Nov 21, 2014

ஆழம் தெரியாமல் காலை...

நண்பர் வீடு வாங்குகிறார். அபார்ட்மெண்ட்டில் ஒரு ஃப்ளாட். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய் ஆகிறது. மனைவியின் நகையை விற்று இருபத்தைந்து லட்சம் தேற்றிவிட்டார். இன்னுமொரு இருபத்தைந்து லட்சத்துக்கு வங்கிக் கடன் தான். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் பில்டர்கள் ஏமாற்றிவிடக் கூடும் என்பதால் ‘அந்த அபார்ட்மெண்ட்டில் யாராவது ஸ்டேட் பேங்க் இல்லைன்னா ஹெச்.டி.எஃப்.சியில் கடன் வாங்கியிருக்கிறார்களா என்று பாருங்கள்...வாங்கியிருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அட்வான்ஸ் கட்டிவிடுங்கள்’ என்பார்கள். அந்த இரண்டு வங்கிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு சீக்கிரம் கடன் தந்துவிட மாட்டார்கள். துருவி எடுத்து விடுவார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாகவும், மாநகரட்சியின் அனுமதிப்படி துல்லியமாகவும் கட்டியிருந்தால்தான் கடன் தருவார்கள். அதனால் ஏற்கனவே யாராவது கடன் வாங்கியிருந்தால் அந்த அபார்ட்மெண்ட்டில் பிரச்சினை எதுவும் இருக்காது என்று அர்த்தம். துணிந்து வாங்கலாம்.

நாங்கள் வீடு கட்டும் போது ஸ்டேட் வங்கியில் இருபத்து நான்கே கால் லட்சம் வாங்குவதற்குள் எவ்வளவு திணறினோம் என்று ஞாபமிருக்கிறது. ஆயிரத்தெட்டு கேள்விகள், நூற்றியெட்டு விசாரணைகள் என்று பிளிறினார்கள். அப்படியே கடன் தருவதாக ஒத்துக் கொண்டாலும் கட்டிட வேலை நடக்க நடக்கத்தான் பணத்தை பட்டுவாடா செய்வார்கள். நமக்கே தெரியாமல் யாரோ ஒரு மனிதர் வந்து எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்று பார்த்துச் செல்வார். அவர் பச்சைக் கொடி காட்டினால்தான் அடுத்த தொகை கைக்கு வரும். அதே சமயத்தில் வேறு சில வங்கிகளில் கடன் வாங்கியிருந்தவர்களுக்கு இந்த பிரச்சினையெல்லாம் இல்லை. ‘இன்னும் வாங்கிக்குங்க சார்’ என்று கேட்டுக் கொடுத்த வங்கிகளையெல்லாம் தெரியும்.

இப்பொழுது எதற்கு இந்த ஞாபகம்? ஒன்றுமில்லை. அதானிக்கு கிட்டத்தட்ட ஆறாயிரத்து இருநூறு கோடியை வழங்குவதாக அதே ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது. 

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அப்பா பெரிய பிஸினஸ் புள்ளி எல்லாம் இல்லை. சாதாரணக் குடும்பம். அதானியின் கதையைப் படித்தால் அண்ணாமலை ரஜினி தொடையைத் தட்டி பணக்காரன் ஆனது போல இருக்கிறது. பதினெட்டு வயதில் பம்பாய்க்கு சில நூறு ரூபாய்களோடு வேலைக்குச் சென்றிருக்கிறார். வைரத்தை தரம் பிரிக்கும் வேலை. ஒரே வருடத்தில் தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாகத் தொழில் ஆரம்பித்திருக்கிறார். ஒரே வருடம்தான். இருபது வயதில் பல லட்ச ரூபாய்களை கொழித்துவிட்டார். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அந்தக் கதையை வினவு தோழர்கள் விவரித்தால்தான் சரியாக வரும்.

தனது இருபத்தாறு வயதில் அதானி குழுமத்தை தொடங்கினார். அதன் பிறகு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. சாம்ராஜ்யம்தான். முந்தாநாள் ஆஸ்திரேலியாவில் நரேந்திர மோடியுடன் கையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இன்னமும் வளர்ந்து கொண்டேயிருக்கிறார். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபோர்ன்விட்டாவெல்லாம் மிக்ஸ் அடித்து குடித்த வளர்ச்சி.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் அமைக்கிறாராம். Carmichael Mining Project. அதற்காகத்தான் அதானிக்கு ஒரு பில்லியன் டாலரைத் தருவதாக ஸ்டேட் வங்கி உறுதியளித்திருக்கிறது. நானும் நீங்களும்தான் பத்தாயிரம் ரூபாயை வாங்கிச் சேர்ப்பதற்குள் கண்ணாமுழியைத் திருகிக் கொண்டு திரிய வேண்டும். ஆனால் அதானி அல்லவா? அதனால் ஒரு பில்லியன் டாலர். இப்படிக் கொடுத்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? எதிர்கட்சிகள் கதறுவார்கள். அதற்கும் ஸ்டேட் வங்கியிடம் நாசூக்கான பதில் இருக்கிறது. ‘இது சும்மா புரிந்துணர்வு ஒப்பந்தம்தான்..எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டுத்தான் தருவோம்’ என்று சொல்கிறார்கள். இதெல்லாம் உடான்ஸ் பதில். நிச்சயமாகத் தந்துவிடுவார்கள்.

அதானிக்கு கடன் தர முடியாது என்று ஏற்கனவே சில வங்கிகள் மறுத்திருக்கின்றன. ‘இந்தத் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்’ என்று காரணம் சொன்னார்களாம். அதே கேள்வியை ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ச்சே..ச்சே குயின்ஸ்லேண்ட் மாகாண அரசிடம் விசாரித்துவிட்டோம். அதெல்லாம் ஒன்றுமில்லையாம்’ என்று கேள்வி கேட்டவருக்கு பெரிய பன்னாக கொடுத்திருக்கிறார். அவனவனுக்கு அவனவன் பிரச்சினை. கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரிய அடி வாங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். எவனாவது வந்து ‘நான் ஒரு சுரங்கம் அமைக்கிறேன்’ என்று கேட்கும் போது அரசாங்கத்திற்கு நாக்கில் எச்சில் வடியத்தானே செய்யும்? தொடங்கச் சொல்லி அனுமதி கொடுத்துவிட்டார்கள். 

அதானி குழுமத்துக்கு ஏற்கனவே கிட்டத்தட்ட எழுபதாயிரம் கோடி கடன் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. எனவே பழைய கடன் நிலுவை மற்றும் முன் பணமாக ஐந்தாயிரம் கோடியை அதானி குழுமம் ஸ்டேட் வங்கிக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் மிச்சமிருக்கும் ஆயிரத்து இருநூறு கோடிதான் புதுக்கணக்கு என்று என்ன என்னவோ சொல்கிறார்கள். பெரிய இடத்து விவகாரம்.

ஒரு பில்லியன் டாலரை ஸ்டேட் வங்கி கொடுத்தாலும் இன்னுமொரு ஆறரை பில்லியன் டாலரை வேறு பல இடங்களிலிருந்து பெறுவதற்கான முயற்சிகளில் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ஏழரை பில்லியன் டாலர்கள். எங்கே போவது? இல்லாதவனுக்குத்தான் அந்தப் பிரச்சினையெல்லாம். அதானிக்கு அதெல்லாம் ஜூஜூபி மேட்டர். இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டருக்கு ரயில்வே ட்ராக் அமைக்கும் வேலை இருக்கிறது. அதற்கு மட்டுமே கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். அந்த வேலையை கொரிய நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக இன்னொரு கொரிய கடன்காரனிடம் பல்லாயிரம் கோடியை வாங்கப் போகிறார்களாம். வேறு சில அமெரிக்க வங்கிகள் உதவும் போலிருக்கிறது. குயின்ஸ்லேண்ட் அரசாங்கமும் தன் பங்காக ஒரு தொகையைப் போடுகிறது. சமாளித்துவிடுவோம் என்று படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே பணத்தை புரட்டிவிட்டாலும் கூட இது ஒன்றும் சாதாரண திட்டமில்லை என்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாயிலான ப்ராஜக்ட். நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆழம் தெரியாமல் அதானி காலை விடுகிறார் என்று சில கட்டுரைகளில் வாசித்தேன். விட்டால் என்ன? தூக்கிவிடத்தான் பெரிய கையாக இருக்கிறதே! தாமரையைச் சுமந்து கொண்டிருக்கும் கை- சாட்சாத் அந்த மகாலட்சுமியின் கையைச் சொல்கிறேன். நமக்கெதுக்கு அரசியல் எல்லாம்?

ஜஸ்டின் பீய்பர் தெரியுமா?

‘ஜஸ்டின் பீய்பர் மாதிரியான ஆட்களையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க’ என்று அந்தப் பெண்மணி எகிறும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனேன்.  நடுராத்திரியில் நீ ஏன் சுடுகாட்டுக்கு போகவில்லை என்று கேட்பது போல இருந்தது. யார் அந்த ஜஸ்டின் பீய்பர்? அந்தப் பெண்மணி இப்படித்தான். அவ்வப்பொழுது யாராவது ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பார். ‘நகரத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கு நாம் அள்ளித் திணிக்க வேண்டும்’ என்கிற கட்சிக்காரர். 

‘சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இருந்ததாலதான் அவரை கவனிச்சாங்க...தோனி கூட ராஞ்சியில் வளர்ந்தவர். அதுவும் சிட்டிதான்....டிராவிட்? அவரும் இங்க பெங்களூர்தானே?’ இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். நமக்குத்தான் பதற்றம் தொற்றிக் கொள்ளும். 

‘லியாண்டர் பயஸ் கல்கத்தா. கங்குலியும்தான்’ ‘விஸ்வநாதன் ஆனந்த் சிட்டியில் வளர்ந்தவர்தானே?’ இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார். கொஞ்சம் கிறுகிறுத்து போய்விடும்.

‘என்னது உங்க பையனுக்கு ஆறு வயசு ஆகப் போகுதுங்குறீங்க...பாட்டுக் க்ளாஸில் சேர்க்கலையா?’ என்று குண்டைப் போட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

இவனிடம் ‘பாட்டு க்ளாஸூக்கு போறயா தங்கம்?’ என்று கேட்டால் ‘பாட்டெல்லாம் வேண்டாம்’ என்கிறான். இங்கு கர்நாடக சங்கீதம்தான் சொல்லித் தருகிறார்கள். அவனுக்கு விருப்பமிருந்தால் போகட்டும். இல்லையென்றால் அதை பழக்கியே தீர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. பாத்ரூமில் கூட பாடத் தெரியாத எனக்கு மகனாக பிறந்திருக்கிறான். பிறகு எப்படி பாட்டு பாட விரும்புவான்?

‘ஜூனியர் சிங்கர் பார்க்குறீங்களா?’ அந்தப் பெண்மணியின் கேள்விதான் இது.

‘இல்லைங்க’

‘வேஸ்டுங்க நீங்க....’ பார்த்த மூன்றாவது நாளில் இந்தச் சான்றிதழை வாங்கிக் கொண்டேன்.

‘இனிமேலாச்சும் பாருங்க..இத்தினியூண்டு பொடிசுக எல்லாம் என்ன போடு போடுறாங்க’

அவர் கோயமுத்தூர்க்காரர். பக்கத்தில் இருக்கும் டென்னிஸ் பயிற்சி வகுப்புக்கு மகனைக் கொண்டு வந்து விடும் போது அறிமுகம். பையன் டென்னிஸ் பழகுகிறான். கராத்தேவுக்குச் செல்கிறான். சனி, ஞாயிறுகளில் காலை நேரத்தில் கிதார் வகுப்பு. மாலையில் பாட்டு க்ளாஸ். ஹிந்தி, ஸ்கேட்டிங் பயிற்சிகள் எல்லாம் தனி. 

‘ஆறு வயது பையனுக்கு இது ஓவர் டோஸ் இல்லீங்களா?’ என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லைங்க...எதையெல்லாம் அறிமுகப்படுத்தணுமோ அதை நாம செஞ்சுடணும்...அவனுக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கட்டும்’- இந்த பதில் சரியானதாகத்தான் தெரிகிறது. நகரக் குழந்தைகள் வீட்டில் இருந்து எதைச் செய்கிறார்கள்? கார்ட்டூன் சானல்கள்தான் கதி. 

கிராமக் குழந்தைகளும் கூட இப்பொழுது அப்படித்தான் ஆகிவிட்டார்கள். மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் உரிமை என்பார்கள். உரிமையாவது வெங்காயமாவது. எந்த கிராமத்தில் மண்ணில் விளையாட அனுமதிக்கிறார்கள். மூன்றாம் வகுப்பிலேயே தடி தடியாக கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள். ‘எப்போ பாரு செல்போனை வெச்சு விளையாடிட்டே இருக்குது கண்ணு’ என்று புகார் வாசிக்கிறார்கள். தெல்லு, கில்லி, கபடி, ஐஸ் நெம்பர் போன்ற விளையாட்டுகளையெல்லாம் எந்தக் குழந்தையும் விளையாடுவதாகத் தெரியவில்லை.  போதாகுறைக்கு ‘கையில் மில்லியன் கிருமிகள் இருக்கு’என்று சோப் கம்பெனிக்காரன் விளம்பரம் செய்கிறான். ‘வீட்டிற்குள்ளேயே விளையாடுங்கள்’ என்று அம்மாக்கள் சொல்லிவிடுகிறார்கள். குழந்தைகளும் என்னதான் செய்வார்கள்? சோட்டா பீமும் கால்யாவும்தான் ஒரே ஆறுதல். 

இந்த கோயமுத்தூர் அம்மிணியின் குழந்தைக்கு அந்த பிரச்சினையெல்லாம் இல்லை. வீட்டிலேயே இருப்பதில்லை. பிறகு எப்படி டிவி பார்ப்பது?

குழந்தைகளுக்கு exposure கொடுப்பதுதான் அவசியம். இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கின்றன என்ற அடையாளத்தைக் காட்டிவிட்டால் போதும். பிறகு அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரும் போதுதான் ஸ்நூக்கர் என்கிற விளையாட்டின் பெயரையே கேள்விப்பட்டிருப்போம். பங்கஜ் அத்வானி மாதிரியான ஆட்கள் பத்து வயதிலேயே நுணுக்கங்களைக் கற்றிருப்பார்கள். அந்த வித்தியாசம்தான் சாம்பியன்களை உருவாக்குகிறது.

கிராமக் குழந்தைகளுக்கே கூட நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும். நாம் செய்வதில்லை.

‘இதெல்லாம் சரிதான். படிப்பில் கவனம் சிதறிடாதா?’ என்ற கேள்வியைக் கேட்ட போதுதான் ஜஸ்டின் பீய்பர் பற்றி பேச்சை எடுத்தார். எனக்குத் தெரியாது. பிறகுதான் கூகிளில் தேடினேன். பீய்பர் தொண்ணூற்று நான்காம் ஆண்டுதான் பிறந்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் திருமணமே செய்து கொள்ளவில்லை. அம்மாதான் வளர்த்திருக்கிறார். வறுமையான சூழல். மகன் பாடுவதை வீடியோவாக எடுத்து சிலவற்றை யூடியூப்பில் போட்டிருக்கிறார். அதை யதேச்சையாக பார்த்த பீய்பரின் தற்போதைய மேலாளர் பீய்பரை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கொடி நட்ட வைத்துவிட்டார். முதல் ஆல்பம் வெளியே வந்த போது பீய்பரின் வயது பதினைந்து. 

இன்றைக்கும் யூடியூப்பில் அவரது ‘Baby’ என்ற பாடல்தான் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோக்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ஹிட்ஸ். பீய்பரை படிப்பா கை தூக்கிவிட்டது?  குழந்தைகளுக்கு படிப்பு அவசியம்தான். ஆனால் வெறும் படிப்பை மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. உலகின் வண்ணங்களையும் வாய்ப்புகளையும் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அவர்கள் தங்களின் பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்.