேண்டும் என்பதும்,தலித்துக்களின் பெருமை குறித்து வேண்டுமானால்,எழுதலாம் என்பதும் நல்ல படைப்புகள் கிடைக்க இயலாமல் செய்து விடும்.

இந்தக்கதையில் வரும் பெண்ணை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஏன் பார்க்க வேண்டும்?எல்லா சமூகத்திலும் இத்தகைய கதபாத்திரங்கள் இருக்கின்றன.இந்த தாயம்மாவை பிரதிநிதியாக்கி அரசியல் பண்ணுவதை நிறுத்தலாம்.

இழிவான அரசியலுக்காக,நல்ல படைப்புகளை தாக்கி,நல்ல படைப்பாளிகளை புண்படுத்துவதை நிறுத்தலாம் என்ப்து என் தனிப்பட்ட,தாழ்மையான கருத்து.

Apr 27, 2005

ஜெயகாந்தனை இகழலாமா?

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
"..ஜெயகாந்தன் கடந்த கால் நூற்றாண்டாக குறிப்பிடும்படியாக எதையும் எழுதவில்லை.அவருடைய பல அரசியல்,சமூகக்கருத்துக்கள் சகிக்க முடியாதவை.அவருடைய கதைகளின் வடிவம் மற்றும் அழகியல்,பல்வேறு பலவீனங்களைக் கொண்டவை..."-"உயிர்மை" இதழில் ஜெயகாந்தனை வாழ்த்திய கவிஞர் மனுஷ்ய புத்திரன்,கூடவே இப்படி ஒரு விமர்சனக்குட்டும் வைத்துள்ளார்!சக எழுத்தாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

அசோகமித்திரன் :
ஜெயகாந்தனின் இலக்கியச் செல்வாக்கையும்,பிற எழுத்தாளர்கள் மீதான அவரது பாதிப்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.கிட்டத்தட்ட 20,25 வருடங்களாக,தமிழ் இலக்கிய உலகத்தில் அவர் இயங்கி வந்திருக்கிறார்.இன்றைய நவீன எழுத்தாளர்களிடம் கூட ஜெயகாந்தனின் பாதிப்பு இருக்கவே செய்கிறது.இவ்வாறிருக்க,ஜெயகாந்தனுக்கு கிடைத்திருக்கிற ஞானபீட விருதினால் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் .அதுதான் சரி.
அப்படியானால் அவரது படைப்புகள் மீது விமர்சனம் செய்யவே கூடாதா?அவரது பங்களிப்பைப் பற்றி விவாதிக்கக் கூடாதா?கட்டாயம் செய்யலாம்.ஆனால்,அதற்கான சமயம் இதுவல்ல.அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது ஒரு முக்கிய சமூக நிகழ்வு.இது ஒரு திருமணம் போல.இந்தச்சமயத்தில் நாம் அவரை வாழ்த்துவதுதான் சரியான செயல்.இந்த மகிழ்ச்சியான சமயத்தில்,"மாப்பிள்ளையின் சுண்டு விரல் சரியல்ல" போன்ற விமர்சனங்களால் எந்த விதப்பயனும் கிடையாது.
திருப்பூர் கிருஷ்ணன் :
ஓர் எழுத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் வேண்டுமென்றே இட்டுக்கட்டி தாக்குவதென்றால்,எவ்வளவு வேண்டுமென்றாலும் தாக்கலாம்.தமிழில் வெளிவந்த நாவல்களில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்' குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது.சிறுகதை,கட்டுரை,நாவல் என்ற மூன்று துறைகளிலும் சாதனை படைத்தவர் ஜெயகாந்தன்.அவரது அரசியல்,சமூகக் கருத்துக்கள் ஒரு சிலருக்கு உவப்பு இல்லாததாக இருக்கலாம்.ஒரு எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டை எல்லாக்காலத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது.படைப்பிலக்கியத் துறையில் அவர் மாபெரும் சாதனையாளர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.அவர் எழுதியதற்க்குத்தான் இந்த விருது.இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறாரா போன்ற வாதம் தேவையற்றது.
இரா. முருகன் :
நல்ல வேளையாக எம்.டி. வாசு தேவன் நாயரும்,காப்ரியல் மார்வேஸும் தமிழர்களாக பிறக்கவில்லை.ஒருவேளை அப்படி அவர்கள் பிறந்திருந்தால்,இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.ஏனென்றால்,எந்த விதத்தில் யாரிடம் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்,குற்றம் கண்டுபிடித்து,எப்படித் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ரீதியில்தான் பலர் இங்கு செயல்பட்டு வருகிறார்கள்.
உறங்கி கிடந்த தமிழ் இலக்கியத்தை,கைப்பிடித்து எழுப்பி நிற்க வைத்து ஒரு புதிய பாதையை கண்டுபிடித்துக் கொடுத்தவர் ஜெயகாந்தன்.அவருடைய 'ஒரு மனித,ஒரு வீடு, ஒரு உலகம்' புத்தகத்திற்கு மட்டுமே ஒரு நோபல் பரிசைக்கொடுக்கலாம்.என்னைக்கேட்டால்,இது காலம் தாழ்ந்து அவருக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் என்றுதான் சொல்வேன்.
பாரதி பாலன் :
மனுஷ்ய புத்திரன் கூறியது எப்படி விமர்சனமாகும்?அவரின் இலக்கியக்கொள்கை என்ன?ஜெயகாந்தன் மீது அவர் தொடுக்கும் குற்றச்சாடுகளுக்கு என்ன ஆதாரங்களை சொல்கிறார்?ஒன்றுமேயில்லை.மேம்போக்காக ஏதேனும் ஒன்றைச் சொல்வதுதான் விமர்சனமா?
புத்தகங்களை வைத்து மட்டும் தான் ஓர் எழுத்தாளர் மதிப்பிடப்பட வேண்டுமா?ஜெயகாந்தனை எடுத்துக்கொண்டால் அவர் எப்பொழுதும் மக்களிடமிருந்து விலகி இருக்கவில்லை.அவர்களுடன் கலந்து அவர்களைப்பற்றித்தான் எழுதி வந்திருக்கிறார்.அதிரடியாக,பிறரை வியக்க வைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மனுஷ்ய புத்திரன் போன்றோர் முன் வைக்கும் விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை.
இது இந்த வார கல்கி யில் வந்துள்ள விவாதம்,இனி இது இணயத்தில் உலவுகிறவர்களுக்காக!

Apr 20, 2005

நிழல்-உயிர்மை கவிதை

Image hosted by Photobucket.com
நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்

எனக்கு முன்பாகவும்,
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.

பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல்,நேர்த்தியாக.

நிழல் எந்தப்பக்கம் எனினும்,

சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலிமட்டும் ஒரே திசையில்.

நன்றி:உயிர்மை-ஏப்ரல்'2005

Apr 19, 2005

புறக்கணிப்பு!

Image hosted by Photobucket.com

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின்
ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்
புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

Apr 12, 2005

அது பிசாசு போலவே இல்லை!

Image hosted by Photobucket.com
அது
பிசாசு
போலவே இல்லை

மெழுகுவர்த்தியின்
வெளிச்சம்
என
உள் நுழைந்தது

காற்றில்
விரவிகிடக்கும்
பஞ்சுத்துகளின்
மென்மையில் தலை கோதித்-
தந்தது

மெல்லிய
விசும்பலுடன்
நிறைய பேசி,

என் மனைவியின்
மார்பில்
பார்வையை நிறுத்தியது.

இப்போது
தெரிந்தது
அதன்
பல்லில்-படிந்திருந்த
ஒரு துளி இரத்தம்.

Apr 11, 2005

தமிழனை நம்ப முடியாது பா!

இணையத்தில் தேடி கிடைக்கும் நல்ல பகுதிகளை எல்லாம் விக்கிபீடிய வில் தொகுத்து வருகிறேன்.

நானே கூட தட்டச்சு செய்யலாம் தான்.ஆனால் அனைத்து பகுதிகளையும் செய்வது என்பது மலைப்பிற்க்குரியதாக இருக்கிறது.

ஏதேனும் பிரசினைகள் வருமா?யாரேனும் உரிமை கொண்டாடி வரும் போது தப்பிக்க வழி இருக்கிறதா?

நான் எதனை பற்றியும் கவலைப்படாமல் விக்கிபீடியா வில் போட்டு வருகிறேன்.மற்ற நண்பர்கள் என்ன செய்து வருகிறார்கள்?

யாரேனும் விளக்குங்கள்.

வருங்கால தமிழ் சமுதாயத்திற்காகதான் செய்தேன் எனச்சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

தமிழனை நம்ப முடியாது பா!

தமிழ் விக்கிபீடியா வில் உங்கள் பங்களிப்பு!

தமிழ் விக்கிபீடியா என்பது நல்ல என்சைக்ளோபீடியா.ஆனால் தமிழ் இல் 588 கட்டுரைகளே உள்ளன.ஆங்கிலத்தில் கிட்டதட்ட 500000 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை பெற முடியும்.இது முழுவதும் அந்த மொழி சார்ந்தவர்களின் பங்களிப்பால் மட்டுமே இயல்க்கூடிய காரியம்.

மாலன் அவர்கள் சொன்னது போல்,நாம் திருக்குறள் அனைத்தினயும் இதில் இடப்போவதில்லை.திருக்குறள் குறித்தான ஒரு குறிப்பு இடம்பெறும்.வேண்டுமானால்,திருக்குறளுக்கு ஒரு இணைப்பினை அந்த பக்கத்தில் தரலாம்.

இது மற்றவர்களுக்கான ஒரு விவரம் தரும் பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும்.நமது படைப்புகளையோ,நமது சொந்த அநுபவங்களையோ இதனில் இடும்போது மற்றவருக்கு எவ்வாறு பயன் படும் என்பதனையும் யோசிக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தவறான தகவல்களை இடும் போது மற்றவர்களுக்கு அது தீவிரமான பின்விளைவினை எற்படுத்தக்கூடும்.

கட்டுரைகளில் ஒரு நல்ல தரத்தினை பின்பற்றுவதும் மிக முக்கியம்.ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்வதனைக்காட்டிலும்,ஒரு குழு வாக செய்யும் போது நிறைய நல்ல விசயஙளை செய்ய முடியும் என்பது என் கருத்து.

இதில் எற்க்கனவே இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும் நம்மால் தரம் உயர்த்த இயலும்.

1.முத்லில் www.ta.wikipedia.com என உள் நுழையுங்கள்.
2."புகுபதிகையில்" உங்கள் குறித்தான தகவல்களை பதியுங்கள்.
3."முதற்பக்கத்துக்கு" செல்லுங்கள்.
4.உங்களுக்கு பிடித்த "கட்டுரை பிரிவுகளில்" ஒன்றில் உள் நுழையுங்கள்.
5."தொகு" பொத்தானை அழுத்தி உங்கள் கட்டுரையினை சேர்க்கலாம்.

எனக்கு தெரியாத விஷயங்கள்:
1.நமது பெயரை கட்டுரையினில் சேர்க்க முடியுமா?
2.கட்டுரையை அகர வரிசையில் தொகுப்பது எப்படி?

மற்றபடி கையாளுவது எளிதாகவே இருக்கிறது.

இன்னும் வேறு ஏதெனும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.எனக்கும்.மற்றவருக்கும்.

எதிர்கால தமிழ் சமுதாயத்திற்க்கு நம்மால் இயன்ற சிறு உதவி தான் இது.

Apr 8, 2005

அவ அழுதுட்டு போயிட்டா!

Image hosted by Photobucket.com
//நான் சும்மா feel பண்ணிக்கின்னு குந்தினேன்.....அந்த துளி மனச பேஜார் பண்ணிடுச்சு பா!

வீட்ல யாரும் பார்க்காம(படிக்காம) இருந்த சரி தான் :) //


சிதறிக்கிடக்கும்
உன்
உள்ளீடற்ற
கண்ணீர்த்துளியொன்றில்
புதைந்து கிடக்கிறது.

என்
பிரக்ஞையற்றமுகம்.

நன்றி:திண்ணை.காம்

வா.மணிகண்டன்

Apr 6, 2005

நினைவு-ஒரு குட்டிக்கவிதை

இன்று-
குளிக்கும்போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு
கல் தடுக்கிய நொடியும்,
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது எளிதெனக்கு.

வா.மணிகண்டன்.

Apr 3, 2005

மெய்யருள் கவிதை

மெய்யருள் என்னும் நண்பர் மிக சமீமபாக எனக்கு அறிமுகம் ஆனார்.

அவருடைய கவிதைகள் சற்று வித்தியாசமானவையாக இருக்கின்றன.

நிறைய கவிதைகள் வெவ்வேறு தளஙளில் பயணக்கின்றன.வாசகனுக்குள் வித்தியாசமான அநுபவத்தினை விதைத்து.

அவரின் படைப்புகளில் எனக்கு பிடித்த ஒரு கவிதையை பதிக்கிறேன்.

இனி,
செய்வதற்கெதுவுமில்லை
எனும்பொழுதில்

இந்த முன்வாசல் மரத்தில்
இரண்டு இலைகள் உதிரலாம்

வானம் சிறிது
தூறல் போடலாம்.

இந்த பூனைக்குட்டி
மெலிதாக கண் திறக்கலாம்

-மெய்யருள்

Apr 2, 2005

எனக்கு தெரு நாய்கள் பிடிக்கும்-கவிதை

தெரு நாய்கள்
விநோதமானவை.

குனிந்தொரு
கல் தொடும்வரையில்
குரைக்கின்றன.

கடித்தலேதுமின்றி
உறுமலுடன்
முடிந்துபோகும்
சண்டைகள்.

தலை சாய்த்து,
ஒடுங்கிய கண்களை
புவியில் புதைத்து
அலைகின்றன.

எச்சிலொழுகும்
நாவுடன்
யாரையாவது
நினைவுபடுத்துகின்றன.

ஏதொவொரு
வாகனச்சக்கரத்தில்
வீழும் வரை
அலைகின்றன.
திக்கற்று.

தெரு நாய்கள்
விநோதமானவை.

வா.மணிகண்டன்

Mar 30, 2005

கலாப்ரியா கவிதை.

சிறிது காலத்திற்க்கு முன்பு திரைப்படபாடலாசிரியரும்,கவிஞருமான(இரண்டிற்க்கும் சம்பந்தம் இல்லை தானே?) நா.முத்துக்குமாருடன் பேசிக்கொண்டிருந்த போது கலாப்ரியா என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார்.

எனக்கு அப்போது அந்தப்பெயர் மிக வித்தியாசமானதாகவும் ஒரு ஈர்ப்புத்தன்மையும் உடையதாக இருந்தது.அந்த கவிதைகளைப்பற்றி ஒன்றும் பெரிதாகநினைப்பு எதுவும் இருக்கவில்லை. நீண்ட நாட்க்களுக்குப்பின்னர் கலப்ப்ரியா வின் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அக்கவிதைகள் பெரும்பாலும் இறுக்கத்தை உண்டாக்குவதாகவும்,சில சமயத்தில் எனக்கு இறுக்கத்தை இளக்குவாதகவும் இருக்கிறது.

ஒரே ஒரு கலாப்ரியா கவிதையை பதிக்கிறேன்.

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

Mar 28, 2005

என் கவிதையும்,விமர்சனங்களும்.

//உயிர்மை வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதையும்,அதற்க்கான விமர்சனங்களும்//

மனுஷ்ய புத்திரனின் வலைப்பதிவில் இடம்பெறும் சிறந்த கவிதைகளுள் இடம்பெறும் தகுதி என் கவிதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.
வளர்ந்துவரும் கவிஞனான எனக்கு இது ஒரு நல்ல பட்டறையாக அமையும் என்பதனால் எனக்கு பிடித்த எனது காதல் கவிதைகளை அனுப்பியுள்ளேன்.
விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன்.

குறிப்பாக பெயரிலி போன்றோரின் காட்டமான விமர்சனத்தை.

1.
உதிர்ந்துவிடும் கண்ணீரை
உள் இழுத்துவிடுகிறாய்.

ஒருவரும் உணர்ந்திடா
சிறு பொழுதில்.

ஒரு இதயம்கசங்கிக்கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக.
மெதுவாக.

2.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

'ஒண்ணுமில்லையே'
என்ற பிரம்மாண்டசொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.ROSAVASANTH said...
நீங்கள் கவிதை எழுதி அதற்கும் (வேண்டுமென்றே) காட்டமான விமர்சனம் வைக்கும் அளவிற்கு பெயரிலி வெறுப்பில் வாழ்பவரல்ல. முதலில் மற்ற மனிதனின் உணர்வுகளை கோபத்தின் அடிப்படையை சிறிதளவாவது புரிந்துகொள்ளும் உந்துதல் வேண்டும். அதற்கு பிறகு இலக்கியம் படிக்க போகலாம், பின் படைப்பதில் ஈடுபடலாம்.

இந்த விமர்சனம் உங்கள் கவிதை மீது அல்ல!

Anonymous said...
ஞான் புலவர் மொத்தினார்க்குமினியராக்கும்.
ஐயா கவிஞரே! எனக்கென்னவோ நீர் கவிதை பன்னவேணுமென்கிறதுக்காகவே பன்னினமாதிரி தோணுது.

1.மொதலாவது கவிதையில
/உதிர்ந்து விழும் கண்ணீரை உள் இழுத்துவிடுகிறாய்/
இது சாத்தியமாய்யா?

பின் நவீனத்துவவாதீங்க சொல்வாங்க சாத்தியமில்லாததை பேசப்புடாதுண்ணு, அவங்க கிடக்கிறாங்க....இதுதான் முன் நவீனத்துலயும் முடியாதே?

/ஒரு இதயம் கசங்கிக் கொண்டிருக்கிறதுமரத்தில் சொட்டும் நீராக/
இங்கேயும் கசங்குதலுக்கான படுமம் சொட்டுதல் ஆகாது கண்ணா.

கசங்கின இதயம் குருதி சொட்டுறதைச் சொல்லுறதானாக்கா கசங்கிங்கிறதை வுட்டுப்புட்டு சிந்திறது என்றதோடை விட்டிருக்கலாம் கண்ணா. அல்லாக்காட்டியும் வேறை வார்த்தை பாவிச்சிருந்தியானாக்கா இன்னும் நன்னா இருந்திருக்கும்.அடுத்த கவிதையை பார்க்கலாமா?

2.
/ஒண்ணுமில்லையே என்கிற பிரமாண்ட சொல்லில்/
'ஒன்றுமில்லையே' எங்கிறது பிரமாண்டமான சொல்லா என்ன?

சிறிய/எளிய சொல்லில் உணர்த்தப்படும் உன் பிரியத்தின் பிரமாண்டம் என்றிருக்கலாம்.

அது சரி, உமக்கு எதுக்குக்காணும் 'பழுத்த இலை ஞாபகம் வர்றது?சுத்த Pessimist டா இருப்பீர்போல இருக்கே?


Jsri said...
///உதிர்ந்துவிடும் கண்ணீரைஉள் இழுத்துவிடுகிறாய்///

என்ன நவீனத்துவமோ, என்ன எழவோ, ஆனா எனக்கு என்னவோ அந்தவரிதான் ரொம்பப் பிடிச்சிருக்கு.

கவிதைலதான் இந்த மாதிரி படிமங்கள் எல்லாம் வைக்க முடியும். உரைநடைல வெச்சாதான் weird ஆ இருக்கும் படிக்க.

அடுத்தது- கசங்கின இதயம், அதை அடுத்த நிகழ்வான குருதி கொட்டுவதையும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான படிமங்களை சேர்த்துப் போட்டிருக்கார்னு சொல்லலாம். அல்லது கசங்குவது 'மெதுவாக' என்பதைச் சொல்ல மரத்திலிருந்து சொட்டும் நீர்போல் மெதுவாகன்னு எடுத்துக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் சரியாத்தானே இருக்கு.

பழுத்த இலை- எந்த சிறு யத்னமுமில்லாம அதுவாவே இயல்பா வலிக்காம அலட்டிக்காம விழும். வார்த்தையும் அப்படி விழுகிறது. வாழ்(வு)ந்துமுடித்த பழுத்த இலை ப்ரும்மாண்டம் இல்லையா? 'ஒண்ணுமில்லையே' கூட நேர, கால சூழ்நிலைகளைப் பொருத்து ப்ரும்மாண்டம் ஆகுமே. இன்னும்கூட நிறைய தோணுது. ஆனா வெளில சொல்லச் சொல்ல கவிதைக்கான அழகு போயிடும். எனக்கு என்னவோ இரண்டு கவிதைகளும் பிடிச்சிருக்கு. ஏன்னேதெரியலை.


Anonymous said...
மொத்தினார்க்குமினியர்: ஞான் ஸொல்றது இன்னக்கா..........கறந்த பாலு முலைக்கேறாது, விழுந்த கண்ணீரை ஒத்தலாம் உறிஞ்சலாமோ?

வெள்ளிக்கிழமைக்கு படிமம்/உருவகம் பன்னிட்டு அது அடுத்து வர்ற ஞாயித்துக்கிழமைக்கெண்டால்இன்னா ஞாயமிது கண்ணா?


Jsri said...
மொத்தினார்க்குமினியர், உதிர்ந்த கண்ணீரைத் துடைத்துவிட்டால் சோகம் போயிடும். உள்ளிழுத்துவிட்டால், சோகம் வெளில தெரியாது அவ்ளோதான். freeze ஆகிற மாதிரி, அல்லது வெளில expose ஆகாத மாதிரி.. இதுக்கு மேல விபரமா சொல்லத் தயாரில்லை. :)


Vaa.Manikandan said...
நன்றி மெத்தினார்க்குமினியர்,ஜெஸ்ரிஎனது சொந்த வேலைப்பளுவின் காரணமாக என்னால்,விவாதத்தில் உடனடியாக பங்கு பெற இயலவில்லை.

ஆயிரம் பிரச்சினைகளை உள்ளடக்கி,"ஒண்ணுமில்லையே" என்று சொல்லும்போது,அது பிரம்மாண்ட பொருளினை பெறும்.

இலை விழும் போது அதன் மீது எந்த தடையும் செயல்படுவதில்லை.ப்ரியமும் எளிமயாக,எந்த விகல்பமும் இல்லாது இருக்கிறது.

இதில் நேர்மறை சிந்தனை,எதிர்மறை சிந்தனை எல்லாம் எதுவும் இல்லை.நான் உதிர்ந்துவிட்ட கண்ணீர் என குறிப்பிடவில்லை.உதிர்ந்துவிழும் கண்ணீர் என்பது கண்களில் தேங்கி நிற்பதை கூறலாம்.அப்போது நீர் விழாமல் தடுத்தல் என்பது இயலக்கூடிய காரியமே.

மற்றவிளக்கஙளுக்கு,ஜெஸ்ரி யின் பதில் போதுமானது என நினைக்கிறேன்.

Mar 26, 2005

ஒரு கவிதை

//இது நவீனமா,சொற்க்கூட்டமா என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.கேட்பதற்க்கும்,
விளக்குவதற்க்கும்,மாற்றிகொள்வதற்க்கும்
தயாராகவே இருக்கிறேன்//

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

வா.மணிகண்டன்

எனக்கென ஒரு இடம்

நல்ல படைப்பாளிகள் நிறையப்பேர் எழுதும்வலைப்பதிவில் எழுத எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியாமல் தான் வலைப்பதிவினை உருவாக்கிவிட்டு இவ்வளவு நாள் எதுவும் எழுதாமல் இருந்தேன்.ஆனால் விமர்சனம் எழுதுவதை கூட தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் இங்கு உலவுவது சமீமபாக உணர்ந்தேன்.குறைந்தபட்சம் என் விமர்சனங்களை முன்வைக்கவாவது இந்த வலைப்பதிவு எனக்கு உதவக்கூடும்.

ஆனால் என்னைக்குறித்த எந்த விமர்சனம் எனினும் பதில் சொல்வேன்.எந்த பின்னூட்டமும் இதில் நீக்கப்படாது என்பதும் உறுதி.(ஆபாசம் கலந்த பின்னூட்டங்கள் விதிவிலக்கு).

வலைப்பதிவு/இலக்கிய உலகில் எனக்கு தூண்டுகோலாக இருந்த மனுஷ்யபுத்திரன்,தேசிகன் ஆகியோருக்கு நன்றி.

உத்வேகம் ஊட்டக்கூடிய பின்னூட்டங்களை எனக்கு தந்த ரோசவசந்த்,பெயரிலி-க்கும் நன்றி.
இனி பேசுவோம் சந்திரவதனா.

வா.மணிகண்டன்

என்னைப் பற்றி

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்த எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். இரண்டாம் வகுப்பு வரைக்கும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்தார்கள். கோபியில் இயங்கிக் கொண்டிருந்த காந்தி கல்வி நிலையம் மற்றும் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷனில் படித்தேன். பிறகு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வைரவிழா பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதிலிருந்து தமிழ் வழிக்கல்வி. நூற்றாண்டு கண்ட பள்ளி அது. பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் அங்குதான் படிப்பு தொடர்ந்தது. எழுதுவதற்கும் பேசுவதற்குமான ஆர்வம் அங்கேதான் ஊன்றப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் BE படிப்பில் சேர்ந்தேன். மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடம். அதன் பிறகு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.டெக்(மெக்ட்ரானிக்ஸ்) படிப்பை 2005 ஆம் ஆண்டு முடித்தேன்.

இடையில் 2004 ஆம் சென்னையில் எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் சுற்றிக் கொண்டிருந்த போது கவிஞர். மனுஷ்ய புத்திரனுடனான அறிமுகம் கிடைத்தது. அதுவரை எழுதியிருந்த கவிதைகளில் இருக்கும் சிக்கல்களைப் புரியவைத்து நவீன இலக்கியத்தின் பக்கமாக திருப்பிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்த வாசிப்பும் பல கவிஞர்களுடனான நெருக்கமும் கவிதைகளின் மீதான விருப்பத்தை அதிகரித்தது. முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ உயிர்மை பதிப்பகத்தின் வழியாகவே வெளியானது. அதன் பிறகு சைபர் குற்றங்களைப் பற்றிய தொடரான சைபர் சாத்தான்கள் என்ற புத்தகமும் உயிர்மை வெளியீடாக வெளியானது. இந்தச் சமயத்தில் கவிதைகளோடு சேர்த்து சில கட்டுரைகளும் எழுதத் துவங்கியிருந்தேன். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கல்கியில் ‘ரோபோடிக்ஸ்’ குறித்தான தொடர் எழுதக் கிடைத்த வாய்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கவிதைகளை உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, புது எழுத்து, அம்ருதா உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு உற்சாகமளித்தன. இந்தச் சமயத்திலேயே வலைப்பதிவு எழுதத் தொடங்கியிருந்தேன். ஆரம்பத்தில் வெகு குறைவானவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். குறைவானவர்கள் என்பதைவிடவும் சொற்பமானவர்கள் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும். 2012 ஆம் ஆண்டில் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளியானது. இந்தச் சமயத்தில் தொடர்ந்து எழுதியதாலோ என்னவோ நிசப்தம் வலைப்பதிவும் பரவலான கவனம் பெறத் தொடங்கியிருந்தது. அதன் பிறகு வெளியான ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசால் தோசை 38 ரூபாய்’ கட்டுரைத் தொகுப்பும் பிற புத்தகங்களைக் காட்டிலும் அதிகப்படியான கவனத்தை பெற்றன என்று சொல்ல முடியும்.

2013 ஆம் ஆண்டுக்கான சுஜாதா இணைய விருது நிசப்தம் தளத்திற்குக் கிடைத்தது. 

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது Prelude solutions என்ற நிறுவனத்தில் கொஞ்ச நாட்களுக்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது மூன்றாயிரத்து அறுநூறு ரூபாய் சம்பளம் என்பது மிகக் குறைவானது. விட்டுவிட்டு ஹைதராபாத்தில் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்திலேயே நான்கு ஆண்டுகளுக்கான பிணை கோரினார்கள். குறைவான சம்பளம்தான். ஆனால் வேறு வழியில்லை. கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன்.  அதே சமயத்தில் மாலை நேரக் கணினி பயிற்சி நிறுவனத்தில் ஒரு படிப்பை முடித்த போது சியர்ரா அட்லாண்டிக் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்திலிருந்து சொல்லாமல் ஓடி வந்துவிட்டேன். வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் பிறவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்ட தருணம் அது. சியர்ரா அட்லாண்டிக்கிலிருந்து சம்பளம் ஒழுங்காக வரத் துவங்கியது. அங்குதான் பல நாடுகளுக்கும் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசியா, பிரான்ஸ், ஹாங்காங், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணிக்கத் தொடங்கியது நல்ல அனுபவமாக இருந்தது.

டெல் நிறுவனத்தில் செய்ய வேண்டிய பணி ஒன்றுக்காக சியர்ரா அட்லாண்டிக் அனுப்பி வைத்தது. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தங்களது நிறுவனத்திலேயே பணிக்குச் சேரச் சொல்லிக் கேட்டார்கள். ஒத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு அந்நிறுவனம்தான் தாங்கிப் பிடித்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து பிறிதொரு அமெரிக்க நிறுவனத்திற்காக பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன்.

இடையில் 2008 ஆம் ஆண்டு கிருஷ்ணவேணியைத் திருமணம் செய்து வைத்தார்கள். அடுத்த வருடம் மகிநந்தன் பிறந்தான். எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான குடும்பச் சூழல் அமைந்தது. அதற்கு காரணமிருக்கிறது. வேணியின் தங்கையை எனது தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். நான்கு பேருக்குமென பெங்களூரில் வீடு கட்டிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்கள். அப்பா வாசுதேவன் மின்சாரவாரியத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா சுப்புலட்சுமி கிராம நிர்வாக அலுவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தம்பியின் குழந்தை யுவநந்தனுடன் சேர்த்து வீட்டில் எட்டுப் பேர். வரவு செலவு, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுதல் என்ற எந்தப் பொறுப்பும் எனக்கு இல்லை. விட்டுவிட்டார்கள். இப்படி குடும்பப் பொறுப்புமில்லாமல் இந்த வயதில் வாழ்க்கை வாய்ப்பது வரம் என்று புரிந்து கொண்ட போதுதான் நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கும் எண்ணம் உதித்தது.

இதுவரையிலும் யோசித்துப் பார்த்தால் நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பல லட்ச ரூபாய்கள் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. பல பயனாளிகளுக்கு உதவ முடிந்திருக்கிறது. எழுத்து வழியாகச் செய்ய முடிந்த முக்கியமான காரியம் இது என்று நினைத்துக் கொள்கிறேன்.

சென்னை, கடலூரில் வெள்ள நிவாரணத்துக்கென கிட்டத்தட்ட அறுபது லட்ச ரூபாய் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வந்திருக்கிறது.

மூன்றாம் நதி என்ற நாவலும் ஃபாரின் சிடி என்ற உலகத் திரைப்படங்கள் குறித்த புத்தகமும் சமீபத்தில் வெளியானவை.

2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

Feb 7, 2005